`டிக்டாக் காதல்; திடீர் திருமணம்; கருக்கலைப்பு!’ -சாதியைக் காரணம் காட்டி விரட்டப்பட்ட சிறுமி

டிக்டாக் மூலம் அறிமுகமான சிறுமியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளைஞர், சிறுமி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விரட்டியடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்குத் தாய் கிடையாது. தந்தையின் அரவணைப்பிலிருந்த அந்தச் சிறுமி, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் `டிக்டாக்’ செயலி மூலமாக 19 வயதுடைய சாந்தகுமார் என்ற இளைஞருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. இவர், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் செல் நம்பரைப் பகிர்ந்துகொண்டு பேசத் தொடங்கிய நிலையில், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
இந்தநிலையில், நான்கு மாதங்களுக்கு முன்னர் தன் காதலனைத் தேடி சிறுமி வாலாஜாபேட்டைக்கு வந்திருக்கிறார். நண்பர்கள் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். சாந்தகுமாரின் குடும்பத்தினரும் சிறுமியை மருமகளாக ஏற்றுக்கொண்டனர். தனியாக வீடு எடுத்துக்கொடுத்து இருவரையும் தங்கவைத்திருக்கிறார்கள். சாந்தகுமாருடன் சேர்ந்து வாழத் தொடங்கிய அந்தச் சிறுமி கர்ப்பமடைந்திருக்கிறார்.
இந்தச் சூழலில், சிறுமி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று காதல் கணவனின் வீட்டாருக்குத் தெரியவந்தது. இதனால், அவர்மீது வெறுப்படைந்த கணவன் குடும்பத்தார், சிறுமியை மிரட்டி ஆற்காட்டை அடுத்திருக்கும் தாமரைப்பாக்கத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருக்கும் போலி மருத்துவர் பாஷா என்பவரிடம் கருக்கலைப்புச் செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், தாலியைப் பறித்து சிறுமியை விரட்டியடித்ததாகவும் சொல்கிறார்கள்.

இதுகுறித்த புகாரின்பேரில், சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு வேலூரிலுள்ள காப்பகத்தில் தங்கவைத்திருக்கிறார்கள். பின்னர், திருமண வயதை எட்டாத அவரை ஏமாற்றித் திருமணம் செய்த காதலன் குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் புகாரளித்தனர். இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்து ஏமாற்றிய காதலன் சாந்தகுமார், அவரின் தாய், சித்தி, மாமா மற்றும் கருக்கலைப்புச் செய்த போலி மருத்துவர் பாஷா ஆகியோரை போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிந்து போலீஸார் கைதுசெய்தனர்.