உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரிலுள்ள நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்; இறந்தவர் பீகாரில் வசிக்கும் 25 வயதான தில்ஷாத் ஹுசைன் என அடையாளம் காணப்பட்டது.
அவர் தனது வழக்கறிஞரை சந்திப்பதற்காக நீதிமன்ற வாயிலின் அருகே சென்றபோது, ஏற்கெனவே அங்கிருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பகவத் நிஷாத், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தில்ஷாத்தின் தலையில் சுட்டுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த 2020-ம் ஆண்டு, தில்ஷாத் ஹுசைன், பகவத் நிஷாத்தின் வீட்டின் அருகே சைக்கிள் கடை நடத்திவந்தார். ``வீட்டில் ஆளில்லாத ஒரு நாளில், என் 16 வயது மைனர் மகளை அழைத்துக்கொண்டு தில்ஷாத் ஓடிவிட்டார்" என்று பகவத் நிஷாத் போலீஸில் புகார் செய்தார். பிப்ரவரி 17 அன்று, தில்ஷாத் மீது வழக்குப் பதிவு செய்தார் பகவத். இதைத் தொடர்ந்து மார்ச் 12, 2021 அன்று, ஹைதராபாத்தில் தில்ஷாத்தை போலீசார் கைது செய்து, சிறுமியை மீட்டனர்.
சிறுமியின் வாக்குமூலத்தில், அவரை தில்ஷாத் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனடிப்படையில் தில்ஷாத் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தில்ஷாத் மீதான போக்சோ வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்ததையடுத்து, இரு தரப்பினரும் நேற்று விசாரணைக்கு வந்திருந்தனர். அப்போது சிறுமியின் தந்தை தில்ஷாத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவர். அவரிடமிருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தில்ஷாத்தின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிறுமியின் தந்தை போலீஸாரால் காவலில் வைக்கப்பட்டார்.