Published:Updated:

ஆலையில் அரிசி கடத்தல்; காலை முதலே வாக்குவாதம்.. -திருச்சியைப் பதறவைக்கும் அடுத்தடுத்த கொலைகள்!

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும்கூட, திருச்சியில் கொலைகள் குறையவில்லை. அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், போலீஸாரின் நெருக்கடிகளுக்குப் பயந்து பலரும் வீட்டை விட்டு வெளியே வரத் தயக்கத்தில் உள்ளனர். ஆனால் திருச்சியில் மட்டும் அடுத்தடுத்து கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.

கடந்த 28-ம் தேதி காலை 8 மணியளவில் திருச்சி ஶ்ரீரங்கம் தேவி தியேட்டர் ரயில்வே மேம்பாலம் அருகே, தனது 3வயது மகளுடன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தார் ரவுடி தலைவெட்டி சந்துரு.

 ரவுடி சந்துரு
ரவுடி சந்துரு

அவரைப் பின்தொடர்ந்து காரிலிருந்து இறங்கிய 3 பேர் கொண்ட கும்பல் தலைவெட்டி சந்துருவை வழிமறித்து வெட்டிச் சாய்த்ததுடன், தலையைத் துண்டித்தது.

அடுத்து, கடந்த 7ம் தேதி மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட திருச்சி குழுமணியை அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரத்தின் ரத்தம் உறைவதற்குள் இன்று மாலை திருச்சி தாராநல்லூர் பகுதியில் அடுத்த கொலை நடந்துள்ளது.

திருச்சி தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் காவலர் பார்வை எனும் மாத இதழில் நிருபராகப் பணியாற்றி வந்தார். இன்று மாலை, அவரது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவருடன், மர்மநபர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திடீரென அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர்.

`ஊரடங்கிலும் குறையாத குற்றச் சம்பவங்கள்!' - 4 இன்ஸ்பெக்டர்களை மாற்றிய திருச்சி கமிஷனர்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்

கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உயிருக்குப்போராடிய மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.

தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீஸார், மணிகண்டன் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் நடந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மணிகண்டனைக் கொலை செய்தது, அதே பகுதியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் மற்றும் அஜீத் என்பதும், அவர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் பணியாற்றும் ஆலையில் அரிசி கடத்தல் நடைபெறுவதாகவும், அதுதொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து வைத்துள்ளதாகக் கூறி மணிகண்டன் பணம் கேட்டு பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் காலை முதலே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மாலை ஆலையில் பணியாற்றும் இருவர் சேர்ந்து மணிகண்டனைத் தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.

`ஊரடங்கிலும் பழிக்குப் பழி!’- திருச்சி ரவுடி `தலைவெட்டி' சந்துருவுக்கு நேர்ந்த கொடூரம்

மேலும் சினிமா கனவுகளுடன் வலம்வந்த மணிகண்டன், சில குறும்படங்களில் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து இவர், நிருபர் எனத் தன்னைக்காட்டிக்கொண்டு, சில போலீஸாருக்கு நெருக்கமாக வலம் வந்ததாகக் கூறப்படுகிறது. அரிசிக் கடத்தல் விவகாரத்தில் அரிசி ஆலை உரிமையாளரை மிரட்டியுள்ளார் என்றும், இதுமட்டுமல்லாமல், நடந்த கொலைக்குப் பெண் விவகாரமும் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொலையாளிகள் இருவரும் போலீஸில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டனின் மரணம் குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்துவருவதால் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், திருச்சி தாராநல்லூர் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு