Election bannerElection banner
Published:Updated:

விழுப்புரம்: துப்பாக்கி முனையில் அடுத்தடுத்து கொள்ளை - தீரன் பட பாணியில் மர்ம கும்பல் துணிகரம்

Robbery
Robbery ( Representational image )

விழுப்புரம் மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள், துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 19.04.2021 அன்று அதிகாலை 3:00 மணி அளவில், பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டிவனம் அருகே மரக்காணம் சாலை அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன்(53). சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3:00 மணி அளவில், கைத்துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பியுடன் 25 வயது மதிக்கத்தக்க மூன்று பேர், பிலவேந்திரனின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த பிலவேந்திரனை தாக்கிய முகமூடி கொள்ளை கும்பல், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவரது மகன் அருண்குமார் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். அவர்கள் தப்பித்தது சென்றது, பதிவெண் இல்லாத மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 கார்.

உடைக்கப்பட்ட பூட்டு.
உடைக்கப்பட்ட பூட்டு.

அதை அடுத்து, திண்டிவனம் – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள மூன்று அடுத்தடுத்த ஊர்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது அந்த கொள்ளை கும்பல். ஜக்காம்பேட்டையில் குமார் மற்றும் வரதராஜன் ஆகியோரது வீட்டுக்குள் புகுந்த இந்த கொள்ளை கும்பல், இருசக்கர வாகனம் மற்றும் LED TV ஒன்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.'

அதைத் தொடர்ந்து அவனம்பட்டு எனுமிடத்தில், காத்தவராயன் என்பவரது வீட்டில் பயங்கரமான ஆயுதங்களை காட்டி கதவைத் திறக்கும்படி மிரட்டியிருக்கின்றனர். அப்போது வீட்டு உரிமையாளர்கள் கூச்சலிடவே, அங்கிருந்து தப்பிய கும்பல் கன்னிகாபுரம் பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறது. சத்தம் கேட்டு விழித்து பார்த்த அந்த குடும்பத்தினரும் கூச்சலிட்டுள்ளனர். அவர்கள அக்கம்பக்கத்தினர் பிடிக்க முயற்சி செய்த போது காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணையை துவங்கினர்.

அதிகாலையில் நடந்த இந்த அச்சுறுத்தும் சம்பவங்கள் குறித்து திண்டிவனம் மற்றும் மயிலம் காவல் நிலையங்களில் விசாரித்தோம்.

``இந்த கொள்ளை சம்பவத்திற்கு அவர்கள் பயன்படுத்திய கார் திருடப்பட்டது. அந்த காரில் பதிவெண் பதாகையை அகற்றிவிட்டு பயன்படுத்தியிருக்கின்றனர். கடைசியாக கன்னிகாபுரம் பகுதியில் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். உடன் LED TV-யையும் விட்டுச் சென்றுள்ளனர். அந்த கார் வட மாநிலத்தை சேர்ந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வடமாநில இளைஞர்கள் போல இருந்ததாக கூறுகின்றனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

திண்டிவனம் பகுதியில் கொள்ளைக்கு பயன்படுத்திய கார்.
திண்டிவனம் பகுதியில் கொள்ளைக்கு பயன்படுத்திய கார்.

தீரன் அதிகாரம் படத்தில் வருவது போல, அதிகாலை வேளையில் கொடூர ஆயுதங்களோடு, கொள்ளை முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு