Published:Updated:

பதறவைக்கும் பழிக்குப் பழி.. பட்டப்பகலில் திருச்சியில் கொல்லப்பட்ட ரவுடி!

படுகொலை செய்யப்பட்ட புகழேந்தி
படுகொலை செய்யப்பட்ட புகழேந்தி

திருச்சி உறையூரில் காவல்நிலையத்துக்குச் சென்ற ரவுடி ஒருவர், பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற வைக்கிறது.

உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி. 28 வயதான இவர், கடந்த செப்டம்பர் மாதம் அதே பகுதியில் நடைபெற்ற ``ஜிம்” மணிகண்டன் என்பவர் கொலை வழக்கில் சிக்கி உறையூர் காவல்நிலையத்திற்குக் கையொப்பமிட்டு வருகிறார். அந்தவகையில் இன்று காலை, அப்பகுதியில் உள்ள சின்னசெட்டி தெரு வழியாக கையொப்பமிட உறையூர் காவல்நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவரைப் பின் தொடர்ந்த 5-க்கும் மேற்பட்ட நபர்கள் பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டியுள்ளனர்.

புகழேந்தி படுகொலை செய்யப்பட்ட இடம்
புகழேந்தி படுகொலை செய்யப்பட்ட இடம்

இதனால், புகழேந்தியின் தலை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் ஆழமாகக் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். புகழேந்தியைக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவலறிந்த உறையூர் போலீஸார், கொலை செய்யப்பட்ட புகழேந்தியின் பிரேதத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நடந்த கொலை பழிக்குப் பழி எனவும், கொலையில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் வட்டாரம் கூறுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, ``அதே பகுதியைச் சேர்ந்த ஜிம் மணிகண்டன் என்பவர், அப்பகுதியில் சின்னச் சின்ன பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, `சடை' மணி என்பவருக்கும், `ஜிம்' மணிகண்டன் வீட்டின் அருகில் குடியிருக்கும் செந்தில்குமாருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையில், `ஜிம்' மணிகண்டன், `சடை' மணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன் செந்தில்குமாரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

“ஜிம்” மணிகண்டன்
“ஜிம்” மணிகண்டன்

இதில், ஜிம் மணிகண்டனுக்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் மணிகண்டன் செந்தில்குமாரை தாக்கியதாகவும், அதையடுத்து செந்தில்குமாருக்கு ஆதரவாக அவரது மைத்துனர் புகழேந்தி களமிறங்க, இருவரும் சேர்ந்து `ஜிம்' மணிகண்டனைக் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர்.

இந்த வழக்கில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட புகழேந்தி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து உறையூர் காவல்நிலையத்தில் கையொப்பம் போட்டுவந்த நிலையில், அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” என்றார்கள்.

புகழேந்தியின் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். பழிக்குப் பழி கொலைச் சம்பவம் திருச்சி மாநகரப் பகுதிகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு