ஆகஸ்ட் 28, இரவு 9:05 மணி. திருப்போரூர் காவல் நிலைய போன் அலறியது. போனை எடுத்தார் ஏட்டய்யா. “சார், பேரூராட்சி ஆபீஸ் பக்கத்துல ரெண்டு பேர் ரத்த வெள்ளத்துல கிடக்குறாங்க. ‘டமார்’னு சத்தம் வேற கேட்டுச்சு. குண்டு வெடிச்சிருக்கும்போல...” மறுமுனையில் குரல் அலறியது. “இன்னைக்கு ராத்திரி நிம்மதி போச்சு” முணுமுணுப்புடன் போனை வைத்தார் ஏட்டய்யா. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரோந்து போலீஸார் சம்பவ இடத்தில் ஆஜராகினர். உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் மயங்கிக்கிடந்த இரண்டு இளைஞர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் செங்கல்பட்டு ராமபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ், அசோக் என்பது தெரியவந்தது. குற்றப் பின்னணியுடைய இருவரும் மது விருந்தை முடித்துவிட்டு பைக்கில் வந்தபோது, அவர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியிருக்கிறது.

சமீபத்தில், தூத்துக்குடி மாவட்ட காவலர் சுப்பிரமணியன்மீது வெடிகுண்டு வீசிக் கொன்ற ரெளடி துரைமுத்து, வல்லநாடு மலைப்பகுதியில் வெடிகுண்டு வீசி பயிற்சிபெறும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டாக்கத்தி, கைத்துப்பாக்கியுடன் வலம்வந்த ரெளடிகள், இப்போது வெடிகுண்டுகளைக் கையாளத் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் தகிக்கிறது வெடிகுண்டு கலாசாரம். கொலைக்கான விலை ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் நீள்கிறது. இப்படி பல லட்சங்கள் பேரம் பேசப்பட்டாலும் இறுதியில் களத்தில் இயங்கும் கடைநிலைக் கொலையாளிக்குச் செல்வது சராசரியாக ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ரூபாய்தான்! கூலிக்கு கொலை செய்யும் கொலையாளிகளுக்குத் தேவை, கொலை செய்யப்பட வேண்டிய நபரின் போட்டோ மற்றும் சொற்ப தொகையே; அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் கவலை இல்லை; சொருகிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்... என்கிற தகவலை கூறினார் காவல்துறை சீனியர் அதிகாரி ஒருவர். மனித உயிர்கள் இவ்வளவு மலிவாக போய்விட்டதா என்று ஏற்பட்ட அதிர்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை! தமிழகத்தைக் கலக்கும் அந்த ரெளடிகள் யார், வெடிகுண்டுகள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன, எப்படி சப்ளையாகின்றன?

நேர்மையான காவல்துறை அதிகாரிகள், சிறைத்துறை வட்டாரங்கள், ரெளடிகள் என அனைத்துத் தரப்பிலும் புகுந்து வலம்வந்தோம். கிடைத்த தகவல்கள் அத்தனையும் ‘ரத்த சரித்திரம்.’

காக்கிகளை மிரளவைக்கும் ‘காய்’

நாட்டு வெடிகுண்டுகளை சென்னை ரெளடிகள் பாஷையில் ‘காய்’ என்கிறார்கள். தென் மாவட்டங்களிலோ ‘உருண்டை.’ ஒரு காய், ஐந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. அளவைப் பொறுத்தும், வீரியத்தைப் பொறுத்தும் அமைகிறது காயின் விலை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்ட ரெளடிகள் தொட்டதற்கெல்லாம் இப்போது காய்களை உருட்ட ஆரம்பித்திருப்பதால் காக்கிகள் மிரள்கிறார்கள்.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், சட்ராஸ், பெருமாட்டுநல்லூர், கூடுவாஞ்சேரி, புதுச்சேரியில் முதலியார்பேட்டை, வாணரப்பேட்டை, பெரியார் நகர், காலாப்பட்டு உள்ளிட்டவையே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் முக்கியமான இடங்கள். தேவைக்கேற்ப தயாராகின்றன புதுப்புது ரகங்கள். தயாரிக்கப்படும் காய்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சூட்சுமம் உண்டு.

ஆளை லேசாகச் சிராய்த்துவிட்டு, பயத்திலேயே பத்து நாள்களுக்குப் படுக்கவைக்க வேண்டுமா, அதற்கோர் உருட்டு உண்டு. கையோ, காலோ, முகமோ பாதி பங்கம் செய்யப்பட வேண்டுமா, அதற்கோர் உருட்டு உண்டு. மட்டையாக்கிச் சுடுகாட்டுக்கு அனுப்ப வேண்டுமா, அதற்கென இருக்கிறது தனி உருட்டு. கொடும் பகை தீர்க்க கைகால், முகமெல்லாம் அடையாளம் தெரியாமல் சின்னாபின்னமாக்கிச் சிதைக்க வேண்டுமா, அதற்கென்றே ஆக்ரோஷ உருட்டு ஒன்று உண்டு. இப்படிச் சூதுவாதுக்கு அப்பாற்பட்டவை இதன் சூட்சுமங்கள். பணம் ஒன்றே பிரதானம். இதன் பின்னணியில் அதிகாரப் போட்டிகளும் உண்டு!

வெடி மருந்து, கண்ணாடித்தூள், பால்ரஸ் மற்றும் ஆணிகளே ‘காய்’களுக்கான கச்சாப் பொருள்கள். பேப்பர், காட்டன் துணி, கயிறு, டேப், ஃபெவிக்கால் கொண்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்கிறார்கள். தயாரிப்பில் பல்வேறு ‘பகீர்’ தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. சமூகநலன் கருதி அவற்றை விரிவாக எழுதுவதைத் தவிர்க்கிறோம்.

மேலோட்டமாகச் சொல்ல வேண்டுமெனில், ‘காயை’ உருட்டுவதிலும், கச்சாப் பொருள்களைத் திணிப்பதிலும்தான் சூட்சுமங்கள் வேறுபடுகின்றன. ஆணியிலேயே பல ரகங்கள் உண்டு. இரும்பு ஆணி, எஃகு ஆணி, குடை ஆணி, கூரை ஆணி, இரட்டைத்தலை ஆணி, யூ ஆணி எனக் காயின் தேவைக்கேற்ப ஆணிகள் திணிக்கப்படுகின்றன. இவை தவிர, கண்ணாடி பாட்டில்களை இடித்தும் அரைத்தும் சேர்க்கிறார்கள். ஈர மணலில் ஊறவைத்த, துருப்பிடித்த ஆணிகளைச் சேர்ப்பதும், விஷ மருந்தில் ஊறவைத்த கண்ணாடித் துண்டுகளைச் சேர்ப்பதும் ஸ்பெஷல் அயிட்டங்கள்!

இப்படி என்னதான் வீரியமாகக் குண்டுகளைத் தயாரித்தாலும், எல்லாக் குண்டுகளும் ‘வெடி’குண்டுகளல்ல. வீச்சின் வேகமும், வீசப்படும் லாகவமுமே வெடிப்பைச் சாத்தியமாக்கும். அதற்கெல்லாம் தனிப்பயிற்சி உண்டு. பயிற்சி இல்லாமல் வீசினால் ஒன்று, வீசுபவரின் கை, கால் போகும். இல்லை, புஸ்வாணமாகும்!

நம்பர் ஒன் ‘சம்பவக்காரன்!’

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி ஓட்டேரி கார்த்திக். சென்னையைப் பொறுத்தவரை இவரின் டீம்தான் இன்று நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதில் ஸ்பெஷலிஸ்ட். ஆனால், சம்பவம் செய்வதில் தமிழகத்தைப் பொறுத்தவரை நம்பர் ஒன் ‘சம்பவ’ செந்தில்தான். நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு, அரிவாள் அல்லது துப்பாக்கியால் சம்பவம் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் ‘சம்பவ’ செந்தில். சென்னையில் சி.டி.மணி, காக்காதோப்பு பாலாஜி, படப்பை குணா, வியாசர்பாடி நாகேந்திரன், குன்றத்தூர் வைரம், எண்ணூர் தனசேகர், ஓட்டேரி கார்த்திக், அரும்பாக்கம் ராதா, நெற்குன்றம் சூர்யா ஆகியோரைவிட, தொழிலில் கைதேர்ந்தவர் ‘சம்பவ’ செந்தில். செந்திலின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம், தண்டபத்து கிராமம். மிகப்பெரிய செல்வந்தரான இவர், வெங்கடேச பண்ணையாரின் உறவினரும்கூட. ஒரு பிரபல ரெளடிக்கு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர், தற்காப்புக்காகக் கத்தியைத் தூக்கினார். இன்றுவரை கத்தி இவர் கையைவிட்டு இறங்க மறுக்கிறது!

கடந்த மார்ச் மாதம், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பிரபல ரெளடிகள் காக்காதோப்பு பாலாஜி, சி.டி.மணி ஆகியோர் சென்ற ஃபார்ச்சூனர் கார் மீது வெடிகுண்டுகளை வீசியது ‘சம்பவ’ செந்தில் டீம். இருவரும் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இதன் பிறகு தலைமறைவான செந்தில், அவ்வப்போது ஆந்திராவிலிருந்து சென்னைப் பக்கம் எட்டிப்பார்ப்பதாகத் தகவல். எந்நேரமும் இவர்மீதான பிடியை இறுக்கலாம் சென்னை பெருநகர போலீஸ்.

சிறைக்குள் திருவேங்கடம்; காத்திருக்கும் சி.டி.மணி!

‘செக்போஸ்ட்’ திருவேங்கடம். சென்னையின் பிரபல ரெளடி. பகையாளிகளும் அதிகம். திருவேங்கடம் கிளம்புவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாக, ஒரு கார் அவர் செல்லவிருக்கும் ரூட்டில் பயணித்துக் கண்காணிக்கும். அதன் பிறகு, ஒரு எஸ்கார்ட் கார் கிளம்பும். முதல் காரிலிருந்து ‘ரூட் க்ளியர்’ சிக்னல் வந்த பிறகே முன்பும் பின்பும் இரு எஸ்கார்ட் கார்களுடன் ‘ஆடி’ காரில் கிளம்புவார் திருவேங்கடம்.

சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட ஏரியாக்களில் ‘டபுள் டாக்குமென்ட்’ வேலையைச் செய்து கோடி கோடியாகச் சம்பாதித்த திருவேங்கடத்தை ஓவர்டேக் செய்தது சி.டி.மணி டீம். தொழில் போட்டியால் உயிருக்கு பயந்து சிங்கப்பூரில் தஞ்சமடைந்த திருவேங்கடம், தன் உறவினரின் திருமணத்துக்காக கொரோனா நேரத்தில் சென்னை வந்திருந்தார். உணர்ச்சி வசப்பட்ட திருவேங்கடத்தின் விசுவாசிகள் சிலர், ‘வேளச்சேரியின் அடையாளமே’ என விளித்து போஸ்டர் ஒட்டினார்கள். விழித்துக் கொண்ட காவல்துறை, திருமண மண்டபத்தில் வைத்தே திருவேங்கடத்தைத் தூக்கியது. இப்போது புழல் சிறையிலிருக்கும் திருவேங்கடத்தைப் பாதுகாக்க சிறைக்குள்ளேயே தனி டீம் செயல்படுகிறது. அவரை எப்படியாவது முடித்துக்கட்ட எதிர்தரப்பு ‘ஸ்கெட்ச்’ போடுகிறது. பதற்றத்திலிருக்கிறது சென்னை போலீஸ்.

இந்தக் கட்டுரை தயாராகும் கடைசி நிமிடத்தில்கூட (ஆகஸ்ட் 3), சென்னை மணலியில் வெடிகுண்டுகள் மற்றும் பட்டாக்கத்திகளுடன் ஆறு ரௌடிகளைக் கைதுசெய்திருக்கிறது சென்னை போலீஸ்.

‘மர்டர்’ மணிகண்டன்; ஸ்கெட்ச் போடும் எழிலரசி!

ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் ‘மர்டர்’ மணிகண்டனும், பா.ஜ.க-வின் மாநில வர்த்தக அணித் தலைவராக இருந்த சோழனும்தான் தற்போது ‘ஆக்டிவ் அட்ராசிட்டிகள்’ என்கிறது போலீஸ். இவர்கள் இருவரும் போடும் ஸ்கெட்ச்களில் சாலையில் ரத்தம் தெறிக்க உருள்கின்றன பலரது தலைகள். இன்னொரு பக்கம் தன் கணவரின் கொலைக்குப் பழிவாங்குவதற்காக ரெளடி வேடம் பூண்டிருக்கும் பெண் தாதா எழிலரசி எதிரிகளை மிரளவைக்கிறார். சமீபத்தில் இவர் சிறைக்குள்ளேயே ‘மர்டர்’ மணிகண்டனைச் சந்தித்து, கூட்டாக ஸ்கெட்ச் போட்டது போலீஸாரையே அதிரவைத்துள்ளது.

கம்பிக்குள் ஸ்கெட்ச்!; சென்டிமென்ட் சகோதரர்கள்...

தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர்ந்த தளபதி, குணா சகோதரர்களின் பாணியே தனி. அசைமென்ட் வந்துவிட்டால் வம்புதும்பு வழக்கில் வாலன்டியராக ஆஜராகி, சிறைக்குள் சென்றுவிடுவார்கள். அங்கிருந்தே சுடச்சுடத் தயாராகும் கொலைக்கான ஸ்கெட்ச். `சிறைக்குள்வைத்து ஸ்கெட்ச் போட்டால்தான் சரியாக ஒர்க்அவுட் ஆகும்’ என்பது இவர்களின் அசைக்க முடியாத சென்டிமென்ட். ஓரிரு வாரங்களில் வெளியே வந்தவுடன் ‘சிறப்பாக’ அரங்கேறுமாம் சம்பவம்.

பூதலூர் அருகேயுள்ள சோழகம்பட்டியைச் சேர்ந்த ரெளடி ‘அபாய’ பாஸ்கர். எதிராளியின் தலையை ஆட்டுத்தலையை அறுப்பதுபோல ‘கரகர’வென ரத்தம் தெறிக்க அறுத்தெடுப்பது இவரது கொடூர ஸ்டைல். தலையைக் கொய்தவுடன் ரத்தம் சொட்ட அதை முகர்ந்து பார்ப்பதைக் கண்டு சக கொலையாளிகளே மிரண்டுவிடுகிறார்கள். கொலை செய்யப்பட்ட நபரின் தலையில் ஆழமான வெட்டு இருந்தால், அது மாடாக்குடி ‘கட்ட’ ராஜா டீமின் கைங்கர்யம். முதலில் நாட்டு வெடிகுண்டை வீசி, வலது கையைத் துண்டாக்கிவிட்டு கொலை செய்தால் அது மணல்மேடு சங்கர் டீமின் உபயம். முகம் முழுக்க கீறல் போட்டு ரத்தக் களறியாக விளாறியிருந்தால் சாக்கோட்டை கார்த்தி, தாராசுரம் மூர்த்தி, ஜீவா, சிலம்பு ஆகியோரின் சம்பவம்!

ஹனிமூனில் வேலூர் ரெளடி

நடுரோட்டில் ஓடவிட்டு வெட்டுவது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது என வேலூரையே குலைநடுங்கச் செய்தவர் வசூர் ராஜா. 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், கர்நாடக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். ஒரு மாதத்துக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்தவர் ஜம்மென்று தலைமறைவாகி விட்டார். சமீபத்தில் இவர் திருமணமும் செய்துகொண்டார் என்கிறது ரெளடிகள் வட்டாரம். ‘ஹனிமூன்’ கொண்டாட்டத்தி லிருக்கும் வசூர் ராஜாவை போலீஸ் தேடிக்கொண்டே இருக்கிறது.

கொலைக்கு பரிசு புது பைக்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதியப் பின்புலமுள்ள ரெளடிகளின் ஆதிக்கமே அதிகம். தூத்துக்குடி, வைகுண்டம், திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரியில் ரகளை செய்யும் மாணவர்கள் உட்பட 20 - 25 வயதுடையவர்களைத் தேர்வுசெய்து, கஞ்சா போதையேற்றுகின்றன இந்த ரெளடி கும்பல்கள். விலையுயர்ந்த செல்போன்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். இதில் மயங்கும் இளைஞர்கள் அசைன்மென்ட்களுக்கு அசால்டாகச் செல்கிறார்கள். முதல் டார்கெட்டை வெற்றிகரமாக முடித்தால் ‘200 CC’ புது பைக் பரிசு.

தென் மாவட்டங்களில் சுபாஷ் பண்ணையார் கோஷ்டி, குடும்பப் பகைக்காக எதிர்த்தரப்புடன் மோதுகிறது. எதிர்த்தரப்பும் லேசுபட்டதல்ல... குமுளி ராஜ்குமார், கண்ணபிரான், எஸ்டேட் மணி உள்ளிட்டோர் எந்நேரமும் கொலைவாளும் நாட்டு வெடிகுண்டுகளுமாக எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இவர்களைத் தவிர, ‘ராக்கெட்’ ராஜா, ‘கோழி’ அருள் போன்ற பெருந்தலைகளும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைக் கலங்கடிக்கின்றனர். பாயசப் பிரியரான பேச்சிமுத்து, கொலைக்கு ஸ்கெட்ச் போடும்போது, கையில் ஒரு கப் பாயசத்தை உறிஞ்சியபடிதான் திட்டம் தீட்டுவாராம்!

‘பட்டறை’யின் பர்த் டே பார்ட்டி!

திருச்சி மாவட்டத்தில் 29 ரெளடிகள் ஆக்டிவாக இருக்கிறார்கள். பொன்மலை அருகே கீழக்குறிச்சியைச் சேர்ந்தவர் ‘பட்டறை’ சுரேஷ். இவரின் கூட்டாளிகள் ஒருவரைக் கொலை செய்ய வேண்டுமானால் காரைவிட்டு மோதி, உடலைத் தண்ட வாளத்தில் வீசிவிடுவார்கள். ஜூலை மாதம் இவரது பிறந்த நாளன்று, திருச்சியில் பல இடங்களில் ‘பட்டறை’ போட்டுத் தூள்கிளப்புகிறார்கள் இவரின் கூட்டாளிகள். ஒருமுறை பிரதமர் மோடி திருச்சிக்கு வந்தபோது, அவரை வரவேற்று ‘பட்டறை’ சுரேஷ் டீம் பேனர்கள்வைத்து செய்த அலப்பறை அந்தப் பகுதியையே அலறவைத்தது. தற்போது ஐ.ஜே.கே கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகப் பந்தாவாக வலம்வருகிறார் ‘பட்டறை’ சுரேஷ்.

திருச்சி ‘முட்டை’ ரவியின் மரணத்துக்குப் பிறகு, நண்பர்களாக இருந்த மண்ணச்சநல்லூர் குணாவும், சாமி ரவியும் எதிரிகளாக மாறினார்கள். வாண்டையார் குரூப்பில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த சாமி ரவி, பெரிய டீல்களைக் கச்சிதமாகச் செய்து முடித்தார். அகில இந்திய முக்குலத்தோர் பாசறையில் இணைந்து மாநில நிர்வாகியாகவும் மாறினார். ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட இவரைத் தேடுவதற்கு சமீபத்தில் சி.பி.சி.ஐ.டி., தனிப்படை அமைத்துள்ளது.

தூத்துக்குடிக் காவலர் சுப்பிரமணியன் கொல்லப்பட்ட சம்பவத்தில், ரெளடி துரைமுத்துவும் வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானார். வைகுண்டம் அருகே வெள்ளூரில் துரைமுத்துவின் உடலை வீச்சரிவாளுடன் அடக்கம் செய்த அவரின் ஆதரவாளர்கள், அவரது மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதமேற்றுக்கொண்டார்கள். சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கை கார்த்திக் என்கிற இளைஞர், “பல துரைமுத்துகள் உருவாவார்கள்” என்று வீடியோ வெளியிட்டது பரபரப்பானது.

“தமிழகத்தில் ரெளடிகள் ராஜ்ஜியம் தலைதூக்கியிருக்கிறது, கூலிப்படைக் கொலைகள் சர்வசாதாரணமாகிவிட்டனவே?” என்று தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளியிடம் கேட்டோம். “தமிழகத்தில் ரௌடிகளை இரும்புக்கரம்கொண்டு அடக்கி வருகிறோம். அங்கென்றும் இங்கொன்றுமாக கொலை சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால், பெரியளவில் எதுவும் நடக்காமல் உன்னிப்பாக கண்காணித்துவருகிறோம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ரௌடிகளின் பட்டியலைப் பார்த்தாலே இது புரியும். 400 பேர் குண்டர் சட்டத்திலும் 10,000 ரௌடிகள் வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.

சென்னையில் பெருகியிருக்கும் ரெளடியிசம் குறித்து பெருநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரனிடம் பேசினோம். “எனது மண்டலத்தில் ‘ஏ ப்ளஸ்’ பிரிவில் 38 ரெளடிகளை பட்டியலிட்டிருக்கிறோம். அவர்களில் சி.டி.மணி முக்கியமானவன். அவன்மீது ஒன்பது கொலை வழக்குகள் உட்பட 31 வழக்குகள் இருக்கின்றன. நெற்குன்றம் சூர்யா மீது ஆறு கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகள் உள்ளன. தேசிய கட்சி ஒன்றில் இவன் சேரப்போக... போலீஸ் சேஸ் செயததால், அவனால் சேர முடியவில்லை. மவுண்ட் ஏரியாவைச் சேர்நதவன் கொக்கி வினோத். அவன்மீது ஏழு வழக்குகள் உட்பட 13 வழக்குகள் இருக்கின்றன. மயிலாப்பூர் ரௌடி இம்ரான் என்பவன்மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 8 வழக்குகள் இருக்கின்றன. ரெளடிகள் பலரிடமும் ‘இனி குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என்று எழுதி வாங்க ஆரம்பித்திருக்கிறோம். அப்படி எழுதிக் கொடுத்தவர்கள், ஏதாவது குற்றச் செயலில் இறங்கினால், கருணையே இல்லாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

காதல், காமம், பாசம், பகை, பணம், பழிக்குப் பழி, துரோகம், சாதி, அதிகாரம், அரசியல் எனக் கொலைகளுக்கு எவ்வளவோ காரணங்கள். ஆனால், கொலை ஒரு தொழிலாகவும் அதைப் புரிபவர்களின் புகலிடமாகக் கட்சிகளும் இருப்பது, ஒரு சமூகத்தின் ரத்தத்தில் சாக்கடையைக் கலப்பதற்குச் சமம்!

தமிழகம் எப்போதும் ‘அமைதிப் பூங்கா’ என்கிற பெருமைக்குரியது. பூங்காவில் ரத்தத்துக்கு இடமில்லை!

தாதாக்கள் முட்டை ரவி, மணல்மேடு சங்கர் இருவருக்கும் என்கவுண்டர் மூலம் போலீஸ் முடிவுகட்டிய பிறகு டெல்டா மாவட்டங்களில் ரௌடிசம் கட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களில் மீண்டும் தாதாயிசம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் தாதாக்கள் அரசியல் கட்சிகளில் பொறுப்பு வாங்கிக்கொண்டு அதகளம் செய்கிறார்கள். மத்திய மண்டலத்துக்கு புதிய ஐ.ஜி-யாக வந்திருக்கும் ஜெயராமன் “தாதாக்களை ஒழிப்பேன்” என பதவியேற்ற நாளில் முழங்கினார். ஆனால், தாதாக்கள் பலரும் அவரைப் பார்க்கவே அவரது அலுவலகம் வந்து செல்வதுதான் வேடிக்கை!

இந்தக் கட்டுரை தொடர்பாக கூடுதல் விவரங்களைச் சேகரிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் பேசி முடித்த பத்து நிமிடங்களில் சென்னையின் பிரபல ரெளடிகள் பலரிடமிருந்தும் நமது அலைபேசிக்கு அழைப்பு வரத் தொடங்கின. “என்ன சார்... எங்களைப் பத்தி எல்லாம் விசாரிக்கிறீங்களாமே... கொஞ்சம் பார்த்து எழுதுங்க!” என்று கறார் தோரணையில் பேசினார்கள். இதிலிருந்தே காவல்துறையினருக்கும் ரெளடிகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு வெட்ட வெளிச்சமாகிறது!