Published:Updated:

பினாமி ஊழியர்கள்; ரூ.150 கோடிக்கும் அதிகமான வருமானம்! - அதிரவைத்த நாமக்கல் நீட் பயிற்சி மைய ரெய்டு

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடி அளவுக்கு வருவாய் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கிரீன்பார்க் பள்ளி
கிரீன்பார்க் பள்ளி

நாமக்கல் போதுபட்டியில் உள்ளது கிரீன் பார்க் என்ற தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலும். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மற்றும் நீட் பயிற்சி வகுப்புக்கு பல லட்சங்கள் கட்டணமாகப் பெறுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 50 பேர் 10 குழுக்களாகத் திடீர் சொதனையில் ஈடுபட்டனர். பள்ளி, நீட் பயிற்சி மையத்தின், தாளாளர் மற்றும் இயக்குநர்களின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள்
பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள்

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வருமான வரித்துறைக்கு புகார் சென்றுள்ளது .நேற்று காலை 10 மணி முதல் இந்தச் சோதனை நடக்கிறது. சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பள்ளியின் மெயின் கேட் உள்ளிட்ட அனைத்து கேட்களும் பூட்டப்பட்டு சோதனை நடக்கிறது. மேலும், பள்ளித் தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாதுகாப்புக்கு, 25 போலீஸார் உடன் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். பள்ளி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், மாணவ - மாணவியர் சேர்க்கை விவரம், கட்டண வசூல், கணக்கு ஆவணங்களை சரிபார்த்தனர். அதேபோல், பள்ளி இயக்குநர்கள் வீடுகளிலும், தனித் தனி குழுக்களாகச் சென்று, சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுக்க உள்ள முக்கிய வி.ஐ.பி-களின் மகள் மகன்கள் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இதனால் அளவுக்கு அதிகமாகப் பணம் கைமாறியுள்ளதாகவும், நீட் பயிற்சி வகுப்புக்கு பல லட்சம் வரை மாணவர்களிடம் பெற்றதாகவும் வந்த புகாரை அடுத்து சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. இன்றும் இந்தச் சோதனையைத் தொடர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியாக நீட் பயிற்சி மையத்துடன் இந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சோதனை இன்று தொடரும்'' என்று கூறினர்.

கிரீன்பார்க் பள்ளி
கிரீன்பார்க் பள்ளி

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நாமக்கல்லில் செயல்படும் நீட் தேர்வு பயிற்சி மையம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல், பெருந்துறை, கரூர் மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் உள்ள 17 இடங்களில் இந்தச் சோதனை நடந்தது. நீட் தேர்வு பயிற்சிக்காக மாணவர்களிடமிருந்து பெறப்படும் பணத்தை உரிய முறையில் கணக்குக் காட்டாமல் வருமானத்தை மறைத்து வந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து அந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் இருந்த அறை ஒன்றின் லாக்கரில் இருந்து கணக்கில் காட்டப்படாத 30 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல், சட்டவிரோத வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள், தனிப்பட்ட முதலீடுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக அதிக ஊதியத்துக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மெடிக்கல் சீட் மூலம் ரூ.100 கோடி; உதவியாளர் தற்கொலை?- தொடர் ரெய்டால் அதிரும் கர்நாடகா!

அவர்களுக்கான ஊதியமும் முறையான பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக அளிக்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதேபோல், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெயரில் வங்கி லாக்கர்களில் பணம் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஊழியர்கள் நிறுவனத்தின் பினாமியாக செயல்பட்டிருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பான சோதனை மற்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது'' என்று கூறப்பட்டிருக்கிறது.