Published:Updated:

`அடக்கி வையுங்கள் என்றனர்; இப்போது?!'- ஒடிசாவில் அடுத்தடுத்து கொல்லப்பட்ட RTI செயற்பாட்டாளர்கள்

கொலை
கொலை

மாவட்டத்துக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் தனியார் நிறுவனங்கள் குறித்தும் தொடர்ந்து ஆர்.டி.ஐ-யில் தகவல்களைக் கேட்டு வந்துள்ளார். இதனால், அடிக்கடி கொலை மிரட்டல்களும் அவருக்கு வந்துள்ளன.

ஒடிசா மாநிலம், கேந்திரப்பாரா எனும் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன் குமார் தாஸ். 35 வயதான இவர், கடந்த எட்டு வருடங்களாக தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளராக இயங்கிவருகிறார். மாவட்டத்துக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் தனியார் நிறுவனங்கள் குறித்தும் தொடர்ந்து ஆர்.டி.ஐ-யில் தகவல்களைக் கேட்டுவந்துள்ளார். இதனால், அடிக்கடி கொலை மிரட்டல்களும் அவருக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், கேந்திரப்பாராவில் பெருவான் கிராமத்திலுள்ள தனது வீட்டுக்கு 2 கிலோமீட்டர் தொலைவில் மோட்டார் சைக்கிளில் தாஸ் சென்றுகொண்டிருக்கும்போது கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டுக்குத் திரும்பாத அவர் நேற்று காலையில் அதிகமான வெட்டுக்காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கொலை
கொலை

ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர் பிரதீப் பிரதான் இச்சம்பவம் தொடர்பாக பேசுகையில், ``சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட செங்கல் சூளைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி வந்ததற்காக தாஸுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. தாஸை அடக்கி வையுங்கள் என்றுகூறி கடந்த மாதம் தாஸின் பெற்றோர்களுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது" என்றார். ஊழல் குறித்த தகவல்களைக் கேட்டு ஆர்.டி.ஐ-யில் பதிவு செய்தால், அதை விரும்பாதவர்கள் ஆர்வலர்களைக் கொலை செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தாஸின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பேசும்போது, ``இறால் வளர்ப்புக்காக மகாகல்படாவில் வசிப்பவர்களின் 1100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக வழக்கு ஒன்றை சமீபத்தில் பதிவு செய்திருந்தார். கிராம மேம்பாட்டுத்துறையால் கட்டப்பட்ட சாலைகள் தொடர்பான கணக்குகள், அங்கன்வாடிகளில் வழங்கப்படும் குழந்தைகளின் உணவு தொடர்பான தகவல்கள், பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகியவற்றைக் குறித்தும் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்திருந்தார்" என்று கூறியுள்ளார்.

கொலை
கொலை

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த உள்ளோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாஸ் தன் பெற்றோர், மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

ஒடிசாவில், கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயதான தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அபிமன்யு பாண்டா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மற்றொரு ஆர்.டி.ஐ செயற்பாட்டளரும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிருப்பது ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு