Published:Updated:

பாலியல் தொழிலில் ஆளுங்கட்சி பிரமுகர்... நெருங்கிய தொடர்பில் போலீஸ் அதிகாரி!

ரெய்டின்போது...
பிரீமியம் ஸ்டோரி
News
ரெய்டின்போது...

சில பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களின் பெண் குழந்தைகளையும் இந்தக் கொடுமையில் தள்ளியிருக்கிறார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் பெண் பிரமுகர் ஒருவரே பாலியல் தொழில் செய்துவந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்மணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என வெளிவந்திருக்கும் தகவல், கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் சிலர் பாலியல் தொழில் செய்வதாக, காவல்துறைக்கு தகவல் வந்தது. அந்த வீட்டை போலீஸார் சோதனை செய்தபோது, உமராபாத் வேப்பமரத் தெருவைச் சேர்ந்த 50 வயதான பிரேமா, பெங்களூருவைச் சேர்ந்த 35 வயதான லதா, இவரின் 17 வயது மகள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் பிரேமா, அ.தி.மு.க வேலூர் மேற்கு மாவட்டப் பிரதிநிதி, உமராபாத் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் போன்ற பதவிகளில் இருந்துகொண்டு பாலியல் தரகர் வேலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமா
பிரேமா

இதுபற்றி போலீஸார் கூறுகையில், ‘‘கடலூர் மாவட்டம் வடலூரில் கணவருடன் வசித்துவந்த பிரேமா, பத்து ஆண்டுகளுக்கு முன்பு உமராபாத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து செட்டிலாகிவிட்டார். பாலியல் தொழி லாளியாக மாறிய அவர், பல்வேறு அரசியல் பிரமுகர் களையும் தொழிலதிபர் களையும் தன் வலையில் வீழ்த்தி காரியங்களைச் சாதித்துக்கொண்டார். பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், தன் சொத்துகளை இவரிடம் பறிகொடுத்துள்ளார். இப்போது ரெய்டு நடத்தப்பட்ட வீட்டில், இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழில் செய்துவந்துள்ளார் பிரேமா. சில பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களின் பெண் குழந்தைகளையும் இந்தக் கொடுமையில் தள்ளியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்போது மீட்கப்பட்ட பெங்களூரு சிறுமியை அவரின் தாயே அனுப்பிவைத்துள்ளார்! இதற்காக நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாயை சம்பளமாக வழங்கியுள்ளார் பிரேமா. இளம்பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலுக்கு அழைத்துவருவதற்காக மேலும் இரண்டு பெண்கள் பிரேமாவுக்கு உதவி செய்துள்ளனர். அவர்களையும் தீவிரமாகத் தேடிவருகிறோம். சிறுமியை மட்டும் திருப்பத்தூரில் உள்ள காப்பகத்தில் தங்கவைத்துள்ளோம்.

ரெய்டின்போது...
ரெய்டின்போது...

அ.தி.மு.க பிரமுகர் பிரேமா மற்றும் சிறுமியின் தாய் லதாமீது, ‘பெண்களைக் கடத்தியது, பாலியல் தொழிலுக்கு இடம் கொடுத்தது, பாலியல் தொழில்மூலம் வருமானம் ஈட்டியது, பாலியல் தொழிலுக்காக ஆட்களைச் சேர்த்தது’ ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்துள்ளோம். இதில் தொடர்புடைய பிரமுகர்கள் சிலரையும் ரகசியமாகக் கண்காணித்துவருகிறோம்’’ என்றனர்.

இதனிடையே, கைப்பற்றப்பட்ட பிரேமாவின் செல்போனை போலீஸார் ஆய்வுசெய்ததில், கடைசியாக அவருடன் காவல்துறை அதிகாரிகள் சிலரும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இருவரும் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர், ஆம்பூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி, பதவி உயர்வில் வேறூருக்கு ‘விஜயம்’ சென்றவர். பெண்கள் விவகாரத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அந்தக் காவல்துறை அதிகாரிக்கும் பிரேமாவுக்கும் எந்த மாதிரியான தொடர்பு இருந்திருக்கிறது என்பது பற்றிய தகவலைக் கசியவிடாமல் தடுப்பதற்கான வேலைகளும் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

நீக்கல் அறிவிப்பு
நீக்கல் அறிவிப்பு

இந்த நிலையில், அ.தி.மு.க-விலிருந்து பிரேமா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய அ.தி.மு.க விசுவாசிகள், ‘‘பிரேமா என்ன மாதிரியான தொழில் செய்கிறார் என்பது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பல நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே தெரியும். அவரைக் கண்டிக்காமலும் தண்டிக்காமலும் சிலர் கஸ்டமர்களாக இருந்ததாகவும் பேச்சு அடிபடுகிறது. `அம்மாவின் ஆட்சி’ என்று பெயருக்கு மட்டுமே சொல்லிக்கொள்கிறார்கள். அம்மா இருந்திருந்தால் இந்த மாதிரி தவறு செய்யும் நபர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கியிருப்பார். கைது நடவடிக்கைக்குப் பிறகே அவமானத்தை தலைமை உணர்ந்துள்ளது’’ என்றனர் கொதிப்புடன்.

பிரேமாவை கைதுசெய்ததுடன் இந்த விஷயத்தை அமுக்கிவிடாமல், முழு நெட்வொர்க்கும் கண்டறியப்பட்டு அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.