Published:Updated:

`பக்தியின் பெயரால் பவளப்பாறைகள் விற்பனை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்?!’- ஏமாற்றப்படும் பக்தர்கள்

கோதண்டராமர் கோயில்
கோதண்டராமர் கோயில் ( உ.பாண்டி )

ராமர் பாலம் அமைப்பதற்காகப் பயன்படுத்திய கல் எனக் கூறி கடற்கரையோரம் கிடக்கும் நுரை கற்களை (ஒரு வகையான பவளப்பாறை) வடமாநில பக்தர்களின் கையில் கொடுத்து அதைக் கடலில் தூக்கிப் போடச் சொல்லி பண வசூலில் இறங்கியுள்ளனர்.

புனித தலங்களுக்கு வரும் கடவுள் நம்பிக்கை கொண்ட பக்தர்களை ஏமாற்றிப் பணம் பறிப்பது வழக்கமாக நடந்து வரும் சூழலில், கடவுளின் பெயரைச் சொல்லி புதிய மோசடி ஒன்று ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மிதக்கும் கல் எனக் கூறி தடை செய்யப்பட்ட பவளப்பாறை விற்பனையில் ஈடுபட்ட சிலரிடம் வன உயிரினப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவளப்பாறைகள் மோசடி
பவளப்பாறைகள் மோசடி

வடமாநிலங்களைச் சேர்ந்த யாத்திரைவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளில் ராமேஸ்வரத்திற்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்குள்ள கோயிலில் புனித நீராடல், சாமி தரிசனம் முடிந்த பின் ராமேஸ்வரத்தில் உள்ள பிற தீர்த்தம் மற்றும் கோயில்களுக்கும், தனுஷ்கோடிக்குச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தனுஷ்கோடியில் 64-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் உருக்குலைந்து கிடக்கும் கட்டட இடிபாடுகளைக் காணவும், அரிச்சல்முனைக் கடற்கரையில் மன்னார் வளைகுடா கடலும், பாக்நீரிணைப் பகுதியும் ஒன்றிணையும் அழகினைப் பார்த்து ரசிக்கவும் செல்வோர் அதிகம்.

இவ்வாறு தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோயில். ராவணனின் தம்பியான விபீஷணனுக்கு இலங்கையின் மன்னராக இங்கு வைத்துத்துதான் ராமர் பட்டம் சூட்டி வைத்ததாக இதன் தலவரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை ராமேஸ்வரம் கோயிலிலிருந்து ஶ்ரீராமர் எழுந்தருளி கோதண்டராமர் கோயில் சென்று அங்கு விபிஷணருக்குப் பட்டம் சூட்டி வைக்கும் வைபவம் இன்றளவும் நடந்து வருகிறது.

வசூலுக்காக வைக்கப்பட்ட சாமி சிலைகள்
வசூலுக்காக வைக்கப்பட்ட சாமி சிலைகள்

இந்நிலையில், இக்கோயிலையொட்டி உள்ள கடற்கரைப் பகுதியில் புதிதாகச் சில சிலைகளை ஏற்படுத்தி அவற்றின் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மோசடியாகப் பணம்பார்க்கத் தொடங்கியுள்ளனர் சிலர். வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களை அந்தச் சிலைகளை வணங்கச் செய்து அவர்களிடமிருந்து காணிக்கை என்ற பெயரில் கட்டாயமாக வசூலில் ஈடுபடுகின்றனர். இவை தவிர ராமர் பாலம் அமைப்பதற்காகப் பயன்படுத்திய கல் எனக் கூறி கடற்கரையோரம் கிடக்கும் நுரை கற்களை (ஒரு வகையான பவளப்பாறை) வடமாநில பக்தர்களின் கையில் கொடுத்து அதைக் கடலில் தூக்கிப் போடச் சொல்லும் சிலர், அதைத் தங்கள் உடனடி கேமராவில் பதிவு செய்து அதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலித்து உள்ளங்கை அளவு போட்டோவைக் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கெனவே ஐந்துமுக அனுமன் கோயில், ராமர்தீர்த்தம் பகுதியில் சிலர் இத்தகைய நுரைகற்களை, மிதக்கும் கல் எனக் காண்பித்து அதற்கு பூஜை நடத்தி வசூல் செய்வதும், அந்தக் கற்களை வாங்கிச் சென்றால் வளம் பெருகும் எனவும் கூறி பக்தர்கள் தலையில் கட்டி ஏமாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது கோதண்ட ராமர் கோயில் பகுதியில் அதே கற்களைக் கடலில் தூக்கிப் போடச் செய்து பக்தர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவரம் அறியாத பக்தர்கள் பலர் பாதிப்படைந்து வருகின்றனர்.

சிக்கிய பவளப்பாறைகள்
சிக்கிய பவளப்பாறைகள்

இந்நிலையில் சென்னையிலிருந்து வந்திருந்த மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை கோதண்டராமர் கோயில் பகுதியில் பவளப்பாறைகளை விற்பனை செய்து வந்த 6 பேரை பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். இரவு முழுவதும் விசாரணை நடத்திய அதிகாரிகள், பிடிபட்டவர்களிடமிருந்து பவளப்பாறைகள் ஏதும் சிக்கவில்லை எனக் கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வன உயிரின பாதுகாப்பு வனச் சரகரிடம் பேசும்போது, ``கிடைத்த தகவலின் அடிப்படையில் 6 பேரை பிடித்து விசாரித்தோம். ஆனால் அவர்களிடம் பவளப்பாறைகள் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியாமல் விடுவித்தோம்” என்றனர். எனினும் பவளப்பாறைகள் சிக்கியதாகச் சில படங்கள் வெளியானதால் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பக்தர்கள் ஏமாறாத வண்ணமும் தடை செய்யப்பட்ட பவளப்பாறை விற்பனையைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு