Published:Updated:

ஒயிட் லாட்டரியைத் தொடர்ந்து தேனியில் கொடிகட்டிப்பறக்கும் ’வாட்ஸ் அப் லாட்டரி’

எம்.கணேஷ்

தேனியில், மறைமுகமாகப் பல ’வாட்ஸ் அப் லாட்டரி’ குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால், இளைஞர்கள் பலர் இந்த வாட்ஸப் லாட்டரியின் மோகத்தால், பணத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள்.

வாட்ஸப் லாட்டரி
வாட்ஸப் லாட்டரி

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை தடைசெய்யப்பட்டது முதல், அதைக் கள்ளத்தனமாக விற்பனை செய்வது இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும்கூட, அதில் இருந்து தப்புவதற்காக, லாட்டரி விற்பனை முறையை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஒயிட் லாட்டரி, வாட்ஸ் அப் லாட்டரி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

லாட்டரி
லாட்டரி

கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டமான தேனியில், கேரள லாட்டரி சீட்டுகளின் புழக்கம் அதிகம். போலீஸார், லாட்டரி சீட்டுகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளால், நேரடியாக லாட்டரி சீட்டுகளின் விற்பனை இல்லாமல், ஒயிட் லாட்டரி சீட்டு விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. லாட்டரி சீட்டில் உள்ள சீரியல் நம்பரை வெள்ளைத்தாளில் எழுதி, அதை ஏஜென்ட் கையில் ஒப்படைத்துவிடுவார்கள். அவர், அந்த எண்களுக்கான லாட்டரி சீட்டுகளை வாங்கிவிடுவார். இந்த முறையையும் போலீஸார் கண்டுபிடித்து அவ்வப்போது ஏஜென்டுகளைக் கைது செய்துவந்தனர். தற்போது, ’வாட்ஸ் அப் லாட்டரி’ தேனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய லாட்டரி சீட்டு வாங்கும் ஒருவர், ``லாட்டரி சீட்டு விற்றால் அதை போலீஸ் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதனால், நேரடியாக லாட்டரி சீட்டு எங்கள் கைக்கு வராது. மாறாக, ஏஜென்ட் கைகளில் வந்துள்ள லாட்டரி சீட்டுகளின் சீரியல் நம்பர்களை மட்டும் தொலைபேசியில் சொல்வார். அந்த சீரியல் நம்பர்களில் நாம் தேர்வுசெய்ய வேண்டும்.

லாட்டரி
லாட்டரி

அந்த நம்பருக்கு பரிசு கிடைத்தால், அதை நம்மிடம் ஏஜென்ட் கொடுப்பார். இப்போது, ஏஜென்டுகளையும் போலீஸார் மடக்கிப் பிடித்துவிடுக்கிறார்கள். அதனால், வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக, சீரியல் நம்பரைத் தேர்வுசெய்யச் சொல்கிறார்கள்.

அந்த சீட்டுக்கான பணத்தை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். பரிசு விழுந்தால், அதற்கான தொகையும் ஆன்லைனில் நம்முடைய வங்கிக்கணக்கிற்கு வந்துவிடுகிறது” என்றார்.

லாட்டரி
லாட்டரி

தேனியில், மறைமுகமாகப் பல வாட்ஸ் அப் லாட்டரிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால், இளைஞர்கள் பலர் இந்த வாட்ஸ் அப் லாட்டரியின் மோகத்தால், பணத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "வாட்ஸ் அப் லாட்டரி குறித்து புகார்கள் ஏதும் வரவில்லை. மறைமுகமாக லாட்டரி விற்பனை தேனியில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. நேற்று கூட உத்தமபாளையத்தில் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வாட்ஸ் அப் லாட்டரி குறித்து விசாரணை செய்கிறோம்." என்றனர்.