Published:Updated:

`ரூ.300 கோடி பரிசு; 1.25 கோடி ரூபாய் செலவாகும்!’ - நாமக்கல் விவசாயியை அதிரவைத்த மோசடிக் கும்பல்

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

நீங்கள் ரூ.1.25 கோடி கொடுத்தால், ரூ.300 கோடியை வாங்கித்தருகிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம், `வெளிநாட்டில் உள்ள தொண்டு நிறுவனத்திடமிருந்து ரூ.300 கோடி பரிசுத் தொகை வந்துள்ளது. அந்தப் பணத்தை வாங்குவதற்கு ரூ.1.25 கோடி செலவாகும்’ என்று கூறியதையடுத்து, விவசாயி தன்னுடைய காட்டை விற்று 1.11 கோடி கொடுத்திருக்கிறார். அப்போதும் பரிசுக்கான பணம் கொடுக்காததால், விவசாயி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதையடுத்து சேலம் காவல்துறையினர் அந்த மோசடிக் கும்பலை திட்டமிட்டு கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குள்ளங்கவுண்டனூர், குமரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிவேல். இவரது உறவினரின் நண்பர்களான கொங்கணாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற அரவிந்த், சங்ககிரி தொண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்கிற ரபீக் மற்றும் அஸ்வின், எடப்பாடியைச் சேர்ந்த மாதேஸ் உட்பட 7 பேர் சேர்ந்து பழனிவேலிடம், `வெளிநாட்டில் உள்ள கிறிஸ்துவ மிஷனரியிலிருந்து உங்களுக்கு ரூ.300 கோடி பரிசுத்தொகை வந்துள்ளது.

துணை கமிஷனர் விசாரணை
துணை கமிஷனர் விசாரணை

அந்தத் தொகையை எங்கள் மூலமாகத்தான் வழங்க வேண்டும். வெளிநாட்டுப் பணத்தை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டுமென்றால், கொஞ்சம் பணம் செலவாகும். அதற்காக நீங்கள் ரூ.1.25 கோடி கொடுத்தால், ரூ.300 கோடியை வாங்கித் தருகிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள். இதை நம்பிய விவசாயி பழனிவேல், தன்னுடைய 4 1/2 ஏக்கர் நிலத்தை ரூ.1.25 கோடிக்கு விற்றுள்ளார். பின்னர், நான்கு தவணைகளாக ரூ.1.11 கோடி பணத்தை மோசடிக் கும்பலிடம் கொடுத்துள்ளார்.

பழனிவேல், பணம் கொடுத்த பிறகும் வெளிநாட்டுப் பணம் 300 கோடியை அவருக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையில், அந்த மோசடிக் கும்பல் சில நாள்களுக்கு முன்பு பழனிவேலை மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, `வெளிநாட்டுப் பணம் சேலத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு வந்துள்ளது. ஒரு விழா வைத்து தங்களுக்கு அந்தப் பணத்தை வழங்க இருக்கிறோம். அதற்காக ரூ.10 லட்சம் கொடுங்கள்’ என்று கேட்டுள்ளனர்.

அப்போதுதான், பழனிவேலுக்கு தன்னிடம் மோசடி செய்வது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார். அதையடுத்து, அவர்களைக் கைதுசெய்ய பள்ளப்பட்டி காவல்துறை இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையில் போலீஸார் திட்டமிட்டனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி, அந்த மோசடிக் கும்பலிடம் பணம் தருவதாகவும், சேலம் 5 ரோடு பகுதியில் வந்து வாங்கிச் செல்லும்படியும் பழனிவேல் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மோசடிக் கும்பல், நேற்று சேலம் 5 ரோடு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் பூபதிராஜன், அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீஸார், மாறுவேடத்தில் ஐந்து ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, மோசடிக் கும்பலைச் சேர்ந்த அரவிந்த், ரபீக், அஸ்வின் ஆகியோர் பழனிவேலிடம் பணம் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தனர்.

மோசடி கும்பல்
மோசடி கும்பல்

அங்கு மாறு வேடத்தில் நின்றிருந்த போலீஸார், மோசடிக் கும்பலைச் சேர்ந்த 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், வெளிநாட்டுப் பணம் வாங்கிச் தருவதாகக் கூறி, பழனிவேலிடம் 1.11 கோடி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, அந்த 3 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். மேலும், இந்த மோசடியில் ஈடுபட்ட எடப்பாடியைச் சேர்ந்த மாதேஸ் என்பவரையும் கைது செய்துள்ளனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபர்களான லோகநாதன், சரவணன், கிஷோர்குமார் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய போலீஸ் துணை கமிஷனர் செந்தில், ``வெளிநாட்டிலிருந்து பணம் வந்துள்ளது, ஒரு அமைப்பின் மூலமாக பரிசுத்தொகை கொடுக்கிறார்கள் என்று அடிப்படை ஆதாரம் இல்லாமல் கூறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். லட்சக்கணக்கில் பணம் செலவுசெய்தால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறும் மோசடிக் கும்பலிடம் பொதுமக்கள் பணத்தைக் கொடுத்து ஏமாறக்கூடாது'' என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு