Published:Updated:

`எனக்கு விஷம் கலந்து கொடுத்துவிட்டார்கள்!' -சேலம் பழங்குடியினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ராஜேஸ்வரி
News
ராஜேஸ்வரி

' நாங்கள் சாதி பார்க்க மாட்டோம். பிள்ளையைச் சரியாக வைத்துக் கொள்கிறோம்' என்று சொன்னதால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தோம்.

''நாங்கள் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். என் மகளை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குத் திருமணம் செய்துகொடுத்தோம். அவர்கள், என் மகளை சித்ரவதை செய்து விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டார்கள். அவர்களைக் கைதுசெய்யும்வரை என் மகளின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம்'' என்று, இறந்த பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இதுபற்றி இறந்த பெண்ணின் பெரியப்பா செல்வராஜ், '' கருமந்துறை அடிவாரத்தில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்-வள்ளியம்மாள். இவர்களுக்கு ராஜேஸ்வரி, பிரியதர்ஷினி என்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நாங்கள், மலைவாழ் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மூத்த மகள் ராஜேஸ்வரி, டிப்ளமோ நர்சிங் முடித்திருக்கிறாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான்கு மாதங்களுக்கு முன்பு, ஆறகழூரை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், செளந்திரமணியின் மகன் பழனிவேலுக்கு கருமந்துறையில் பெண் பார்க்கச் செல்வதற்காக பாப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் ராஜேஸ்வரியும் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பழனிவேலின் குடும்பத்தினர் ராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்துவிட்டு, என் தம்பி வீட்டில் பெண் கேட்க வந்துள்ளனர்.

ராஜேஸ்வரி குடும்பத்தினர்
ராஜேஸ்வரி குடும்பத்தினர்

இப்பகுதியில், குறிப்பிட்ட மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பழங்குடியினப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது வழக்கம். அதனால் என் தம்பி வீட்டுக்கு வந்து பெண் கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுத்தால், சமீபகாலமாக பிரச்னைகள் வருகிறது. திருமணம் செய்துகொண்டு போய் சாதிக் கொடுமை செய்கிறார்கள். நிறைய பெண்கள் பிழைக்காமல் வந்துவிட்டனர். அதனால், சாதி மாறி பெண் கொடுக்க விருப்பம் இல்லை' என்று தெரிவித்தோம். 'இல்லை, நாங்கள் சாதி பார்க்க மாட்டோம். பிள்ளையைச் சரியாக வைத்துக்கொள்கிறோம்' என்று சொன்னதால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து, 4.9.2019 அன்று திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே பிரச்னை செய்யத் தொடங்கினார்கள். ராஜேஸ்வரியின் தட்டு, டம்ளர் உட்பட அவள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் கொண்டுபோய் மாட்டுக் கொட்டகையில் வைத்திருக்கிறார்கள். மாட்டுக் கொட்டகையில் படுக்கவும் வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி பாப்பநாயக்கன்பட்டிக்கு வந்துவிட்டார். நான் ராஜேஸ்வரியை சமாதானம் செய்தபோது, 'பெரியப்பா, அங்கு வாழ முடியாது. பழனிவேல், அவுங்க அம்மா, அப்பா எல்லோரும் என்னை சாதி பெயரைச் சொல்லி கொடுமை செய்கிறார்கள்' என்று சொல்லி அழுதாள். `அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இன்னொருவர் வீட்டுக்குச் சென்றுவிட்டால் எல்லா கஷ்ட நஷ்டத்தையும் சமாளிக்க வேண்டும்' என்று கூறி அனுப்பிவைத்தோம்.

செல்வராஜ்
செல்வராஜ்

என் தம்பி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுப் போடுவதற்காக ராஜேஸ்வரியை கூட்டிவருவதற்கு பழனிவேல் வீட்டுக்குச் சென்ற போது அவருடைய பெற்றோர், 'ராஜேஸ்வரி வாயும் வயிறுமா இருக்கு. ஓட்டு போட கூட்டிட்டுப் போகவேண்டாம்' என்றார்கள். அப்போது ராஜேஸ்வரியிடம் பேசும்போது, 'நான் கர்ப்பம் தரிப்பதற்காகக் காலையும் மாலையும் மருந்து கொடுக்கிறார்கள்' என்று கூறி அழுதிருக்கிறாள். மகளை சமாதானம் செய்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.

ஒரு வாரத்திற்கு முன்பு, வயிற்று வலின்னு சொல்லி ராஜேஸ்வரியை ஆத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்கள். அதையடுத்து, என் தம்பி குடும்பத்தினர் மருத்துவமனைக்குப் போன பிறகு, பழனிவேலின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கே வரவில்லை. மருத்துவர்கள் கோவை மெடிக்கல் சென்டருக்குக் கொண்டுபோகச் சொன்னதை அடுத்து, நகைகளை விற்று 70 ஆயிரத்தைக் கொண்டுபோய் செலவு செய்தோம்.

மருத்துவர்கள் விஷம் குடித்திருப்பதாகச் சொன்னார்கள். மேலும் 3 லட்சம் கேட்டதையடுத்து, பணம் கட்ட முடியாமல் சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுவந்தோம். இங்கிருக்கும் மருத்துவர்களும் விஷம் குடித்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ராஜேஸ்வரி, 'நான் விஷம் குடிக்கவில்லை. அவர்கள் விஷம் கலந்து கொடுத்திருப்பார்கள்' என்று கூறி அழுதாள். இந்நிலையில், நேற்று அவள் இறந்துவிட்டாள். நிச்சயமாக, பழனிவேலின் குடும்பத்தார் சாதி வெறியோடு சித்ரவதை செய்து விஷம் கலந்து கொடுத்து கொன்றிருக்கிறார்கள்'' என்றார்.

அழகேசன்
அழகேசன்

''என் மகளை கல்யாணம் பண்ணிட்டுப் போய் இப்படி விஷம் கொடுத்துக் கொலை செஞ்சுட்டாங்களே, நாங்க பெண்ணை கொடுக்க மாட்டோமுன்னு தானே சொன்னோம். இவங்களே கல்யாணம் பண்ணிட்டுப் போய் கொன்னுட்டாங்களே. என் குழந்தை கல்யாணம் ஆகி 4 மாசத்தில் பலமுறை கொடுமை செய்வதாகச் சொல்லி வீட்டுக்கு வந்தாள். இங்கேயே வைத்திருந்தால் என் குழந்தை இறந்திருக்காதே...''என்று கதறி மயங்கிவிழுந்தார் ராஜேஸ்வரின் அம்மா வள்ளியம்மாள்.

சேலம் அரசு மருத்துவமனை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கலப்புத் திருமணத் தம்பதியினர் சங்கத்தின் தலைவர் அழகேசன் நம்மிடம், ''மாற்று சாதியினர், அவர்களுடைய சமூகத்தில் பெண் கிடைக்காதபோது பட்டியலினப் பெண்களையும் பழங்குடியினப் பெண்களையும் திருமணம் செய்துகொள்வார்கள். பிறகு, வரதட்சணை கேட்டும் சாதியைச் சொல்லியும் கொடுமை செய்வது வழக்கம். இவர்கள், ஆணவக் கொலைகளை நுட்பமாகச் செய்வார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணே தற்கொலை செய்துகொள்ளும்படியும் செய்வார்கள். அப்படித்தான் ராஜேஸ்வரியின் மரணமும் நடந்திருக்கிறது. பழனிவேல் குடும்பத்தை வன்கொடுமை சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'' என்றார் கொதிப்புடன்.

பழனிவேல்
பழனிவேல்

இதுபற்றி ராஜேஸ்வரியின் கணவர் பழனிவேலிடம் பேசினோம். `நீங்க யார்... என்ன வேண்டும்?' என்று விசாரித்தவர், ''இப்போது என்னால் பேச முடியாது. இன்னும் 5 நிமிடத்தில் பேசுகிறேன்'' என்றவர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.