Published:Updated:

`பணத்துக்காக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்!' - சேலம் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பெண் புகார்

ஆட்டோ டிரைவர் மோகன் ராஜ், தன்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் ஒருவர் சேலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Representational Image
Representational Image

சமீபத்தில் சேலம் மாவட்டம் காக்காபாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

அதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை சேலம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே மோகன்ராஜின் மனைவி மற்றும் குடும்பத்தார், ``மோகன்ராஜுவுக்கு ஒரே மனைவிதான் இருக்கிறார். இரண்டு மனைவிகள் கிடையாது. அவர் தவறானவர் கிடையாது. அரசியல் கட்சியில் ஒரு பொறுப்பில் இருப்பதால், அவரைப் பிடிக்காதவர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தவறாகச் சித்திரித்து வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது மோகன்ராஜ் இல்லை'' எனச் சேலம் கலெக்டர் ராமனிடம் மனுக் கொடுத்தார்கள்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

இந்நிலையில், ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் மூலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகார் மனுவில், ``நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் கட்டட வேலைக்குச் சென்று வருகிறேன். நான் வேலை முடித்து விட்டு வீட்டுக்குச் செல்லும்போது மோகன்ராஜ் ஆட்டோவில் செல்லுவேன். அப்போது எனக்கும் மோகன்ராஜுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

என் குடும்பத்தில் பணக் கஷ்டம் என்பதால் மோகன்ராஜிடம் ரூ.2,000 கடன் வாங்கினேன். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. 2,000 ரூபாய் பணத்துக்காக மோகன்ராஜ் என்னை அவரது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கூட்டிச் சென்றார். அங்கு, `கொலை செய்து விடுவேன்' என்று மிரட்டி, நெற்றியில் அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்'' என்று கூறப்பட்டிருக்கிறது.

`தனிப்படை காவலர் மொபைலுக்கே வந்த எஸ்.எம்.எஸ்’ - மதுரையில் சிக்கிய பாலியல் கும்பல்!

இதுகுறித்து மோகன்ராஜ் குடும்பத்தில் விசாரித்தபோது, ``நாங்க ஊருக்குள் கண்ணியமாக வாழ்ந்துகொண்டு இருந்தோம். மோகன்ராஜ் மனைவியும் மகனும் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நல்லா சாப்பிட்டு 11 நாள்கள் ஆகிறது. பள்ளிக்கூடம்போனால் ஆசிரியர்களும் மாணவர்களும் கேட்பார்களே என்று பயந்துகொண்டு பள்ளிக்கூடம் போகாமல் இருக்கிறான் அவரின் மகன். வீடியோ உண்மையோ இல்லையோ தெரியவில்லை. அதனால் நாங்கள் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறோம்'' என்றார்கள்.