Published:Updated:

`ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பினார்..!' -நண்பரின் காதலால் சேலம் மெக்கானிக்குக்கு நேர்ந்த கொடூரம்

கொலை
கொலை

`மீண்டும் ஶ்ரீநாத்தைத் தாக்கினால் உங்களை நான் சும்மா விடமாட்டேன், தொலைத்து விடுவேன்' என்று எச்சரிக்கை செய்தார் மகேஷ். இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள்.

சேலம் சந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (37). இவர் சேலம் அன்னதானப்பட்டியில் டூவீலர் பட்டறையை நடத்தி வந்தார். இவர் வசிக்கும் சந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஶ்ரீநாத் என்ற இளைஞர். இவர் தன் ஊரில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு செல்போனில், ஐ லவ் யூ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் பெண் தன்னுடைய உறவினரான ரமேஷ் என்பவரிடம் ஶ்ரீநாத் தனக்கு செல்போனில் மெசேஜ் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மகேஷ்
மகேஷ்

இதனால் கோபமடைந்த ரமேஷ் தன் கூட்டாளிகளான ரவி, விஜயகுமார், ஜீவா, சுந்தரம், சபரி, சக்தி ஆகியோருடன் சேர்ந்து ஶ்ரீநாத்தை தாக்கி இருக்கிறார். ரமேஷிடம் அடிவாங்கிய ஶ்ரீநாத் தன் நண்பரான டூவீலர் பட்டறை உரிமையாளர் மகேஷிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகேஷ் உடனே ரமேஷையும் அவரது கூட்டாளிகளையும் அழைத்து ஏன் ஶ்ரீநாத்தை தாக்கினீர்கள்? என்று கேட்டு மிரட்டியதோடு, `மீண்டும் ஶ்ரீநாத்தை தாக்கினால் உங்களை நான் சும்மா விடமாட்டேன், தொலைத்து விடுவேன்' என்று எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார். இதிலிருந்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மகேஷின் மீது கோபத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் மகேஷ் நேற்று நள்ளிரவு மல்லூர் அருகே கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தாழம்பூ ஏரி பகுதியில் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மகேஷை சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியால் மகேஷை சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

விபரீதத்தில் முடிந்த காதல்; இளம்பெண் வாழ்க்கையில் விளையாடிய உறவினர்! - தாயைக் கொலை செய்த கொடூரம்

அதையடுத்து ரமேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவத்தை அறிந்த மல்லூர் காவல் ஆய்வாளர் அம்சவள்ளி சம்பவ இடத்துக்குச் சென்று மகேஷின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்தக் கொலையில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான ரவி, விஜயகுமார், ஜீவா, சுந்தரம், சபரி, சக்தி ஆகியோரைப் பிடிக்க சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் தனிப்படை அமைத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு