Published:Updated:

ஆந்திரா: 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - முன்னாள் காதலியை எரித்துக் கொன்ற இளைஞர்

கொலை
கொலை

காதலி, தன்னிடமிருந்து விலகியதால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை எரித்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம், தர்மாவரம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றிவந்த 19 வயதுப் பெண் காதல் பிரச்னையால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த சிநேகலதா - கூட்டி ராஜேஷ் ஆகியோர் ஓராண்டுக்கும் மேலாகக் காதலித்துவந்ததாகத் தெரிகிறது. கட்டட மேஸ்திரியாக ராஜேஷ் வேலை பார்த்துவந்தார். சிநேகலதா தேசிய அளவிலான ஹாக்கி வீராங்கனை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்த அடிப்படையில் சிநேகலதா, தர்மாவரம் எஸ்.பி.ஐ வங்கியில் பணியில் சேர்ந்திருக்கிறார். பணியில் சேர்ந்த சில காலத்திலேயே ராஜேஷைவிட்டு அவர் விலக ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜேஷ், தொடர்ந்து அவரைத் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்.

சிநேகலதா கொலை
சிநேகலதா கொலை

கடந்த செவ்வாய் அன்று மாலை நீண்டநேரமாகியும் மகள் வீட்டுக்கு வராததால், சிநேகலதாவின் பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தன் மகளைச் சில நாள்களாகத் தொந்தரவு செய்துவந்ததாக தாய் புகாரில் தெரிவித்திருந்தார்.

ராஜேஷைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில், பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சிநேகலதாவை சந்திக்க விரும்புவதாக ராஜேஷ் கடந்த செவ்வாயன்று பேசியிருக்கிறார். தனது இருசக்கர வாகனத்தில் சிநேகலதாவை அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பதனப்பள்ளி அருகே காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்திய ராஜேஷ், சிநேகலதாவிடம் கல்லூரி நண்பர் குறித்துக் கேள்வி எழுப்பி, சண்டையிட்டிருக்கிறார். அப்போது கோபமடைந்த ராஜேஷ் சிநேகலதாவைத் தாக்கியதுடன், கழுத்தைத் நெரித்துக் கொலை செய்திருக்கிறார். ஆத்திரம் அடங்காத ராஜேஷ், சிநேகலதாவிடமிருந்த வங்கி ஆவணங்களை எரித்து, சடலத்தின் மீது வீசியிருக்கிறார். இதனால், உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

கொலை
கொலை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயம் எதுவும் இல்லை. கழுத்தை நெரித்துக் கொன்ற காயங்கள் மட்டுமே இருக்கின்றன. ராஜேஷிடமிருந்து சிநேகலதாவின் செல்போனை மீட்டிருக்கிறோம். கால் ரெக்கார்டுகளை ஆய்வு செய்ததில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இருவரும் 1,618 முறை பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது’’ என்று போலீஸார் தெரிவித்தனர். இந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து #justiceforsnehalatha என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் சிநேகலதாவுக்காக நீதி கேட்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு