Published:Updated:

`தொடர்ந்து சிறார் உரிமை கோருவது கேலிக்கூத்து' - நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

`ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளி மீண்டும் மீண்டும் சிறார் உரிமை கோருவதை அனுமதித்தால், அது 'நீதிக்கான கேலிக்கூத்து' என்றார் காவல்துறை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கிலிடவுள்ள நான்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன்குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

2012-ம் ஆண்டு டெல்லியில், மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு வரும் 22-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்திருந்தது. தூக்கிலிடுவதற்கான அனைத்துப் பணிகளும் விரைவுபடுத்தப்பட்ட நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்.

இந்த மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்த நிலையில், ''இந்த நான்கு குற்றவாளிகளும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடப்படுவார்கள்'' என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, குற்றவாளிகளில் ஒருவரான பவன்குப்தா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், 'அந்தச் சம்பவம் நடந்தபோது தனக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அப்போது நான் ஒரு மைனர் என்பதால், இதிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்' என்றும் கோரியிருந்தார். அதற்கு ஆவணமாக, பவன்குப்தாவின் பள்ளிச் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தார். குப்தாவின் இந்த மேல் முறையீட்டு மனுவைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயாவிக்கு நீதி கேட்டு
நிர்பயாவிக்கு நீதி கேட்டு

`உங்களுடைய இந்த வாதத்தை ஏற்கெனவே சிறார் நீதிமன்றம் ஆராய்ந்துதான் நிராகரித்துள்ளது. மீண்டும் அதேவாதத்தை எழுப்புவது சரியான முறையாகாது. மேலும், இதுபற்றி இந்த வழக்கின்போதும் பலமுறை விவாதித்திருக்கிறோம்' என்று நீதிபதிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து வாதிட்ட பவன்குப்தாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங், ``குற்றம் நடந்த நேரத்தில் அவர் மைனர் என்று அவரது பள்ளிச் சான்றிதழைக் காட்டியும் எந்த நீதிமன்றமும் அதை ஆவணமாகப் பரிசீலிக்கவில்லை'' என்று வாதிட்டார். டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான பொது வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளி மீண்டும் மீண்டும் சிறார் உரிமை கோருவதை அனுமதித்தால், அது 'நீதிக்கான கேலிக்கூத்தாகும்'. இதையே குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஆயுதமாக பலருக்கும் அமைந்துவிடும் . எனவே, இந்த வாதத்தை அனுமதிக்கக்கூடாது என்றார்.

`கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் திகார்; தேர்தல் லாப கணக்கு!’- டெல்லி அரசை சாடும் நிர்பயா பெற்றோர்
நிர்பயாவுக்கு நீதி கேட்டு ஹேஷ்டேக்
நிர்பயாவுக்கு நீதி கேட்டு ஹேஷ்டேக்

மேலும், ``இந்த வழக்கு நடந்த அனைத்து நீதிமன்றங்களிலும் குப்தாவின் வயது 19 என்றே குறிப்பிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அவருடைய பெற்றோர்களே குப்தாவின் வயதை உறுதிசெய்துள்ளதாகவும் வாதாடினார். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பவன் குப்தாவின் மனுவைத் தள்ளுபடிசெய்தது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி, நான்கு பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில், குற்றவாளிகள் தரப்பில் வேறு யாரேனும் கருணை மனு சமர்பித்தால், மீண்டும் தூக்கிலிடப்படும் தேதி தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.

பின் செல்ல