Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இரண்டு ஆண்டுகள் நிறைவு...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

உண்மையை மறைக்க திட்டமிடுகின்றனவா விசாரணை அமைப்புகள்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இரண்டு ஆண்டுகள் நிறைவு...

உண்மையை மறைக்க திட்டமிடுகின்றனவா விசாரணை அமைப்புகள்?

Published:Updated:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் ரணம் ஒருபோதும் ஆறாது.

13 உயிர்கள் துள்ளத்துடிக்கக் கொல்லப்பட்டிருக்கின்றன. மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கமே மக்களைக் கொன்றழித்த அந்தக் கோரச் சம்பவம் நடந்து, மே 22-ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை, சி.பி.ஐ விசாரணை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பது குறித்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்டெர்லைட் ஆலை மூடுவது தொடர்பான வழக்கு குறித்து, சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமனிடம் பேசினோம். “ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவையும் எதிர்த்து ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தன. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம். வழக்கின் தீர்ப்பைப் பொறுத்துதான் அடுத்த கட்டம் என்ன என்பது தெரியும்” என்றார்.

துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை தொடர்பாகப் பேசிய மனித உரிமைச் செயற் பாட்டாளர் ஹென்றி டிபேன், “ஒரு நபர் ஆணையம், மாதத்தில் ஐந்து நாள்கள்தான் விசாரணை நடத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 500-க்கும் குறைவான நபர்களே விசாரிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள் என முக்கிய சாட்சிகளே விசாரிக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் தரப்பிலேயே 200 பேரிடம் விசாரணை நடத்த வேண்டிருக்கிறது. இதனால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும்மேல் விசாரணை நீடிக்கும். அதற்குள் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். மக்களும் இதை மறந்துவிடுவார்கள். தொடர்ச்சியாக மாதத்துக்கு 10 முதல் 15 நாள்கள் வரை விசாரணை நடத்தியிருந்தால், இந்நேரம் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.

துப்பாக்கிச்சூடு குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, காயம்பட்டவர்களின் குடும்பத் துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிவிட்டோம். தூத்துக்குடி மக்கள், இயல்புநிலைக்குத் திரும்பி விட்டனர். இந்தச் சம்பவம்குறித்து விசாரணை செய்ய மாநில அரசு சார்பில் ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது’ என அரசு பதில் அளித்துள்ளது.

இதையடுத்து, விசாரணையை பாதியில் நிறுத்திக்கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து விட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். 2019 செப்டம்பரில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழு பொது விசாரணைக்காக வந்தபோது, ‘துப்பாக்கிச்சூடு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என நான் மனு அளித்தேன். தற்போது வரை அதற்கு பதில் இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இரண்டு ஆண்டுகள் நிறைவு...

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுக்குழு நடத்திய விசாரணை அறிக்கையின் முடிவு வெளியிடப்படாமல் ரகசியம் காக்கிறார்கள். மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணையே நடத்தவில்லை. சி.பி.ஐ விசாரணையும் மந்தமாக உள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் மக்களுக்கு உண்மையைச் சொல்ல நினைப்பதைவிட, அந்தச் சம்பவத்தை மறக்கடிக்கும் வேலைகளில்தான் அரசு விசாரணை அமைப்புகள் முனைப்புடன் இருப்பதாகத் தெரிகிறது” என்றார்.

ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் தரப்பில் பேசினோம். “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற 19 கட்ட விசாரணையில், 704 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 445 சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர். 630 ஆவணங்கள் குறியீடு செய்யப் பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால் விசாரணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் விசாரணை தொடங்கும்” என்றனர்.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினராக இருந்த முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனிடம் பேசினோம். “விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும், பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஒரு நபர் ஆணையம் எப்படிப்பட்ட அறிக்கையைக் கொடுத்தாலும் அதை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தமெல்லாம் அரசுக்குக் கிடையாது. உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைக்கும் அவ்வளவுதான் மரியாதை. நீதி விசாரணை என்பது ஒருபோதும் நீதிமன்ற விசாரணை ஆகாது.

துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தன்னுடைய மேற்பார்வையில் எடுத்து விசாரித்தால் மட்டுமே விரைவான, நியாயமான தீர்வு கிடைக்கும். ‘ஸ்டெர் லைட் ஆலை திறப்பது தொடர்பான அரசுத் தரப்பு வாதங்கள் வலுவற்றதாக உள்ளன’ என நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆலை திறப்பு குறித்த அரசின் நிலைப்பாட்டை, அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. ஆனால், தமிழக அரசு அது தொடர்பாக எதுவுமே செய்யவில்லை” என்றார்.

துப்பாக்கிச்சூட்டில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த 17 வயது மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதாவிடம் பேசினோம். “அந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறி இரண்டு வருஷம் முடியப்போகுது. ஆனா, ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையே இன்னும் முடியலைன்னு நினைக்கும்போது கவலையா இருக்கு. ‘தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி’ன்னு சொல்வாங்க. ஆணையத்தின் விசாரணை தாமதமானாலும், 13 பேரின் இறப்புக்கும் நீதி கிடைக்கும்னு நம்புறேன். எங்களோட கடைசி நம்பிக்கையும் அதுதான்’’ என்றார்.