Published:Updated:

“என் இளமதியை என்னோடு சேர்த்து வெச்சுருங்க!”

செல்வன் - இளமதி
பிரீமியம் ஸ்டோரி
செல்வன் - இளமதி

கலங்கும் காதல் கணவர்... கடத்தல்காரர்களுக்கு அமைச்சர் ஆதரவா?

“என் இளமதியை என்னோடு சேர்த்து வெச்சுருங்க!”

கலங்கும் காதல் கணவர்... கடத்தல்காரர்களுக்கு அமைச்சர் ஆதரவா?

Published:Updated:
செல்வன் - இளமதி
பிரீமியம் ஸ்டோரி
செல்வன் - இளமதி
சாதியை மறுத்து சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதியரையும், அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தவரையும் கடுமையாகத் தாக்கி பெண்ணைக் கடத்திச் சென்ற சம்பவம், சேலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் கருப்பணன் இருப்பதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு, அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் செல்வன். பவானி குருப்பநாயக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்தை, திராவிடர் விடுதலைக்கழக தலைமைக் குழு உறுப்பினர் ஈஸ்வரன் செய்துவைத்தார். இந்த நிலையில்தான் மணமகன் செல்வன் மற்றும் திருமணத்துக்கு உதவிய ஈஸ்வரனை மிகக் கடுமையாகத் தாக்கி, பெண்ணைக் கடத்திச் சென்றிருக்கிறது ஒரு கும்பல். காயமடைந்த செல்வனும் ஈஸ்வரனும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெண்ணைக் கடத்தியவர்கள் மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை செய்துவருகிறது போலீஸ்.

மருத்துவமனையில் செல்வன் - ஈஸ்வரன்
மருத்துவமனையில் செல்வன் - ஈஸ்வரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிகிச்சையில் இருந்த செல்வனிடம் பேசினோம். ‘‘நான் பவானி பெருமாள்மலைப் பகுதியில ஒரு காட்டன் மில்லில் வேலைபார்க்கிறேன். அங்கதான் இளமதியைப் பார்த்தேன். நட்பா பழக ஆரம்பிச்சது, காதலாக மாறிச்சு. நான் என்ன சாதி, என் குடும்பச் சூழல் எல்லாத்தையும் இளமதிகிட்ட சொல்லியிருக்கேன். என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுதான் அவங்க என்னைக் காதலிச்சாங்க. மூணு வருஷம் காதலிச்சோம். வீட்டுல சொல்லி கல்யாணம் பண்றதுக்கு என் சாதி தடையா இருந்துச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்க ரெண்டு பேருமே பெரியார் சிந்தனை கொண்டவங்க. நான் திராவிடர் விடுதலைக் கழத்துல இருக்கேன். அதனால மேட்டூர்ல உள்ள பெரியார் படிப்பகத்துல வெச்சு சுயமரியாதை திருமணம் பண்ணிக்க முடிவெடுத்தோம். மார்ச் 9-ம் தேதி, மேட்டூர் வந்தோம். பெண் வீட்டுத் தரப்புல எதிர்ப்பு அதிகமாகிருச்சு. உடனே பிளானை மாத்தி, கொளத்தூர்ல உள்ள திராவிடர் விடுதலைக்கழகத் தோழர் ஈஸ்வரன் வீட்டுல பெரியார் சிலை முன்னால மாலை மாத்தி சுயமரியாதை திருமணம் செஞ்சுக்கிட்டோம்.

கருப்பணன் - தீபா கனிக்கர் - வேலுசாமி
கருப்பணன் - தீபா கனிக்கர் - வேலுசாமி

அன்னைக்கு சாயங்காலம், தோழர் ஈஸ்வரன் வீட்டுக்கு பெண் வீட்டார் சமரசம் பேச வர்றதா தகவல் வந்துச்சு. உடனே, இளமதியை அழைச்சுக்கிட்டு அய்யம் புதூர்ல சரவணபரத் என்கிற தோழர் வீட்டுக்குப் போயிட்டேன். ராத்திரி 8.30 மணிக்கு அம்பது அறுபது பேர் கும்பல் ஒண்ணு ஈஸ்வரனை அடிக்கிறதா தகவல் வந்துச்சு. உடனே நானும் இளமதியும் கொளத்தூர் மணி அண்ணனோட தோட்டத்துக்கு டூ வீலர்ல கிளம்பினோம். போற வழியில உக்கம் பருத்திக்காடு என்ற இடத்துல இளமதி வீட்டு ஆளுங்க எங்களை மறிச்சிட்டாங்க. சாதிப் பேரைச் சொல்லி என்னை கடுமையா தாக்கினாங்க. பாக்கெட்ல இருந்த செல்போனையும் 15,000 ரூபா பணத்தையும் பறிச்சுக்கிட்டு, இளமதியையும் கடத்திட்டுப் போயிட்டாங்க. அவங்க அடிச்சதைவிட, என் இளமதிக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம இருக்கிறதுதான் ரொம்ப வலிக்குது. எப்படியாவது என் இளமதியை மீட்டு என்னோடு சேர்த்து வெச்சுருங்க’’ என்றார் கண்ணீருடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஈஸ்வரன், ‘‘கொங்குநாடு மக்கள் கட்சி, பா.ம.க, அ.தி.மு.க ஆகிய மூணு கட்சிகளைச் சேர்ந்த ஆட்கள்தான் எங்களைத் தாக்கினாங்க. ராத்திரி 1.30 மணிக்கு வேன்ல ஏத்திக்கிட்டு மேட்டுப்பாளையம் புதூர் உயர் நிலைப் பள்ளிக்குக் கொண்டு போனாங்க. அங்கேயும் எங்களை அடிச்சித் துன்புறுத்தினவங்க, ‘உங்களைக் கொன்னு காவிரி ஆத்துல வீசிருவோம். கவுன்சிலர் வேலுசாமிக்காகக் காத்திருக்கோம்’னு மிரட்டினாங்க. அதுக்குள்ள ஸ்பாட்டுக்கு டி.எஸ்.பி செளந்திரராஜன் வந்துட்டதால, நாங்க உயிர்பிழைச்சோம். டி.எஸ்.பி வந்த பிறகும்,

‘அமைச்சர் கருப்பணன் பேசுறார்’னு சொல்லி போனை டி.எஸ்.பி-கிட்ட நீட்டினாங்க.

டி.எஸ்.பி அதை காதுல வாங்கிக்காம எங்களை ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டாரு’’ என்றார்.

இதுபற்றி பவானி பகுதி மாவட்ட கவுன்சிலரும், கவுன்சில் துணைத் தலை வருமான வேலுசாமியிடம் பேசினோம். ‘‘அவங்க தரப்புல பேசினா அவங் களுக்குச் சாதகமாத்தான் பேசுவாங்க. நான் சம்பவ இடத்துக்குப் போகலைனு சொல்ல மாட்டேன். சம்பவ இடத்துலதான் இருந்தேன். ஆனா, அங்க நடந்ததெல்லாம் வேற. இப்போ அதைப்பத்தி பேச முடியாது’’ என்றார்.

அமைச்சர் கருப்பணனிடம் கேட்டதற்கு, ‘‘நீங்க சொல்ற சம்பவத்தையே நியூஸ் பேப்பரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் யார்கிட்டேயும் போன்ல பேசல’’ என்றார்.

செல்வன்-இளமதி திருமணம் செய்துகொண்டபோது...
செல்வன்-இளமதி திருமணம் செய்துகொண்டபோது...

சேலம் எஸ்.பி-யான தீபா கனிக்கர், ‘‘குற்றச்செயலில் ஈடுபட்ட 80 சதவிகிதம் பேரை கைதுசெய்துவிட்டோம். இன்னும் சிலரையும் மணப்பெண்ணையும் டி.எஸ்.பி தலைமையிலான டீம் தீவிரமாகத் தேடிவருகிறது. விரைவில் பெண்ணை மீட்டுவிடுவோம். இதில் யாருடைய தலையீடும் இல்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism