Published:Updated:

`7 நாள் கஸ்டடி; வளைந்து கொடுக்காத முருகன்!' -நகைக்கடை கொள்ளை வழக்கில் திணறும் திருச்சி போலீஸ்

போலீஸ் கஸ்டடியில் திருவாரூர் முருகன்
News
போலீஸ் கஸ்டடியில் திருவாரூர் முருகன்

திருவாரூர் முருகனை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் வழங்கிய அவகாசம் இன்று மாலையோடு முடிவடைகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜூவல்லரியில் 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸாரின் தீவிர தேடுதலில் திருவாரூர் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்த தகவல்கள் வெளிவந்தன.

கடந்த 3-ம் தேதி இரவு, திருவாரூர் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுரேஷின் கூட்டாளி மணிகண்டனிடமிருந்து 4.5 கிலோ கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் முருகன், லலிதா ஜூவல்லரி மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் கிராமப்புற பின்தங்கிய வங்கிகள், பாதுகாப்பற்ற நகைக்கடைகளை குறிவைத்து கைவரிசை காட்டியதும் அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

போலீஸ் கஸ்டடியில் திருவாரூர் முருகன்
போலீஸ் கஸ்டடியில் திருவாரூர் முருகன்

ஆனால், முருகன் மற்றும் அவரது மைத்துனர் ஆகியோர் தலைமறைவானார்கள். அதன்காரணமாக போலீஸார், முருகனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை விசாரணை வளையத்துக்குக் கொண்டுவந்தனர். போலீஸாரின் நெருக்கடிகளுக்குப் பயந்து முருகன் மற்றும் அவரது மைத்துனர் சுரேஷ் தனித்தனியே நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.

கடந்த மாதம் 10-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை, அம்மாநில போலீஸார் அன்றைய இரவே கஸ்டடி எடுத்தனர். தொடர்ந்து திருச்சி அழைத்துவந்த அவர்கள், கொள்ளிடம் ஆற்றங்கரையில் முருகன் புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை எடுத்துச் சென்றனர். முன்னதாக முருகனிடம் நடத்திய விசாரணையில், திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்குகளில் தொடர்புடைய முருகனின் மைத்துனர் சுரேஷ், நண்பர் கணேசன் உள்ளிட்டோரை போலீஸார் கஸ்டடி எடுத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை வாடிப்பட்டி அருகே மலையடிவாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.30 கிலோ தங்கம் எடுக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து 54 நாள்கள் கர்நாடக போலீஸாரின் கஸ்டடியில் முருகன் இருந்தார். அவரை, தமிழக போலீஸார் கஸ்டடி எடுக்க தொடர்ந்து முயற்சி செய்தனர். அதன்பலனாய் கடந்த 26-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முருகன் தமிழகம் அழைத்துவரப்பட்டார். திருச்சி நீதித்துறை நடுவர் எண் 2, நீதிபதி திரிவேணி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஏழு நாள்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, திருச்சி இன்ஸ்பெக்டர் கோசலராம் தலைமையிலான போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 7 நாள் விசாரணையில் முருகன், ``கடந்த 1995-ம் ஆண்டு முதல் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறேன். இடையில் கோவையில் நடைபெற்ற திருட்டு வழக்கில் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டேன். தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அதன்மூலம் `போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி' என்கிற யுத்திகளைத் தெரிந்துகொண்டேன்.

போலீஸ் பிடியில் சுரேஷ்
போலீஸ் பிடியில் சுரேஷ்

இந்த நிலையில்தான், எனக்குச் சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. அதையடுத்து, என் அக்கா மகன் சுரேஷை வைத்து தெலுங்கில் 2 திரைப்படம் எடுத்தேன். எங்களின் போதாத காலம் அந்தப் படங்கள் வெளியாகவில்லை. ஆனாலும், சினிமா ஆசை விடவில்லை. அதனால் மீண்டும் படம் தயாரிக்க முடிவு செய்து கொள்ளையடிக்க ஆரம்பித்தேன்" என்று கூறியதாகச் சொல்கிறார்கள்.

தொடர்ந்து விசாரணையில், லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள நகைகள் குறித்து முருகனிடம் கேட்டார்களாம். ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாத முருகன், கடந்த சில நாள்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் போலீஸார், தங்கள் பாணி விசாரணையைத் தொடரமுடியவில்லை என்கிறார்கள். மேலும், முருகனிடம் போலீஸார், `நீ கேட்பதையெல்லாம் வாங்கித் தருகிறோம், மீதமுள்ள நகைகளை எங்கே வைத்திருக்கிறாய் என்ற உண்மையைச் சொல்லிவிடு' எனக் கெஞ்சாத குறையாகக் கேட்டார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு முருகன்,``என்னிடம் இருந்த நகைகள் எல்லாம் பெங்களூரு போலீஸாரிடம் எடுத்துக்கொடுத்துவிட்டேன். பொட்டு நகைகூட எங்களிடம் இல்லை. இருந்தால்தானே கொடுப்பதற்கு?' என்றாராம். மேலும், ``திருச்சியில் கொள்ளையடித்த எந்த நகையும் எங்களிடம் இல்லை.

ஆனால் ஏற்கெனவே, நாங்கள் கொள்ளையடித்த நகைகள் யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கிறேனா என யோசித்துச் சொல்கிறேன்” என்றும் கூறியதாகச் சொல்லப்படுகிறது. மீதமுள்ள நகைகளைக் கணக்குக் காட்டவேண்டிய சூழலில், தமிழக போலீஸார் உள்ளனர். இன்று மாலைக்குள் போலீஸ் கஸ்டடி முடிகிறது. இதனால், இன்று மாலையோ அல்லது நாளையோ முருகனை பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், முருகன் கொள்ளையடித்த நகைகளில் 1.25 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொள்ளையடித்த பின்னர், மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பிரசன்னா உள்ளிட்ட நகை வியாபாரிகள் மூலம் நகைகளை உருக்கி பணமாக மாற்றியது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைப் பிடித்துவந்து, ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், அவரிடமிருந்து 1.25 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னொரு தரப்போ, சுமார் 56 பவுன் தங்கம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

`` பெங்களூரு போலீஸார் எடுத்துச்சென்ற லலிதா ஜூவல்லரிக்குச் சொந்தமான 12 கிலோ தங்க நகைகளைத் தமிழகம் கொண்டுவரக் காலதாமதமாகிறது. கொள்ளிடம் ஆற்றில் புதைக்கப்பட்ட தங்க நகைகளை எடுத்த பெங்களூரு போலீஸார், பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு ஒப்படைப்பதாக எடுத்துச்சென்றனர். இத்தனை நாள் ஆகியும், 12 கிலோ தங்க நகைகளை ஒப்படைக்கவில்லை" என்கின்றனர் திருச்சி போலீஸார்.