Published:Updated:

பள்ளிகளில் தொடரும் பாலியல் அத்துமீறல்கள்... தடுப்பதற்குத் தேவை கூட்டுப் பொறுப்பு!

இந்தச் சமுதாயம் கேள்வி கேட்கவேண்டியது அந்தப் பெண்ணை இல்லை. குற்றம் செய்த அந்த நபரைத்தான். ஆனால், இங்குப் பாதிக்கப்படுவது என்னவோ அந்தப் பெண்ணும், அந்தப் பெண்ணின் குடும்பமும்தான். இந்தச் சந்தர்ப்பத்தைத்தான் தவறு செய்பவர்களும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

கோவை உக்கடம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த 11-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவி இறப்பதற்கு முன்பு `யாரையும் சும்மா விடக் கூடாது' என்று ஒருசில பெயர்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தல் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி

இந்தப் புகாரை அடுத்து, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திமீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் வழங்கியும், அந்தப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

தொடரும் பாலியல் வன்முறைகள்...

சிவசங்கர் பாபா, சென்னை அருகிலுள்ள கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் சிவசங்கர் பாபாமீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைதுசெய்யப்பட்டார். மேலும், இவருக்கு உதவியதாக அந்தப் பள்ளியின் நடன ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிவசங்கர் பாபாமீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சிவசங்கர் பாபா, ராஜகோபாலன்
சிவசங்கர் பாபா, ராஜகோபாலன்

சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சோஷத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றுபவர் ராஜகோபாலன். இவர் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அநாகரிகமாகவும், இரட்டை அர்த்தத்திலும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டை அடுத்து, ராஜகோபாலன்மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்து்ம் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடரும் சம்பவம்... தீர்வுதான் என்ன?

சமீபகாலங்களாக, சில பள்ளி ஆசிரியர்களால் மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இப்படி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காரணம் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர், அ.தேவநேயனிடம் பேசினோம். ``அனைத்து ஆசிரியர்களையும் குற்றவாளிகள் என்று கூறுவது தவறானது. இன்றளவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் நடைபெறும் பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன.

தேவநேயன் குழந்தைகள் உரிமை ஆர்வலர்
தேவநேயன் குழந்தைகள் உரிமை ஆர்வலர்
விகடன்

இங்கு எத்தனையோ ஆசிரியர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றார்கள். பள்ளியில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைத்திருக்கிறார்கள். குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். மாணவர்களை உயர்கல்வி வரை படிக்க வைத்துள்ளனர். ஏதோ ஒருசில இடங்களில் நடைபெறும் குற்றங்களுக்கு அனைவரையும் குற்றம் சொல்வது மிகவும் தவறானது. இங்கு காவல்துறை முதல் அரசு அலுவலகங்கள் வரை பாலியல் அத்துமீறல்கள் நடைபெறாத ஏதாவது ஓர் இடம் உண்டா?'' என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ``சமீபகாலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கிறன. காரணம், நடக்கும் தவறுகள் வெளியே தெரியவருகிறது என்பதுதான். மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுதான் நாம் கூறுகிறோம். பெற்றோர்களுக்கு அடுத்தபடியாகவும், தெய்வங்களுக்கு மேலாகவும் பார்க்கப்படும் ஆசிரியர்கள்தான் அதிகம் புகழவும்படுவார்கள்; அதிகம் திட்டவும் படுவார்கள். `இந்த ஆசிரியர் மட்டுமில்லையென்றால் நான் மாடு மேய்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்' என்று சொல்பவர்களும் உண்டு. `இந்த ஆசிரியரால்தான் என் பள்ளி வாழ்க்கையே பாழானது' என்று கூறுபவர்களும் உண்டு.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகளின் நலனை உறுதி செய்வதற்காக மட்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள். ஒரு குழந்தை பாதிக்கப்பட்ட பின்போ அல்லது இறந்ததற்குப் பின்போ அந்தக் குற்றத்துக்கு நடவடிக்கை எடுப்பது மட்டும் அவர்களின் பணியாக இருந்துவிடக் கூடாது. அதற்கு முன்பே, எந்த ஒரு குற்ற நிகழ்வும் நடைபெறாமல் தடுப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் அறிவிப்பு 121/2012-ன்படி, ஓர் ஆசிரியர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், அவர்களின் கல்விச் சான்றிதழ் அனைத்தும் ரத்து செய்யப்படும். இதுவரை கிட்டத்தட்ட 200 ஆசிரியர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்டது என்னவோ வெறும் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களின் மீது மட்டுமே. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்கெனவே ஒரு கட்டமைப்பு இருந்தாலும் அது சரியாகச் செயல்படுவது கிடையாது என்பதே உண்மை நிலவரம். அந்த அமைப்பு சரியாகச் செயல்படுவதை அரசு மட்டுமே உறுதி செய்ய முடியும்" என்று பேசினார்.

அம்மாவின் சம்பளப் பணத்தை வாங்கச் சென்ற பள்ளி மாணவி! - பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் தலைமறைவு

மேலும், ``தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், `குழந்தை உரிமை பாதுகாப்பு கொள்கை'யை கொண்டுவர உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளன. ஆனால், இது இன்றுவரை நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை. கர்நாடகா, கேரளா போன்ற நமது அண்டை மாநிலங்களில் இந்தக் கொள்கை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவர்கள் அடங்கிய குழு உருவாக்கப்படும். அந்தக் குழு மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அதேபோல, உணவகங்களிலும், பொது இடங்களிலும் புகார் தெரிவிக்க எண்கள் எழுதிப்போடப்பட்டிருப்பதைப்போல, ஒவ்வொரு பள்ளியிலும் புகார் எண்கள் எழுதிப்போட வேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஒரு பள்ளியில் சேர்க்கும்போது அந்தப் பள்ளியின் கட்டமைப்பு எப்படியிருக்கிறது என்பதை ஆராயாமல், அந்தப் பள்ளியில் படித்தால் நமது பிள்ளை பாதுகாப்பாக இருக்குமா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக, குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் நடைபெறும்போது, அவர்களுக்கு ஆதரவாக உடனிருக்கவேண்டியது அவர்களின் பெற்றோர்கள்தான்" என்று பேசினார்.

மா.இராதாகிருஷ்ணன்
மா.இராதாகிருஷ்ணன்

இது குறித்து சமூக ஆர்வலர் மா.இராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``இங்கு பல பள்ளி மாணவிகளுக்குத் தங்களுக்குப் பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல் நடைபெற்றதே பல ஆண்டுகளுக்குப் பின்னரோ அல்லது அவர்கள் பொதுச் சமூகத்துடன் பழக ஆரம்பித்த பின்னரோதான் தெரியவருகிறது. மாணவர்கள் பலருக்கும் எதெல்லாம் பாலியல் சீண்டல்கள், அவர்கள் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதே தெரிவதில்லை. அப்படி அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது தெரியவந்தாலும் அதை வெளியில் சொல்லலாமா, கூடாதா... அப்படிச் சொன்னால் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள், இந்தச் சமுதாயம் என்ன நினைக்கும் என்ற கவலைதான் பலரையும் தவறான முடிவெடுக்கக் காரணமாகிவிடுகிறது.

சில கல்வி நிலையங்களில் `மொட்டக் கடுதாசி' என்ற திட்டத்தை நாங்கள் பரிசோதனை செய்துபார்த்தோம். அதில் மாணவர்கள் தங்களின் பெயர் உள்ளிட்ட எந்த விவரத்தையும் குறிப்பிடாமல், அவர்களின் புகார்களைத் தெரிவித்தார்கள். அந்தப் புகார்களுக்குத் தீர்வும் காணப்பட்டது. இங்கு மாணவர்களின் சுயவிவரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை நாம் வழங்கினால் கண்டிப்பாக அவர்கள் தங்களின் புகார்களை தைரியமாகக் கூறுவார்கள்" என்றார்.

மேலும்,``ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளானேன் என்று குற்றம் தெரிவித்தால் இந்த சமுதாயம் கேட்கும் முதல் கேள்வி. `நீ என்ன செய்தாய்' என்பதாகத்தான் இருக்கிறது. அந்தக் கேள்விக்குப் பயந்துதான் பலரும் வெளியில் சொல்வதில்லை. இந்தச் சமுதாயம் கேள்வி கேட்கவேண்டியது அந்தப் பெண்ணை இல்லை. குற்றம் செய்த அந்த நபரைத்தான். ஆனால், இங்கு பாதிக்கப்படுவது என்னவோ அந்தப் பெண்ணும், அந்தப் பெண்ணின் குடும்பமும்தான். இந்தச் சந்தர்ப்பத்தைத்தான் தவறு செய்பவர்களும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களுக்கு நடக்கும் அநீதியைக்கூட ஒரு மாணவரால் தைரியமாகச் சொல்ல முடியவில்லையென்றால். அந்த நிலைமைக்குப் பெற்றோர்களும், இந்தச் சமுதாயமும்தான் பொறுப்பேற்க வேண்டும். கண்ணகி நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணுக்காகப் புகார் தெரிவிக்க, காவல் நிலையத்துக்குச் சென்றோம். அங்கு போக்சோ வழக்குகள் மிகவும் மெத்தனமாகத்தான் கையாளப்படுகின்றன என்பதே உண்மை. இதே போன்ற இரண்டு அனுபவம் எங்களுக்கு உண்டு. ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து முடிந்து, அந்தப் பிரச்னை பூதாகரமானால் அங்கு வரும் காவல்துறை, அ துகுறித்து முன்பே ஒரு புகார் வரும்போது அதற்குக் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்" என்று பேசினார்.

சைல்ட் லைன்
சைல்ட் லைன்

மாணவர்களுக்கு இது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடைபெறும்போது, தண்டிக்கப்படவேண்டியது தவறு செய்தவர்கள்தான். ஆனால், எந்தத் தவறும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகள் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அதே சமயம், தவறு செய்தவர்கள் இந்தச் சமூகத்தில் சாதாரணமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் வன்முறை முதல் குழந்தைத் திருமணம் வரை குழந்தைகளுக்கு ஏற்படும் எந்தவிதப் பிரச்னை ஏற்பட்டாலும் 1098 என்ற குழந்தைகளுக்கான உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த உதவி மையத்தால், வந்திருக்கும் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

6 மாதத்தில் 400 பேரால் பாலியல் வன்கொடுமை - வேலை தேடிச்சென்ற இடத்தில் சிறுமிக்கு  நேர்ந்த கொடூரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு