Published:Updated:

வேலூர்: மாணவியிடம் அத்துமீறல்; வலைவீசிய போலீஸ்! - நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் ஆசிரியர்

ராஜா
ராஜா

பள்ளி மாணவிக்கு நான்கு ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை கொடுத்துவந்த புகாரில், போலீஸாரால் தேடப்பட்டுவந்த ஆரணியைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 32). திருமணம் ஆன இவர், 2016-ம் ஆண்டில் ஆரணியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில் அவர், 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஓர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ராஜா, ஆசிரியப் பணியிலிருந்து விலகி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். அப்போதும் அவர், அந்த மாணவிக்குப் பல வழிகளில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கல்வியாண்டில், மாணவி ப்ளஸ் டூ முடித்துள்ளார். இந்தநிலையில், மாணவியின் வீட்டுக்கே சென்று அத்துமீறுவதாகவும், மிரட்டல்விடுப்பதாகவும் ராஜா மீது புகார் வாசிக்கிறார் மாணவியின் தாய்.

பாலியல் தொல்லை (Representational Image)
பாலியல் தொல்லை (Representational Image)

மகளிடம் நான்கு ஆண்டுகளாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவந்த ராஜா குறித்து, திருவண்ணாமலை எஸ்.பி-யிடம் புகாரளித்தார் மாணவியின் தாய். எஸ்.பி உத்தரவின்பேரில், ஆரணி மகளிர் போலீஸார், ராஜாமீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிந்து அவரைக் கைதுசெய்யத் தீவிரம் காட்டினர். தனிப்படை அமைத்தும் அவரைப் பிடிக்க திருவாரூர் விரைந்தனர். அங்கு அவரில்லை. ஆரணியிலுள்ள தன் வீட்டுக்கும் வராமல் தலைமறைவானார். போலீஸார், அவரின் செல்போன் சிக்னலை ஆய்வுசெய்து, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திவந்தனர். இந்தநிலையில், வேலூர் ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட் எண்-1 நீதிமன்றத்தில் ராஜா சரணடைந்துள்ளார். மாஜிஸ்ட்ரேட் முகிலாம்பிகை, அவரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில்வைத்து நாளை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்தியச் சிறையில் ராஜா அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு