Published:Updated:

கடவுளின் பெயரால் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள்... கேள்வி எழுப்பும் `கர்த்தாவின்டே நாமத்தில்'!

இந்தியாவைப் பொறுத்தவரை பிரேமானந்தா தொடங்கிதான் இதுபோன்ற குற்றச்சர்ச்சைகள் வலுத்தன.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

புனிதத்துக்குப் பெயர்போன வழிபாட்டுத் தலங்கள், மடங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது.1994-ல் தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்கிற குற்றச்சாட்டில் திருச்சியில் ஆசிரமம் நடத்திய சாமியார் பிரேமானந்தா கைது செய்யப்பட்டார். மேலும், பல பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் குற்றங்கள்
பாலியல் குற்றங்கள்

கடலூர் சிறையில் காலம் கழித்த பிரேமானந்தா 2011-ல் கல்லீரல் நோயால் இறந்துவிட்ட நிலையில் இன்றளவும் அவருக்கான பீடம் இயங்கிவருகிறது. அவருக்கான பக்தர்கள் கூட்டம் இன்னமும் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பிரேமானந்தாவுக்குப் பிறகுதான் இதுமாதிரியான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின.

'பிடதி' நித்யானந்தா, குழந்தைகளைக்கூட விட்டுவைத்ததில்லை என்ற பகீர் தகவல்களைப் பகிர்கிறார் அவரது பீடத்தில் இத்தனை நாள்கள் இணைந்து இயங்கிய ஜனார்த்தனன். குஜராத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாநில அரசு மூடியிருக்கிறது. கனடாவைச் சேர்ந்த அவரின் முன்னாள் சீடர் ஒருவர் நித்யானந்தாவால் தான் பாதிக்கப்பட்டது குறித்துச் சொல்லப்போக, நித்தியின் ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் அவருக்கு எதிராகக் களமிறங்கியது. கரீபியன் தீவுகளில் ஒன்றை அவர் மொத்தமாக வாங்கிவிட்டதாகவும் பாஸ்போர்ட் வசதியுடன்கூடிய கைலாசா என்னும் நாட்டை உருவாக்கிவருவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

கன்னியாஸ்திரி லூசி களப்புரா
கன்னியாஸ்திரி லூசி களப்புரா

இந்த வரிசையில், கத்தோலிக்கத் திருச்சபையில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்கிற பெயரில் அதுகுறித்து ஒரு புத்தகமே வெளியாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட கேரள பிரான்சிஸத் திருச்சபையைச் சேர்ந்த சகோதரி லூசி, களப்புராவின் வாழ்க்கை வரலாற்று நூலான அதைப் பத்திரிகையாளர் ராமதாஸ் என்பவர் தொகுத்திருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள இந்தப் புத்தகத்தில் கன்னியாஸ்திரிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பல செய்திகள் இடம்பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் உயர் பொறுப்பில் இருந்த பிஷப் பிராங்கோ, கன்னியாஸ்திரி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த வருடம் கேரளாவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிராங்கோவின் குற்றங்களை நேரில் கண்ட சாட்சியாகக் கூறப்பட்ட அதே திருச்சபையைச் சேர்ந்த ரவி என்பவர் மர்மமான முறையில் இறந்துபோனார். பெண்கள் அமைப்புகள் பிராங்கோவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கின. திருச்சபைகள் இதுகுறித்து மௌனம் காத்துவந்த நிலையில், பிரான்சிஸத் திருச்சபையின் சகோதரி லூசி களப்புரா அந்த போராட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். திருச்சபையில் நடக்கும் குற்றங்கள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து பேசிவந்தார்.

பிஷப் பிராங்கோ
பிஷப் பிராங்கோ

'திருச்சபை விவகாரங்கள் குறித்துப் பொதுவில் பேசக்கூடாது' என அவர் பலமுறை திருச்சபையால் எச்சரிக்கப்பட்டார். கன்னியாஸ்திரிகளுக்கான விடுதியில் அவர் தங்கியிருந்த அறைக்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு அவர் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டார். கடந்து ஆகஸ்ட் மாதத்தில் அவரை திருச்சபையிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. நேற்றுகூட, தங்கள் திருச்சபையின் பெயரைக் கெடுத்துவிட்டதாக அவரது வீட்டின்முன் நின்று பலர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

'கார் வாங்க வங்கியில் லோன் எடுத்தது, முன் அனுமதியின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது, சுடிதார் போன்ற உடைகளை அணிந்தது, தொலைக்காட்சிப் பேட்டிகளுக்குச் சென்றுவிட்டு விடுதிக்கு இரவில் தாமதமாக வருவது, டிரைவிங் லைசென்ஸ் பெற்றது, புத்தகம் வெளியிட்டது, தனது தலைமையின் அனுமதியில்லாமல் பணத்தைச் செலவழித்தது போன்ற 'தீவிர குற்றங்களில்' அவர் ஈடுபட்டது காரணமாகக் கூறப்பட்டது. திருச்சபையிலிருந்து வெளியேறிய லூசி, 2003 தொடங்கி தன் திருச்சபை வாழ்வில் எதிர்கொண்ட போராட்டங்களைப் பற்றி புத்தகத்தில் பேசியிருக்கிறார்.

லூசி களப்புரா
லூசி களப்புரா
"2004 - 2005 காலகட்டத்தில்தான் முதன்முதலில் இந்த புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். இயேசு நாதர் எங்களுக்கு அன்பு செய்யத்தான் கற்றுக்கொடுத்தார். கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் இதுபோன்ற அழுக்குகளைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. அதன் தாக்கம்தான் இந்தப் புத்தகம்" என்கிறார்.

திருச்சபைகளில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கும்போது கன்னியாஸ்திரிகள் அந்தக் குற்றத்தைப் பற்றி வெளியே சொல்லக் கூடாது என அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று பிராங்கோ விவகாரத்தில் சகோதரி ஜெஸ்மி என்பவர் கூறிய கருத்தை இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. திருச்சபைகளைச் சேர்ந்த ஆண்-பெண் இணைந்து வாழவிருப்பப்படும் நிலையில் அதற்காக அனுமதி அளித்து அவர்களுக்கு திருச்சபைகள் உதவ வேண்டும்" என்கிறார் லூசி.

இப்படியான அவரது கருத்துகள் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தன. ஜெஸ்மியும் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஜெஸ்மி
ஜெஸ்மி

கேரள கத்தோலிக்கத் திருச்சபைகளில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவருகின்றன. கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெஸ்மி, லூசிக்கு முன்பே திருச்சபைகளில் நிகழும் குற்றங்களைத் தனது 'ஆமென்' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற குற்றங்களில் அதிகபட்சமாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் திருச்சபைகளில் இருந்து நீக்கப்படுவது மட்டுமே நிகழ்கிறது.

இந்திய கத்தோலிக்க பிஷப் சபைகளின் கேரள உறுப்பினர், பங்குத்தந்தை மேத்யூ அரக்கலைத் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசினேன். "தற்போதைக்கு பிராங்கோ விவகாரம் பற்றி நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது" என்றார் அவர். இத்தனைக்கும் கத்தோலிக்க பிஷப் சபை, பணியிடத்தில் நிகழும் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டதிட்டங்களை வரையறுத்துள்ளது. கேரள பெண்கள் வாரியத்தின் தலைவர் ஜோஸபினிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பினேன், "எந்தப் பதிலாக இருந்தாலும் நீங்கள் ஆர்.டி.ஐ வழியாகப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று முடித்துக்கொண்டார்.

ஜோஸபின்
ஜோஸபின்

மதம் சார்ந்த குழுக்களுக்கான அமைப்புகளும் அதற்கான விதிமுறைகளும் இருக்கும்போதே இதுதான் நிலை என்னும்போது, எந்தவித அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் வராமல் தனி நாடுகளை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட மனிதர்களை சட்டம் என்ன செய்யும் என்பது கேள்விக்குறி. இத்தனை பாலியல் வன்முறைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றமிழைத்தவர்கள்போல ஒளிவுமறைவான வாழ்க்கை வாழ வேண்டியதாக இருக்கிறது அல்லது லூசி போல கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதுதான் பெண்கள் மீது ஜனநாயகம் திணித்துவிட்ட சாபம்.

நித்யானந்தா உண்மையில் எங்கே இருக்கிறார்? #Nithyananda #Kailaasa