சமூகம்
Published:Updated:

போலீஸ் வேடத்தில் பாலியல் வன்கொடுமை... பாதுகாப்பு இல்லாத என்.ஐ.டி வளாகம்!

என்.ஐ.டி வளாகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
என்.ஐ.டி வளாகம்!

திருச்சி திகில்

திருச்சி - தஞ்சைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் கல்வி நிறுவனம் ஒன்றில், விடுதியில் தங்கி பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது, அந்த வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம் அருகே உள்ள சிறு நகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆகஸ்ட் 4-ம் தேதி காலை துவாக்குடி காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தபோதுதான், இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது.

போலீஸ் வேடத்தில்
பாலியல் வன்கொடுமை...
பாதுகாப்பு இல்லாத என்.ஐ.டி வளாகம்!

விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவி, ஆகஸ்ட் 1 மற்றும் 2-ம் தேதிகளில் தன் காதலனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, 3-ம் தேதி அதிகாலையில் துவாக்குடிக்கு வந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால், விடுதிக்குள் செல்ல இயலாது. ஆகையால், என்.ஐ.டி-க்கு எதிரே உள்ள பேருந்துநிறுத்தத்தில் தன் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார். ‘அந்தச் சமயத்தில் பைக்கில் ஒருவர் வந்தார். தன்னை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களை மிரட்டினார். என் காதலரைத் தாக்கி, விரட்டினார். பிறகு, கல்லூரியில் விட்டுவிடுவதாகக் கூறி வலுக்கட்டாயமாக என்னை பைக்கில் ஏற்றிக்கொண்டார். தனிமையான இடத்துக்கு என்னை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்’ என்று வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார் அந்த மாணவி.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மத்திய அரசுத் துறையில் முக்கியப் பதவியில் இருப்பவர் என்பதால், இந்த விவகாரம் வெளியானதும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

போலீஸ் வேடத்தில்
பாலியல் வன்கொடுமை...
பாதுகாப்பு இல்லாத என்.ஐ.டி வளாகம்!

போலீஸார், உடனடி நடவடிக்கையில் இறங்கினர். துவாக்குடியை அடுத்த வாழவந்தான்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர்தான் குற்றவாளி என உறுதிசெய்து, அவரை கைது செய்தனர். அவர்மீது ஏற்கெனவே திருட்டு, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

என்.ஐ.டி ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘கைதுசெய்யப்பட்டுள்ள மணிகண்டன், இந்தப் பகுதியில் உள்ள பல கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா சப்ளை செய்துவருகிறார். அந்த வகையில், கடுமையான கட்டுப்பாடுகள்கொண்ட என்.ஐ.டி-க்குள்ளும் மணிகண்டனால் சர்வசாதாரணமாகப் போய் வர முடியும். அந்த தைரியத்தில்தான், இந்த மாணவியை கல்லூரி வளாகத்திலேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளார். என்ன காரணத்தாலோ, சம்பவம் நிகழ்ந்த இடம், நேரம் போன்ற விவரங்களை போலீஸார் மாற்றி வழக்குப் பதிவுசெய்துள்ளனர். இதனால் குற்றவாளி தப்பிவிட வாய்ப்புள்ளது. இதுபோன்று வேறு சில சம்பவங்களும் இங்கு நடைபெற்றிருக்கலாம் என்றும் நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

போலீஸ் வேடத்தில்
பாலியல் வன்கொடுமை...
பாதுகாப்பு இல்லாத என்.ஐ.டி வளாகம்!

எட்டு கொலைகள் செய்ததாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சப்பாணி என்பவர் கைதுசெய்யப்பட்டார். என்.ஐ.டி வளாகத்தில் சடலங்களை வீசியதாகக் கூறி, உடல்களை அவர் அடையாளம் காட்டினார். இப்போது, கல்லூரி வளாகத்துக்குள்ளேயே பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றனர்.

என்.ஐ.டி-யின் மக்கள் தொடர்பு அதிகாரியான பேராசிரியர் சிவகுமாரிடம் பேசினோம். ‘‘கல்லூரி வளாகம் முழுக்க 24 மணி நேரப் பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. அந்த மாணவி, கல்லூரி வளாகத்தில் வைத்து பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதில் துளியும் உண்மையில்லை’’ என்றார்.

இதுகுறித்து எஸ்.பி அலுவலக இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் பேசியபோது,

போலீஸ் வேடத்தில்
பாலியல் வன்கொடுமை...
பாதுகாப்பு இல்லாத என்.ஐ.டி வளாகம்!

‘‘இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கைதுசெய்துள்ளோம். அந்த நபர் தன்னை ‘ஹோம்கார்டு போலீஸ்’ எனக் கூறிக்கொண்டு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். புகார் வந்த சில மணி நேரத்தில் குற்றவாளியைக் கைதுசெய்துள்ளோம். சம்பவம் வெளியில்தான் நடந்தது. சிலர் வேண்டுமென்றே பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள். போலீஸார் இந்த விஷயத்தில் எதையும் மாற்றவில்லை’’ என்றார்.

கைதுசெய்யப்பட்டு காவலில் உள்ள மணிகண்டன் வழுக்கி விழுந்ததால், அவரின் கை மற்றும் காலில் மாவுக்கட்டு போடப்பட்டிருப்பதாக, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் இரு சம்பவங்கள்!

சில மாதங்களுக்கு முன்பு திருச்சி, சிறுகனூர் வனப்பகுதியில் மாணவர் ஒருவர், தன் காதலியான கல்லூரி மாணவியுடன் பேசிக்கொண்டிருந்தார். காதலனைத் தாக்கிய மர்ம நபர்கள், மாணவியைக் கூட்டு பலாத்காரம் செய்தனர். காதலியைக் காப்பாற்றப் போராடிய காதலன் கொலை செய்யப்பட்டார். ஆனால், குற்றவாளிகள் பைக் திருடப் போனதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாகவும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஜூலை 23-ம் தேதி அதே சிறுகனூர் வனப்பகுதியில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ‘‘இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க வேண்டும். அந்தப் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்’’ என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராடிவருகிறது.