அலசல்
அரசியல்
Published:Updated:

பெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமாகிறதா உத்தரப்பிரதேசம்?

உயிர் குடிக்கும் உன்னாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் குடிக்கும் உன்னாவ்

உயிர் குடிக்கும் உன்னாவ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கும் தொடர் பாலியல் வன்முறைகளால் தேசமே வெட்கித் தலைகுனிகிறது. ‘மேக் இன் இந்தியா என்பதை மாற்றி ரேப் இன் இந்தியா என வைத்துக்கொள்ளுங்கள்’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ‘பாலியல் குற்றங்களின் தலைநகரம் இந்தியா’ என்று ராகுல் காந்தி கொந்தளித்துள்ளார். இதன் பின்னணியில் இருக்கிறது உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம்.

2019-ம் ஆண்டில் மட்டும் அங்கே 86 பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன. இதன் உச்சமாக பாலியல் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவரை, அந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்களே எரித்துக் கொன்றனர். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உன்னாவ் மாவட்டத் தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளானார். இதுதொடர்பாக சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி சகோதரர்கள் கைதுசெய்யப் பட்டனர். பிறகு, அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இதற்கிடையே, பாலியல் வன்முறை செய்த பெண்ணை சிவம் திரிபாதி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப் படுகிறது. ஆனால், வழக்கை வாபஸ் வாங்க வைக்கவே சிவம் திரிபாதி தன்னை திருமணம் செய்துகொண்டு வாழ்வதுபோல் நாடகமாடி யதை அந்தப் பெண் அறிந்துகொண்டார்.

குட்டு உடைந்ததால், இரண்டு திரிபாதிகளும் இணைந்து அந்தப் பெண்ணைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தனர். நண்பர்கள் மூன்று பேரை கூட்டுசேர்த்துக்கொண்டனர். டிசம்பர் 5-ம் தேதி வழக்கு விசாரணைக்காக ரேபரலி நீதிமன்றத் துக்குச் சென்ற அந்தப் பெண்ணை சிவன்-சுபம் அடங்கிய கும்பலில் மூன்று பேர் பிடித்துக்கொள்ள, இருவர் மளமளவென பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர். உடல் பற்றி எரிய அந்தப் பெண் உதவி கேட்டு ஓடியுள்ளார். நீதிக்காகப் போராடியவர் முடிவில் கரிக்கட்டை யாகி வீழ்ந்து, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்து வரை பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட ரணம் ஆறுவதற்குள், உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், ஒட்டு மொத்த தேசத் தையும் கொதிக்கவைத்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை எரித்த ஐந்து பேரையும் போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

உயிர் குடிக்கும் உன்னாவ்
உயிர் குடிக்கும் உன்னாவ்

உன்னாவ் பெண்ணின் அடக்கம் நடந்த அதே தினத்தில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஷாஃபர் நகர் மாவட்டத்தில் ஷாகுர் என்ற கிராமத்தில் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளான 30 வயது மதிக்கத்தக்க பெண்மீது ஆசிட் வீசப்பட்டது. இதைச் செய்ததும், அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள்தாம்.

அடுத்ததாக, மிர்ஷாபூரில் 15 வயது மாணவி யைக் கடத்திச் சென்று நான்கு பேர்கொண்ட கும்பல் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட மகேந்திர குமார் யாதவ், ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர்.

உன்னாவ் மாவட்டம், பாலியல் வன்முறைச் சம்பவங்களால் ஏற்கெனவே கறை படிந்துதான் கிடக்கிறது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பங்கர்மாவ் சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான குல்தீப் சிங் செங்கார், 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக, 2017-ம் ஆண்டு புகார் எழுந்தது. தொடர்ந்து குல்தீப் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை, போலீஸ் கஸ்டடியில் அடைக்கப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில் இறந்தார். அவரது மரணத்தின் மர்மம் விலகவில்லை. பாதிக்கப்பட்ட பெண் நீதி கேட்டு உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பிறகே, குல்தீப் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கட்சியைவிட்டு நீக்கப்பட்ட குல்தீப், தற்போது திகார் சிறையில் உள்ளார்.

இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று உன்னாவ். சர்ச்சை சாமியார் சாக்‌ஷி மகராஜ்தான் இந்தத் தொகுதியின் எம்.பி. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறைகள் அதிகம் நடப்பதற்கு போலீஸாரின் அலட்சியப் போக்கும் முக்கிய காரணம்.

சில நாள்களுக்கு முன், இந்துப்பூரில் ஒரு பெண்ணை மூன்று பேர் நடுரோட்டில் மானபங்கப் படுத்தியுள்ளனர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றால், ‘பாலியல் வன்முறை நடக்க வில்லை. நடந்த பிறகு வரவும்’ என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதைத்தான் பிரியங்கா காந்தியும், ‘உ.பி-யில் ஒரு பெண்ணால் தனியாகப் போகவே முடியாத சூழல் இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் கட்டாயக் கடமை. ஏனெனில், அயோத்தி உள்ளிட்ட விஷயங்களால் உலகமே உத்தரப்பிரதேசத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக் கிறது.