Published:Updated:

நொறுங்கிய 8 விலா எலும்புகள்; 180 டிகிரியில் திரும்பிய வாகனம்! - மருத்துவர் மனைவி மரணத்தில் எழும் சந்தேகங்கள்

தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் காவல்துறை நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. வாகனத்தில் வந்தவர்கள் குடித்திருக்கிறார்களா என்பதைக்கூட ஆய்வு செய்யவில்லை. நாங்கள் கோட்டத்துரா மருத்துவமனையில் ஆய்வு நடத்தியபோது, ஆல்கஹால் வாசனை இருந்ததாகப் பதிவாகியுள்ளது.

கோவை மருத்துவர் ரமேஷ்
கோவை மருத்துவர் ரமேஷ்

கோவை மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா விபத்தில் இறந்து 10 நாட்கள் கடந்துவிட்டன. சாலையில் மனைவியின் சடலத்தோடு அமர்ந்து, `மதுக்கடையை மூடுங்கள்' என ரமேஷ் எழுப்பிய முழக்கத்தை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் ஷோபனாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ` குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது. ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தொடர்ந்து போராடி வேண்டியிருக்கிறது' என வேதனைப்படுகின்றனர் மருத்துவர்கள்.

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி பகுதியில் மதுபோதையில் கண்மூடித்தனமாக வந்த சிலர், ஷோபனா சென்ற வாகனத்தின் மீது கடுமையாக மோதியுள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் ஷோபனா. அவரது மகள் சாந்தலா படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தக் கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்துபோன மருத்துவர் ரமேஷ், `ஜம்புகண்டி டாஸ்மாக் கடையால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன, கடையை மூடுங்கள்' என வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்தப் பகுதியில் இயங்கி வந்த அரசு மதுபானக் கடையைத் தற்காலிகமாக மூடினர். ஆனால், விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக, கோவை எஸ்.பி-யிடம் மனு கொடுத்தார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. அவர் தன்னுடைய மனுவில், ` குற்றவாளிகள் மதுபோதையில் இருந்தனர்' என்பதை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனையைப் போலீஸார் செய்யவில்லை. அதுமட்டுமல்லாது மருத்துவர் ரமேஷ் மனைவியின் மீது மோதிய இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களுக்கும் அடிபட்டுள்ளது என்கின்றனர். ஆனால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனப் போலீஸாருக்கே தெரியவில்லை. போலீஸாரும் அந்தக் குற்றவாளிகளை நேரில் பார்க்கவில்லை. இவையெல்லாம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஷோபனாவின் உடற்கூராய்வில் வெளியாகியிருக்கும் தகவல்கள் மனித உரிமை ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. `` பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சில விசயங்கள் தெளிவாக உள்ளன. ஷோபனாவின் இடதுபுற உடல் பாகத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்ததால்தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் இடதுபக்கம் 1-ம் நம்பர் முதல் 8-ம் நம்பர் வரையில் அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டுள்ளன. காதில் ரத்தம் வந்திருக்கிறது. தலைக்காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 2.8 லிட்டர் ரத்தம் சாலையில் கொட்டியுள்ளது. மோதியவர்களின் வாகனத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், ஷோபனா ஓட்டி வந்த வாகனத்தில் முன்பக்கமே சிதைந்து போய்விட்டது. அவரது உடலில் காயம்படாத இடமே இல்லை எனும் அளவுக்கு கொடூரமான மரணம் நேர்ந்துள்ளது. தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால், கை என அனைத்து இடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 8 விலா எலும்புகள் நொறுங்கியிருக்கின்றன" என வேதனையோடு விவரித்த மருத்துவர் ரமேஷின் நண்பர் புகழேந்தி, மேலும் சில தகவல்களைப் பட்டியலிட்டார்.

சிதைந்த வாகனம்
சிதைந்த வாகனம்

`` விபத்தில் ஷோபனாவின் மோட்டார் வாகனம் 180 டிகிரி கடிகார முள் திசையில் திரும்பியிருக்கிறது. சாலையின் இடதுபுறத்திலிருந்து (முற்றிலும் தவறான பாதையில் பயணித்து) கோணலாக எதிர்த்தரப்பு வண்டியானது, ஷோபனா சென்ற வாகனத்தின் முன்சக்கரத்தில் மோதியிருந்தால், சக்கரம் வலதுபுறம் திரும்பியிருக்கும். ஆனால், அது இடதுபுறம் திரும்பியிருக்கிறது. அதுவே, ஷோபனா வாகனத்தின் பின்புறம் எதிர்த்தரப்பினர் காலால் எட்டி உதைத்திருந்தால் ஷோபனாவின் வாகனம் 180 டிகிரி கடிகாரமுள் திசையில் திரும்பி நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனென்றால், எதிர் தரப்பினர் வாகனத்தின் முன்வீலில் இடதுபுறம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷோபனா வாகனத்தின் முன்சக்கரம் வலதுபுறம் இடிவாங்கி, இடதுபுறம் நோக்கித் திரும்பியிருப்பதில் இருந்து இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, இந்தத் தாக்குதல் திட்டமிட்டது என நாங்கள் சந்தேகப்படுகிறோம். இதனை நோக்கிய திசையில் விசாரணை நடந்தால் மட்டுமே உண்மை தெரியவரும். ஆனால், காவல்துறையின் விசாரணை சரியான திசையை நோக்கிப் பயணிக்கவில்லை" என ஆதங்கப்பட்டவர்,

`` தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் காவல்துறை நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. வாகனத்தில் வந்தவர்கள் குடித்திருக்கிறார்களா என்பதைக்கூட ஆய்வு செய்யவில்லை. நாங்கள் கோட்டத்துரா மருத்துவமனையில் ஆய்வு நடத்தியபோது, வாகனத்தோடு மோதியவரிடம் ஆல்கஹால் வாசனை இருந்ததாகப் பதிவாகியுள்ளது. கோவை மெடிக்கல் கல்லூரி மருத்துவமனைப் பதிவேட்டிலும் இது பதிவாகியிருக்கிறது. ஆனால், தடாகம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (7/2019) 304 (ஏ) என்ற பிரிவின்கீழ் பதிவு செய்துள்ளனர். இது எளிதில் பிணையில் வரக் கூடிய வழக்குப் பிரிவு. அவர்கள் குடித்துவிட்டு வந்ததாகப் பதிவு செய்யவில்லை. சொல்லப்போனால், 304(2) என்ற பிரிவின்கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோல், 3 பேர் வாகனத்தில் இருந்ததை மறைத்து 2 பேர் எனக் குறைத்துக் காட்டியுள்ளனர். மரணத்துக்குக் காரணமான அந்த வாகனம், விக்னேஷ்குமார் என்பவர் பெயரில் பதிவாகியிருக்கிறது. இந்த வாகனத்தை பாலாஜி என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். அவரது பின்னால் அசோக் என்பவர் உட்பட மேலும் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். இந்த வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் காலம், கடந்த பிப்ரவரியோடு முடிந்துவிட்டது. வாகனத்தை ஓட்டியவருக்கு 17 வயது எனக் குறிப்பிட்டுள்ளனர். இவருக்கு வாகன உரிமமும் இருக்க வாய்ப்பில்லை.

பிரேதப் பரிசோதனை அறிக்கை
பிரேதப் பரிசோதனை அறிக்கை

21 வயதுக்குக்கீழ் இருப்பவர்களுக்கு மதுபானத்தை விற்கவும் சட்டத்தில் இடம் இல்லை. இதைப் பற்றியெல்லாம் போலீஸார் முறையாக ஆய்வு நடத்தவில்லை. ரத்தத்தில் 12 மணி நேரம் மட்டுமே ஆல்கஹால் இருக்கும் என்ற நிலையில், எச்சில், சிறுநீரில் 5 நாள்கள் வரை தெரியும். இதற்கான பரிசோதனைகளை விபத்து ஏற்படுத்தியவரிடம் போலீஸார் மேற்கொள்ளவில்லை. இதனை எஸ்.பி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, `வழக்குப் பிரிவை மாற்றுவதற்கு உத்தரவிடுகிறேன்' எனக் கூறினார். ஆனால், இன்று வரையில் அதற்கான முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்யவில்லை.

`ஷோபனா, ஹெல்மெட் அணியவில்லை' எனப் போலீஸார் கூறினர். ` அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அதில் முடி சிக்கியிருக்கிறது' என நாங்கள் கூறியதும், ` அந்த ஹெல்மெட் லாக் ஆகாமல் இருந்துள்ளது' எனப் போலீஸார் மழுப்புகின்றனர். அவர்கள் குடிபோதையில்தான் இருந்தார்கள் என்பதற்கான ஆதாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் குடிபோதையில்தான் 70 சதவிகித விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை மூடி மறைக்கும் வகையில் போலீஸார் செயல்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?" எனக் குமுறலோடு பேசி முடித்தார்.

வழக்குப் பதிவு விவரம்
வழக்குப் பதிவு விவரம்

காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் பெறுவதற்காக கோவை எஸ்.பி சுஜித்குமாரிடம் பேசினோம். `` விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் சரியான முறையில் விசாரணை செய்து வருகிறார். வாகனத்தோடு மோதியவர்களுக்கு கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை நடந்துள்ளது. அதில், அனைத்து விவரங்களும் பதிவாகியுள்ளன. விசாரணை முறையைக் கேள்வி எழுப்புவதில் நியாயமில்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.