Published:Updated:

சிவகங்கை: பணத்தை ஏமாற்றிய வீட்டு உரிமையாளர்! - குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்ட தாய்

குழந்தைகளுடன் தற்கொலை
குழந்தைகளுடன் தற்கொலை

குழந்தைகளுடன் இறந்த காளீஸ்வரி, தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன், நாகஜோதி, சுந்தரி ஆகியோரின் பெயர்களை வீட்டின் சுவரில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாகப் பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் பலரும் வங்கிக் கடன், சுய உதவிக்குழு கடன், ஃபைனான்ஸ் கம்பெனி கடன், வீட்டு வாடகை, இ.எம்.ஐ எனப் பணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர் குத்தகைப் பணத்தை திருப்பித் தராமல் வீட்டை காலி செய்யச் சொன்னதால் பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

காளீஸ்வரி
காளீஸ்வரி

சிவகங்கை மாவட்டம், அதப்படக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றதால் அவரின் மனைவி காளீஸ்வரி, மகன் மற்றும் மகளுடன் சிவகங்கை குறிஞ்சி நகரில் குத்தகைக்கு வீடெடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் உடனடியாக வீட்டைக் காலி செய்யச் சொன்னதாகக் கூறப்படுகிறது. மேலும், குத்தகைப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்று சண்டையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கணவர் வெளிநாட்டில் உள்ள சூழ்நிலையில் வீட்டை உடனடியாகக் காலி செய்யச் சொன்னதால் மனமுடைந்த காளீஸ்வரி தன் மகன் அபிஷேக் (9), மகள் மங்கையர் திலகம் (12) ஆகியோருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் பகுதி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த மூவரின் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளது.

இறந்த சிறுவன்
இறந்த சிறுவன்

தன் குழந்தைகளுடன் இறந்த காளீஸ்வரி, தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் நாகஜோதி, சுந்தரி ஆகியோரின் பெயர்களை வீட்டின் சுவற்றி எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூவரும்தான் தற்கொலைக்கு காரணம் என எழுதிவைத்துள்ளதால், போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`யாருடனும் பேச மாட்டாள்; டென்ஷனாக இருப்பாள்!' - ஒரே சேலையில் தாய், மகள் தற்கொலை

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "இறந்த காளீஸ்வரி குடும்பத்தினர் கடந்த 3 வருடமாக அந்த வீட்டில் குடியிருந்துள்ளனர். அவர் சுமார் மூன்றரை லட்சம் ஒத்திப் பணம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டேன் எனக் கூறி தற்போது வீட்டை காலி செய்யச் சொன்னதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

குழந்தைகளுடன் தற்கொலை
குழந்தைகளுடன் தற்கொலை

இதனால், காளீஸ்வரி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர்களுக்குள் நடந்தது என்னவென்று வீட்டு உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் சுந்தரியை முதற்கட்டமாகக் கைது செய்து விசாரணை செய்கிறோம். முழு விசாரணைக்கு பின்புதான் உண்மை நிலை தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு