Published:Updated:

`பட்டாசு வெடிக்கும் நேரத்தைக் கடந்துவிட்டீர்கள்!'- 6 பேரை பதறவைத்த வேலூர் போலீஸ்

அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தை மீறி பட்டாசு வெடித்து, தீபாவளியைக் கொண்டாடிய 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர். வெடிக்காமல் இருந்த அணுகுண்டு பட்டாசை குனிந்து பார்த்தபோது, திடீரென வெடித்ததால் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தீபாவளி
தீபாவளி

கடந்த 27-ம் தேதி தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் புத்தாடை உடுத்தி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறை, காவல்துறை மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. தவிர, சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் வகையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது.

பட்டாசு
பட்டாசு

பள்ளி, நீதிமன்றம், மருத்துவமனை, புனிதத் தலம், குடிசை பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து, மற்ற நேரத்தில் பட்டாசுகளை வெடித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், பல வீடுகளில் குழந்தைகள் அடம்பிடித்ததால் பெற்றோர் நேரம் காலம் பார்க்காமல் பட்டாசுகளை வெடித்தனர்.

பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு... மாசு குறையும் என எதிர்பார்ப்பு!

இப்படி நேரக் கட்டுப்பாட்டை மீறி, வேலூர் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடியதாக 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர். வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள், தெற்குக் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள், ராணிப்பேட்டை, ஜோலார்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கைது
கைது

இந்த வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை, சட்டப் பிரிவு 286-ன் கீழ் கைதுசெய்து உடனடியாக காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். மேலும், வாணியம்பாடி தாலுகா குந்தானிமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (22) என்பவர் பட்டாசு வெடிக்கும்போது காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த இளைஞர் மீதும் வாணியம்பாடி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இப்படியிருக்க பட்டாசு வெடித்தபோது, பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரக்கோணத்தை அடுத்த நெமிலி எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் செல்வராஜ் (10), அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்தார். தீபாவளியன்று அணுகுண்டு (ஆட்டோபாம்) பட்டாசை வெடிக்க வைக்கத் திரியில் நெருப்பு வைத்தார். அந்தப் பட்டாசு நீண்ட நேரமாக வெடிக்காததால், அருகில் சென்று குனிந்து பார்த்தார். 

மரணம்
மரணம்

அந்த நேரத்தில் அணுகுண்டு வெடித்ததால் செல்வராஜின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.