Published:Updated:

ஹெல்மெட், முகமூடி; 8 லட்ச ரூபாய்! - துப்பாக்கி முனையில் பீகார் வங்கியை அதிரவைத்த கொள்ளையர்கள்

பீகார் மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 8 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

பீகார் வங்கிக் கொள்ளை
பீகார் வங்கிக் கொள்ளை ( ANI )

பீகார் மாநிலம் முஸாபர்பூர் அருகிலுள்ள கோபர்ஸாகி (Gobarsahi) பகுதியில் இயங்கிவரும் தனியார் வங்கியில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. மொத்த சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வங்கிக்குள் நுழையும் கொள்ளையர்கள், அங்குள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைத் துப்பாக்கி காட்டி மிரட்டுகின்றனர். பின்னர், வங்கியின் கேஷ் கவுன்டரில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பியோடும் காட்சிகள் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அவர்கள் வங்கியில் இருந்த ரூ.8,05,115-ஐ கொள்ளையடித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பீகார் வங்கிக் கொள்ளை
பீகார் வங்கிக் கொள்ளை
ANI
`படத்தயாரிப்பு... பல மொழிகள் பேசுவார்!' - யார் இந்த`திருவாரூர்' முருகன்?

இதுகுறித்து பேசிய அந்தத் தனியார் வங்கியின் மேலாளர், ``வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பாதுகாவலர் மற்றும் ஊழியர்களைத் துப்பாக்கியால் மிரட்டினர். பின்னர், வங்கியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர். மேலும், பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், நான்கைந்து வாடிக்கையாளர்களும் வங்கியில் இருந்தனர்'' என்று தெரிவித்திருக்கிறார்.

சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சர்தார் காவல்நிலைய போலீஸார் கொள்ளை குறித்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பீகார் காவல்துறை எஸ்.எஸ்.பி கூறுகையில், ``இது ஒரு வித்தியாசமான கொள்ளைச் சம்பவம். மொத்த சம்பவமும் ஒரு நிமிடத்துக்குள் நடந்து முடிந்திருக்கிறது. மொத்தம் 6 கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.

பீகார் வங்கிக் கொள்ளை
பீகார் வங்கிக் கொள்ளை
ANI
நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்! - திருவாரூரில் நகைகளுடன் சிக்கிய கொள்ளையன்

சர்தார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 9 நாள்களில் நடக்கும் இரண்டாவது வங்கிக் கொள்ளை இதுவாகும். முஸாபர்பூரை அடுத்த பிகான்புரா பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள், வங்கியிலிருந்து ரூ.7 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தக் கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.