Published:Updated:

`மகளை அடித்துத் துன்புறுத்தினார்..!' -தேனியில் மாமனாரால் மருமகனுக்கு நேர்ந்த கொடூரம்

செல்லப் பாண்டியன்
செல்லப் பாண்டியன்

திரைப்படக் காட்சிகளை விஞ்சும் அளவுக்கு கூலிப்படையை ஏவி நடைபெற்ற கொலை சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப் பாண்டியன் (வயது 42). இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு சித்ரா என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்னர், செல்லப் பாண்டியன் திடீரென காணாமல் போனார்.

நீண்ட நாள்களாக செல்லப் பாண்டியன் வீட்டுக்கு வராததைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், சித்ராவிடம் கேட்டுள்ளனர். அதற்கு சித்ரா முறையான பதில் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, செல்லப் பாண்டியனின் அண்ணன் ராமராஜ், தன் தம்பி குறித்து சித்ரா மற்றும் அவரின் தந்தை மகாராஜனிடம் விசாரித்துள்ளார். இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல் கொடுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ராமராஜ், கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது செய்யப்பட்ட கூலிப்படையினர்
கைது செய்யப்பட்ட கூலிப்படையினர்

போலீஸார் விசாரிக்க இருப்பதை அறிந்த மகாராஜன், தலைமறைவானார். சந்தேகம் அதிகரிக்கவே, மகாராஜன் தீவிரமாக தேடப்பட்டுவந்தார். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்னர், மயிலாடும்பாறை கிராம நிர்வாக அலுவலரிடம் மகாராஜன் சரணடைந்தார். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.

`மதுபோதையில் அத்துமீறிய மகன்!' -தேனி படுகொலை விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தன் மகளை அடித்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்க்க முடியாமல், மருமகனை கூலிப்படையை வைத்து கொலைசெய்து, உடலை எரித்ததும் பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை புதைத்ததும் போலீஸாருக்கு தெரியவந்தது. மகாராஜன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீஸார், கூலிப்படையைச் சேர்ந்த கிஷோர், அன்புகணேஷ், செந்தில்குமார், நாகராஜ் ஆகிய நால்வரைக் கைது செய்தனர். மேலும், ராமநாதபுரம் உச்சிப்புளி பண்ணைக்காடு என்ற இடத்தில் பாதி எரிந்த நிலையில் புதைக்கப்பட்ட செல்லப் பாண்டியனின் உடல் வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

மகாராஜன்
மகாராஜன்

இக்கொலையில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் சித்ராவின் சகோதரர்கள் தெய்வேந்திரன், தினேஷ், சக்திவேல் ஆகிய மூவரையும் போலீஸார் தேடிவருகின்றனர். திரைப்பட காட்சிகளை விஞ்சும் அளவுக்கு கூலிப்படையை ஏவி நடைபெற்ற கொலைச் சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு