Published:Updated:

`என் குடும்பத்தையே எம்.எல்.ஏ அழித்துவிட்டார்!'-மனைவியின் உடலுக்குத் தீமூட்டிய கணவன் கதறல்

ஆ.பழனியப்பன்

உத்தரப்பிரதேசத்தைத் தாண்டி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, உன்னாவ் சம்பவம்.

குல்தீப் சிங் செங்கர்
குல்தீப் சிங் செங்கர்

உ.பி-யில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம்சாட்டிய பெண் சென்ற கார் மீது லாரி மோதியதில், அந்தப் பெண் படுகாயமடைந்தார். அவருடன் காரில் பயணம் செய்த அவரின் அத்தை மரணமடைந்துவிட்டார். படுகாயமடைந்த அவரின் வழக்கறிஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு

உ.பி மாநிலத்தில் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவரும், எம்.எல்.ஏ-வுமான குல்தீப் சிங் செங்கர் 2017-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயதுப் பெண் ஒருவர் எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்தார் என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் தன் உயிருக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஆபத்து இருப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அந்தப் பெண் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 28-ம் தேதி ரேபரேலியிலிருந்து தன் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் அந்தப் பெண் ஒரு காரில் வந்துகொண்டிருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போது, கார் மீது ஒரு லாரி மோதியது. அதில், அந்த வழக்கில் முக்கியச் சாட்சியான அந்தப் பெண்ணின் அத்தை மரணமடைந்தார். அத்தையின் கணவர் 19 மாதங்களுக்கு முன்பாக ஒரு கொலை வழக்கில் சிறையில் இருக்கிறார்.

மனைவி மரணமடைந்ததைத் தொடர்ந்து இறுதிச்சடங்கு செய்வதற்காக, ஜூலை 31-ம் தேதி அவர் சிறையிலிருந்து வந்திருந்தார். அவர், ஒரே ஆளாக நின்று தன் மனைவியின் உடலுக்குத் தீ மூட்டினார். அதை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அச்சத்துடன் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

தீ
தீ

மனைவியின் உடலுக்குத் தீமூட்டிய அவர், ``என் குடும்பத்தையே குல்தீப் செங்கர் அழித்துவிட்டார். நான் மட்டும்தான் உயிருடன் இருக்கிறேன்” என்று கதறியுள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறது.