Published:Updated:

`நடிகைக்கு நெக்லஸ் பரிசு.. இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம்?'- முருகன் குறித்து வாக்குமூலம் கொடுத்த சுரேஷ்!

கொள்ளைடித்த பணத்தில் சினிமா எடுத்த முருகன், சமீபத்தில் திருச்சியில் கொள்ளையடித்த 10 பவுன் நெக்லஸை வாரிசு நடிகை ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளதாக முருகனின் மைத்துனர் சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருச்சி நீதிமன்றத்தில் கொள்ளையன்  சுரேஷ்
திருச்சி நீதிமன்றத்தில் கொள்ளையன் சுரேஷ்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கியுள்ள முருகன், தமிழக போலீஸாரின் கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து, பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது, கர்நாடக சிறையில் உள்ள முருகனை, அம்மாநில போலீஸார் தங்கள் பகுதிகளில் உள்ள பல்வேறு வழக்குகளைக் காரணம் காட்டி, கஸ்டடியில் எடுத்து விசாரித்துவருகின்றனர். முருகனை பெங்களூரு போலீஸார் மேலும் 9 நாள்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க கர்நாடக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

முருகன்
முருகன்

இந்நிலையில் கர்நாடக போலீஸார், கடந்த 12-ம் தேதி முருகனை ரகசியமாக தமிழகம் அழைத்துவந்து, திருச்சி காவிரி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை ரகசியமாக எடுத்துச்சென்றதைப்போல, மீண்டும் முருகன் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தமிழகம் வந்து, தமிழகத்தில் முருகன் புதைத்துவைத்திருக்கும் நகைகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் உள்ளதால், மீண்டும் பெங்களூரு போலீஸார் வருகைக்காக தமிழக போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Vikatan

மேலும், முருகனின் கூட்டாளிகளான திருவாரூர் மணிகண்டன், சுரேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி, மதுரையைச் சேர்ந்த கணேசன், திண்டுக்கல்லில் கைதுசெய்யப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், தற்போது சிறையில் உள்ளனர். இவர்களில் முருகன் மற்றும் கணேசனை தமிழக போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துவருகிறார்கள். முருகனின் மைத்துனர் சுரேஷிடம், திருச்சி போலீஸார் 4-வது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் சுரேஷ், போலீஸாரிடம் கூறிய தகவல்கள் அத்தனையும் கிளுகிளு ரகமாம்.

முருகன், மணிகண்டன், சுரேஷ்
முருகன், மணிகண்டன், சுரேஷ்

சுரேஷ், மதுரை நகை வியாபாரிகளிடம் நகையைப் பணமாக மாற்றுவதற்குக் கொடுத்துவைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

போலீஸாரிடம் சுரேஷ், ”திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 457 பவுன் தங்க நகைகளை, மதுரையைச் சேர்ந்த சமயநல்லூர் மகேந்திரன் மூலம் உருக்கி விற்றுவிட்டோம். ஏற்கெனவே கொள்ளையடித்த பணத்தில் மாமா 2 சினிமா எடுத்தார். அந்தப் படம் வெளியாகாமல் நின்றுபோனதால், மீண்டும் படம் எடுக்கத் திட்டமிட்டோம்.

கொள்ளை பணத்தில் சினிமா... நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை... `பலே’ முருகனின் கதை!

மாமா எடுக்கும் படங்களில் என்னை ஹீரோவாக நடிக்கவைத்து அழகுபார்க்க ஆசைப்பட்டார். அதன்படி சென்னையைச் சேர்ந்த பிரபல வாரிசு நடிகை ஒருவரைச் சந்தித்து, அடுத்த படம் குறித்துப் பேசினோம். பிரபலமாக இருக்கும் அந்த நடிகை, எங்கள் பின்னணி குறித்து விசாரித்தார். சட்டென மாமா நகைக் கடை வைத்திருப்பதாகக் கூறி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த தங்க நகைகளில் மிச்சமிருந்த 10 பவுன் நகையைப் பரிசாகக் கொடுத்தார். 3 லட்சம் நகையைப் பெற்றுக்கொண்ட அந்த நடிகை, அதன்பிறகு எங்களின் வழிக்குவந்தார். இதைப்போல தெலுங்கு மற்றும் சினிமா உலகில் ஏராளமான நடிகைகள் மாமாவிற்கு நெருக்கம்” என்று சினிமா நடிகைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார் சுரேஷ்.

`வெல்டர்' ராதாகிருஷ்ணன்
`வெல்டர்' ராதாகிருஷ்ணன்

மேலும், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாங்கள் செய்த கொள்ளை வழக்கில் சிக்கிக்கொண்டதால், சென்னை அண்ணா நகர், அமைந்தகரை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கள்மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளில் நாங்கள் ஆறு பேர் சிக்கினோம். மாமா மட்டும் சிக்கவில்லை. அந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க, சென்னை இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மாமா முருகன் 30 லட்சம் வரை கொடுத்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரி மாமாவிடம் பணம் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வருகிறார். இதேபோல், சென்னையில் சில போலீஸ் அதிகாரிகள், திருவாரூர் முன்னாள் எஸ்பி உள்ளிட்டோருக்கும் பல லகரங்களைப் பரிசாகக் கொடுத்துள்ளோம்” என்றவர், சில போலீஸாரின் பெயர்களையும் பட்டியலிட்டாராம்.

மாமாவுடன் தினகரன்தான் ஆரம்பத்திலிருந்து கூட இருக்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து, ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். பெங்களூரு மற்றும் சென்னை கொள்ளை வழக்குகளில் தினகரன் கைதுசெய்யப்பட்டார். அப்படி கைதான தினகரனுக்கு சென்னை போலீஸார் தங்கள் பாணியில் மாவுக்கட்டுபோட்டனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரி
திருச்சி லலிதா ஜுவல்லரி

மாமா முருகன், எப்போதும் செல்போன் பயன்படுத்த மாட்டார். கொள்ளைச் சம்பவம் குறித்துத் திட்டமிட்டால், வாக்கிடாக்கி மூலம் கூட்டாளிகளுக்கு செய்தி சொல்வார். அந்த வாக்கிடாக்கி டெக்னிக் சென்னை கொள்ளைக்குப் பிறகு போலீஸுக்கு தெரிந்துவிட்டதால், சிக்னல் கொடுக்க புது டெக்னிக் தேடினோம். அப்போதுதான் தினகரன் சொன்னதுதான் நூல் டெக்னிக்.

கொள்ளை நடக்கும் இடத்திற்கு உள்ளே செல்லும் மாமா முருகன், இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு உள்ளே செல்வார். வெளியே இருக்கும் நாங்கள், ஆள் நடமாட்டம் தெரிந்தால் கயிறு மூலம் சிக்னல் கொடுப்போம்” என வாக்குமூலம் கொடுத்தாராம்.

முருகனிடம் பணம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வெளியானதால், காவல்துறையில் சலசலப்பு தொடங்கியுள்ளது. அதில், போலீஸில் சிக்கும் முருகன் தனது இஷ்டத்திற்கு போலீஸ் அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவது முருகனின் வாடிக்கை என்று ஒரு தரப்பும், முருகன் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை என மற்றொரு தரப்பும் கூறி விவாதம் செய்துவருகின்றன.