உத்தரப்பிரதேச மாநிலம், எட்டா என்னும் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் அரவிந்த் குமார் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதே பள்ளியில் பிரதாப் சிங் என்பவரும் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். பிரதாப் சிங் அவ்வப்போது பள்ளிக்கு விடுப்பு எடுப்பது, பள்ளிக்கு தாமதமாக வருவதுமாக இருந்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கெனவே தலைமை ஆசிரியருக்கும், உதவி ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் தாமதமாக பள்ளிக்கு வந்த பிரதாப் சிங், வருகைப் பதிவேட்டில் இதற்கு முன்பு பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்த நாள்களிலும் கையெழுத்திட்டுள்ளார். இதை கவனித்த தலைமையாசிரியர், இது தொடர்பாக பிரதாப் சிங்கிடம் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில், தலைமையாசிரியரை பிரதாப் சிங் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆத்திரத்தில் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலைமையாசிரியரை மூன்று முறை சுட்டுள்ளார். ஆனால், நல்வாய்ப்பாக துப்பாக்கிச்சூட்டிலிருந்து தலைமை ஆசிரியர் காயம் எதுவும் இல்லாமல் உயிர் தப்பினார். உடனே, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார் பிரதாப் சிங். அதன் பின் பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரி சதுர்வேதி இது குறித்து விசாரணை நடத்தி உதவி ஆசிரியர் பிரதாப் சிங்கை பணிநீக்கம் செய்துவிட்டார்.
அடுத்ததாக பள்ளிக்கு வந்த காவல்துறையினர், சம்பவத்தின்போது பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை செய்து பிரதாப் சிங் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய பிரதாப் சிங்கை காவல்துறையினர் தேடிவருகின்றனர். மேலும் அவரின் அவரின் துப்பாக்கியின் உரிமமும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.