Published:Updated:

`தென்காசி எம்.பி-யின் சித்தப்பாவைக் கொன்றது ஏன்?' - போதை இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

இரா.கோசிமின்

திருவிழாவின்போது குடிபோதையில் தகராறு செய்தவர்களைத் தட்டிக்கேட்ட தென்காசி எம்.பி-யின் சித்தப்பாவை 2 இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட கருப்பையா
கொலை செய்யப்பட்ட கருப்பையா

ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாகத் தென்காசி எம்.பி-யின் சித்தப்பாவைக் கொலை செய்த அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேரை காவல்துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கைதான ராஜேந்திரன்
கைதான ராஜேந்திரன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமாரின் சித்தப்பாவான இவர் ரேஷன் கடை ஊழியராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள கண்மாய் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேத்தூர் காவல்துறையினர், அரசியல் கொலையா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, 6 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (19), விக்னேஷ் (19) ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து கருப்பையாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் சேத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான விக்னேஷ்
கைதான விக்னேஷ்

படுகொலை சம்பவம் தொடர்பாகப் பேசும் காவல்துறை அதிகாரிகள், ``கடந்த சில நாள்களுக்குமுன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது ராஜேந்திரன், விக்னேஷ் ஆகியோர் போதையில் தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களுக்கும் கருப்பையாவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதத்தால்தான் இருவரும் சேர்ந்து கருப்பையாவை கொலை செய்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.