Published:Updated:

தீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் மூன்று பேரிடம் காவல்துறை விசாரணை!

குருபிரசாத்
தி.விஜய்

கோவையில், தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாகக் கேரளாவில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Commando Force
Commando Force

கோவை மாவட்டத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை தலைவர் ஜெயந்த் முரளி தலைமையில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

search at Koniamman Temple
search at Koniamman Temple

மேலும், தமிழக கமாண்டோ படையினர், துணை ராணுவப் படையினர், விமானப் படையினர் என்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், விமான நிலையம், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

raid
raid

நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்திலும் ஒவ்வொரு அறையாகச் சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களிலும் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்ததாக, அப்துல் காதர் ரஹீம் என்பவரை கொச்சியில் வைத்து கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Karunyanagar Police Station
Karunyanagar Police Station

இரண்டு நாள்களுக்கு முன்பு, பஹ்ரைனில் இருந்து விமானம் மூலம் கொச்சிக்கு ஒரு பெண்ணுடன் வந்துள்ளார் அப்துல்காதர். இதையடுத்து, அப்துல் காதர் ரஹீம் மற்றும் அந்தப் பெண்ணை கைது செய்து, தங்களது கஸ்டடியில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, சென்னையைச் சேர்ந்த சித்திக் மற்றும் பொன்விழா நகரைச் சேர்ந்த ஜாஹீர் என்று இருவரை உக்கடம் பகுதியில் வைத்து காவல்துறையினர் பிடித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும், அப்துல் காதர் ரஹீமுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோக மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

search in temple
search in temple

சித்திக் மற்றும் ஜாஹீர் உள்ளிட்ட மூன்று பேரையும் காருண்யாநகர் காவல்நிலையத்தில் வைத்து, கோவை மண்டல டி.ஐ.ஜி கார்த்திகேயன் மற்றும் காவல் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இரண்டு ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் வாகன போலீஸ் பாதுகாப்பில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் எந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர். எந்த அடிப்படையில் விசாரணை நடைபெற உள்ளது.உள்ளிட்ட அனைத்து தகவல்களும் போலீசாரால் ரகசியம் காக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துவிசாரித்த போது, விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என மூன்று நபர்களிடமும், எழுதி வாங்கி கொண்டு விடுவித்து விட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதனிடையே, அப்துல் காதர் ரஹீம் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட பெண் இரண்டு பேரையும் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விரைவில் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Federation of Islamic Movements
Federation of Islamic Movements

இதற்கிடையே கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் இன்று கோவை மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்தனர். அப்போது, ``சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம், யு ஏ பி ஏ சட்ட திருத்த மசோதா மற்றும் என் ஐ ஏ அமைப்பிற்கு வழங்கப்பட்ட எல்லையற்ற அதிகாரம் போன்ற சட்டங்களை பற்றிய அச்சத்தையும், மறக்கடிக்கும் விதமாக இது போன்ற நிகழ்வுகளை மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே சந்தேகிக்கப்படுகின்றது. எனவே இது போன்ற செய்திகள் இஸ்லாமிய சமூகத்தை பிற சமூகமக்களிடமிருந்து அன்னியப் படுத்தக்கூடிய விதமாக இருக்கிறது. இதில் சதி இருபதாக இந்தக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே மக்களுக்கு பீதியும் பயமும் ஏற்படாதவாறு தீவிரவாத சோதனை விவகாரத்தில் காவல்துறையினர் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவேண்டும் மக்களுக்கு இந்த நிகழ்வின் உண்மைத்தன்மையை காவல்துறை அறிவிக்கவேண்டும்" என முறையிட்டனர்.