Published:Updated:

தங்க வேட்டை - 10 - மீட்கப்பட்டன நகைகள்... ஆனால்?

தங்க வேட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
தங்க வேட்டை

மினி தொடர்

பைக்கில் கிளம்பிய சில நிமிடங்களில் நரசிம்மன் முன்பு நின்றார் ராஜன்.

‘‘என்னோட ஸ்டாஃப் முரளி, நகை வியாபாரத்துக்காக ஆம்னி பஸ்ல பெங்களூரு போயிருந்தார். ரூம்ல கொஞ்சம் ரிலாக்ஸாகிட்டு பையைத் திறந்துப் பார்த்திருக்கார். பையைத் திறக்க முடியலை. ஏதோ பசைபோல ஒட்டியிருந்திருக்கு. என்னவோ விபரீதம் நடந்திருக்குன்னு மனசுல பட்டதும், தன் முழு பலத்தையும் கொடுத்து படார்னு பையைத் திறந்திருக்கிறார். அவர் நினைச்சது போலத்தான் நடந்திருக்கு. பையில இருந்த நகைகளைக் காணோம். நீங்களும் இதேபோல பாதிக்கப்பட்டிருக் கீங்கள்ல... அதான் உங்களைக் கூப்பிட்டேன்’’ - படபடப்புடன் பேசி முடித்தார் நரசிம்மன்.

அனைத்தையும் நிதானமாகக் கேட்டுக்கொண்ட ராஜன், `‘வாங்க, போலீஸ் ஸ்டேஷன் போகலாம்’’ என்று நரசிம்மனை பைக்கில் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தார். அங்கு சென்றதும் போலீஸ் அதிகாரி அவர்களிடம் நடந்த விவரங்களை விசாரித்தார். அத்தனையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அந்த போலீஸ் அதிகாரி, ‘`இது பெங்களூருல நடந்த சம்பவம். எங்களால ஒண்ணும் செய்ய முடியாது’’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, விரக்தியைக்கூட வெளிப்படுத்த நேரமில்லாமல் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியேறினர். பிறகு, அவசரமாக ஒரு மனுவை தயார்செய்துகொண்டு கோவை போலீஸ் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தனர். அந்த உயர் அதிகாரி, ராஜனும் நரசிம்மனும் கொண்டுசென்ற மனுவைக்கூட முழுமையாகப் படிக்காமல், “நீங்கள் கிளம்பலாம்” என்று அனுப்பி வைத்தார்.

‘‘இவங்க நாம சொன்னா கேட்க மாட்டாங்க... இதுக்கு வேற ஒரு வழிஇருக்கு’’ என்று சஸ்பென்ஸ் வைத்த ராஜன், மறுநாள் காலை நரசிம்மனை வரச் சொன்னார். வந்ததும், ‘‘எங்கே ராஜன் போறோம்... என் நகை கிடைச்சிடுமா?’’ என்று பதற்றம் குறையாமல் பேசினார் நரசிம்மன்.

தங்க வேட்டை
தங்க வேட்டை

‘`கவலைப்படாம வண்டியில ஏறுங்க’’ என்றபடி நரசிம்மனை ஏற்றிக்கொண்ட ராஜன், தமிழகத்தின் முக்கிய அமைச் சரைச் சந்திக்கச் சென்றார். அந்த அமைச்சரிடம் நடந்த விஷயங்களையெல்லாம் விவரமாக எடுத்துச் சொன்னதும் ஷாக்கான அமைச்சர், ‘‘போலீஸ்கிட்ட நான் பேசறேன். நீங்க மதியம் ஏர்போர்ட் வாங்க’’ என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்தார். நரசிம்மனுக்கு, இப்போது ஓரளவுக்கு நம்பிக்கை வந்திருந்தது.

அன்றைய தினம் தமிழக முதல்வர் கோவை வருவதால், ஏர்போர்ட்டில் ஏகத்துக்கும் கூட்டம். பெரும்பாடு பட்டு அந்தக் கூட்டத்தைக் கடந்து இருவரும் அமைச்சர் அருகே சென்றுவிட்டனர். அவர்களைக் கண்டதும் ஒரு போலீஸ் அதிகாரியை அழைத்தார் அமைச்சர். ராஜனும் நரசிம்மனும் மனுவைக் கொடுத்தபோது அதைப் படித்துக்கூட பார்க்காமல் அனுப்பி வைத்த அதே போலீஸ் அதிகாரிதான். ‘‘இவங்க சொல்ற விஷயம் ரொம்ப பெரிய பிரச்னையா இருக்கு. அதை என்னன்னு விசாரிச்சு, உடனடியா நடவடிக்கை எடுங்க’’ என்று அமைச்சர் சொல்லவும், ‘‘நிச்சயமா சார்’’ என்று பவ்வியம் காட்டிய அந்த அதிகாரி, ராஜன் பக்கம் திரும்பி ‘‘நாளைக்கு கமிஷனர் ஆபீஸுக்கு வந்திடுங்க... பேசிக்கலாம்’’ என்றார்.



ராஜனின் செல்போன் ஒலித்தது. ஸ்கிரீனில் முனிராஜ் பெயர். உத்தரப்பிரதேசத்திலிருந்து அழைப்பு.

‘‘என்ன ராஜன்... நல்லா இருக்கீங்களா?” என்றார் முனிராஜ்.

‘‘நான் நல்லாயிருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க, வீட்டுல எல்லோரும் நலமா?’’ - நல விசாரிப்புகள் முடிந்ததும், நரசிம்மன் விஷயத்தை அவரிடம் பகிர்ந்தார் ராஜன்.

‘‘அச்சச்சோ!’’ என்று பதறியவர், ‘‘இப்போ நான் நேரடியா உதவ முடியாது ராஜன். என் நண்பர்கள்கிட்ட சொல்லி ஏதாவது பண்றேன். நீங்க எஃப்.ஐ.ஆர் காப்பியையும், பொருளைப் பறிகொடுத்தவர் பயணித்த பஸ்ஸின் டிராவல் சார்ட்டையும் வாங்கிட்டு என்னைக் கூப்பிடுங்க. அடுத்த ஸ்டெப் என்னன்னு யோசிப்போம்’’ என்று இணைப்பைத் துண்டித்தார் முனிராஜ்.

அடுத்த நாள்... ராஜனும் நரசிம்மனும் கோவை உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தனர். ‘‘இது சீரியஸான விஷயமா இருக்கே. நீங்க ஸ்டேஷனுக்குப் போங்க. எஃப்.ஐ.ஆர் கொடுக்கச் சொல்றேன்’’ என்றார் அந்த உளவுத்துறை அதிகாரி.

‘சம்பவம் நடந்தது பெங்களூருல. எங்களால எதுவும் செய்ய முடியாது’ என்று எந்த போலீஸ் அதிகாரி முதலில் கை விரித்தாரோ, அதே அதிகாரியை மீண்டும் சந்தித்தனர்.

தங்க வேட்டை
தங்க வேட்டை

இந்த முறை உளவுத்துறை அதிகாரியின் சிபாரிசுடன் சென்றதால், ‘‘சரி சரி... எஃப்.ஐ.ஆர் போடுறேன். திரும்பத் திரும்ப வந்து தொல்லை பண்ணிக்கிட்டே இருக்காதீங்க’’ என்று சற்றே எரிச்சலுடன் வழக்கைப் பதிவுசெய்து எஃப்.ஐ.ஆர் காப்பியைத் தந்ததுடன், டிராவல் சார்ட்டையும் பெற்றுத் தந்தார்.

அதை எடுத்துக்கொண்டு டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒன்றை இருவரும் அணுகினர். ‘‘இதில் மூன்று பேருடைய போன் நம்பர்களில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கு’’ என்று டிடெக்டிவ் ஏஜென்ஸி ரிப்போர்ட் கொடுத்தது. அந்த மூன்று போன் நம்பர்களையும் உடனடியாக முனிராஜுக்கு அனுப்பினார் ராஜன்.



உ.பி மாநிலம் மொரடாபாத்...

அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும், மூவரை இதற்காக பணியில் அமர்த்தி மாலைக்குள் `அந்த நம்பர்கள், போலியான நபர்களின் பெயர்களில் வாங்கப்பட்டவை’ எனக் கண்டுபிடித்தார் முனிராஜ். ஆழமாக விசாரித்ததில், மூவரில் ஒருவர் நகரிலிருந்து தூத்துக்குடி வரை தொடர்ச்சியாக பேருந்தில் பயணித்திருப்பது தெரியவந்தது. அந்த நபர் தொடர்ந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர் என்பதையும் கண்டுபிடித்தனர். அடுத்த நாளே, உ.பி-யில் உள்ள அந்த நபரின் முகவரிக்குச் சென்று, அவரை வளைத்துப்பிடித்தனர். ஆனால், திருட்டு நடந்த அன்று அந்த நபர் பெங்களூரு செல்லவில்லை என்பது தெரியவந்தது. போலீஸ் அதிகாரிகள் குழம்பினர். அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து விசாரித்ததில் ஓர் உண்மை வெளிவந்தது. ‘‘நீங்க சொல்ற அன்னைக்கு நான் திருடப் போகல. என் போனை மட்டும்தான் கொடுத்தேன்’’ - அடி தாங்காமல் அழுதார் அந்த நபர்.

‘‘நிச்சயம் இவனுங்க ஏதாவது லாட்ஜ்லதான் தங்கியிருப்பாங்க. அதைக் கண்டுபிடிச்சா இவனுங்களைப் பிடிச்சிடலாம்’’ என்று செல்போன் நம்பர் எங்கெல்லாம் டிராவல் ஆகியிருக்கிறது என டிராக் செய்தனர். அப்போது குறிப்பிட்ட தினத்தில் சென்னையில் ஓரிடத்தில் இருந்தபடி அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த இடத்தை கூகுளில் தேடியபோது, அது லாட்ஜ் என்பது தெரியவந்தது.

இந்தத் தகவல் கோவையிலிருந்த நகை வியாபாரி ராஜனுக்குத் தெரிவிக்கப்பட, அவரே களத்தில் இறங்கினார். லாட்ஜ் நிர்வாகியைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விளக்கி, ‘‘அந்தக் குறிப்பிட்ட தேதியின் சி.சி.டி.வி ஃபுட்டேஜ் வேணும்’’ என்று கேட்டார் ராஜன்.

‘‘ஸாரி சார்... அப்படியெல்லாம் கொடுக்க முடியாது’’ என்றார் அவர்.

‘‘சார் எஃப்.ஐ.ஆர் ஆகிடுச்சு. அதனாலதான் கேட்கிறோம். நீங்க உதவி பண்ணினா, நிச்சயம் அவங்களைப் பிடிச்சிடுவோம். ப்ளீஸ்...’’ என்று அவரின் மனதைக் கரைத்தார் ராஜன்

‘‘கொஞ்ச நேரம் கழிச்சு நானே கூப்பிடுறேன்’’ என்றபடி அழைப்பைத் துண்டித்தார் அந்த நிர்வாகி.

சற்று நேரத்தில் மீண்டும் அழைத்தவர், ‘‘நீங்க சொன்னதெல்லாம் சரிதான். ஆனா, நாங்க வீடியோயெல்லாம் கொடுக்க முடியாது. வேணும்னா ஒரு ‘ஸ்கிரீன் ஷாட்’ அனுப்புறோம். எஃப்.ஐ.ஆர் காப்பியுடன் நேர்ல வாங்க. மற்ற விவரங்களைத் தர்றோம்’’ என்றார்.

போனை கட் செய்ததும் ராஜனின் வாட்ஸப்புக்கு ‘ஸ்கிரீன் ஷாட்’ இமேஜ் ஒன்று வந்தது. அதில், இரண்டு நபர்களின் படங்கள் இருந்தன. அதை உடனடியாக முனிராஜுக்கு ஃபார்வர்டு செய்தார் ராஜன். அந்த போட்டோவை வைத்து உ.பி போலீஸார் விசாரித்ததில், ‘‘போட்டோவில் இருப்பவர்கள் எகஸான் மற்றும் தேவேந்தர்’’ என்று தகவல் கிடைத்தது.

மொரடாபாத்தில் அமர்ந்தபடியே தன் நண்பர்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்தார் முனிராஜ். எகஸான் மற்றம் தேவேந்தர் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். இருவருக்கும் தனித்தனியாக டீம் அமைத்து, அவர்களைச் சுற்றிவளைத்து கைதுசெய்தனர் பரேலி போலீஸார். நகையின் பெரும்பகுதி உருக்கிய நிலையிலும், மற்றவை நகையாகவும் பறிமுதல் செய்யப்பட்டன.

‘‘ராஜன்... நகையுடன் அவனுங்களைப் பிடிச்சாச்சு. உடனே உ.பி கிளம்பி வாங்க’’ என்று உற்சாகமாக தகவல் கொடுத்தார் முனிராஜ். நகைகள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியுடன் ராஜனும் நரசிம்மனும் கோவையிலிருந்து பரேலி கிளம்பிச் சென்றனர். பரேலி போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது, நரசிம்மன் மொபைலுக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைத்தது, கோவை போலீஸ்.

‘‘சார்... உங்க நகை திருடுபோனது சம்பந்தமா இன்னைக்கு உங்க ஸ்டாஃப்கிட்ட விசாரிக்கப் போறோம்’’ என்றனர் கோவை போலீஸார். கொள்ளையர்களைப் பிடித்து நகைகளை மீட்ட பிறகுதான், கோவை போலீஸார் விசாரணையே தொடங்கியிருந்தனர்.

ராஜனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, ‘‘சரிங்க சார்... விசாரிங்க’’ என்றார் நரசிம்மன்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு... ‘திருடர்களைப் பிடித்துவிட்டோம். நகைகளையும் மீட்டுவிட்டோம்’ என்று தமிழக காவல்துறைக்கு உ.பி காவல்துறை ஃபேக்ஸ் அனுப்பியது. அதன் பிறகு கோவை போலீஸ் உ.பி விரைந்தது. கொள்ளைபோன நகைகளை நீதிமன்றம் மூலம் மீட்டுக்கொண்டு, கொள்ளையர்களையும் கைதுசெய்து கோவை அழைத்து வந்தனர் கோவை போலீஸார். கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நகைகள் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டன.

மூத்த வழக்கறிஞர்கள்மூலம் எகஸானும் தேவேந்திரனும் ஜாமீனுக்கு முயன்றுகொண்டி ருந்தனர். சோம்நாத் பாட்டீல், குமார், ராஜன் மூவருக்குள்ளும் தங்களது நகைகளையும் எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் சூறவாளியைப்போல் சுழன்று கொண்டிருந்தது.

(அடுத்த இதழில் நிறைவடையும்)