Published:Updated:

சேலம்: இளம்பெண்ணைத் தனிமையில் வர வற்புறுத்தினாரா நிறுவன உரிமையாளர்?!-ஆடியோ கொண்டு அதிகாரிகள் விசாரணை

ஆடியோ ( மாதிரிப் படம் )

சம்பந்தப்பட்ட ஆடியோவைக் கைப்பற்றிய சமூக நலத்துறை அதிகாரி, தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

சேலம்: இளம்பெண்ணைத் தனிமையில் வர வற்புறுத்தினாரா நிறுவன உரிமையாளர்?!-ஆடியோ கொண்டு அதிகாரிகள் விசாரணை

சம்பந்தப்பட்ட ஆடியோவைக் கைப்பற்றிய சமூக நலத்துறை அதிகாரி, தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

Published:Updated:
ஆடியோ ( மாதிரிப் படம் )

சேலம், அஸ்தம்பட்டி அருகேயுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்துவருபவர் சங்கர். இவர் சேலம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உட்பட 30 பேர் பணியாற்றிவருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகர் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ படித்த இளம்பெண் ஒருவர், கடந்த 9 மாத காலமாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்திலிருந்து பணியிலிருந்து விலகி, மற்றொரு நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். இதனால் அந்த பெண்ணுக்குத் தரவேண்டிய ஊதியத்தை தராமல் இழுத்தடித்துவந்திருக்கிறார் சங்கர் எனக் கூறப்படுகிறது.

சங்கர்
சங்கர்

இதையடுத்து அந்தப் பெண் ஊழியர், சங்கரை செல்போனில் தொடர்புகொண்டு தன்னுடைய சம்பளத்தை வழங்கும்படி கேட்டிருக்கிறார். அப்போது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சங்கர், `சம்பளம் வேண்டுமென்றால் நேரில் சந்திக்கலாம்’ என தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கு அந்தப் பெண், `நான் அலுவலகம் வருகிறேன் சார்’ என்று சொல்கிறார். அதற்கு, `அங்கு வேண்டாம்; வெளியே சந்திக்கலாம்’ எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, `நான் காரில் வருகிறேன். வா, ஒன்றாக ஏற்காடு சென்று உணவருந்திவிட்டு, அரை மணி நேரம் பேசிவிட்டு உன்னுடைய சம்பளத்தை வாங்கிச் செல்’ என்று பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, மாவட்ட சமுக நலத்துறையினர் இதில் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவியிடம் பேசியபோது, ``சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரித்ததில் அவர் அளித்த வாக்குமூலங்களைக்கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சங்கரை அழைத்து விசாரணை மேற்கொண்டிருக்கிறோம். மேலும், என்னுடைய தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது” என்றார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சங்கரிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் 9 மாதகாலமாக எனது நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். அவருடைய அப்பாதான் எனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நான் மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்ததால், சம்பந்தப்பட்ட பெண் என்னுடைய அனுமதி இல்லாமல், எனது லெட்டர் பேடில் அனுபவச் சான்றிதழ் தயார்செய்து வேறொரு நிறுவனத்துக்கு மாறப் பார்த்திருக்கிறார். இது தெரிந்து நான் அவரின் அப்பாவை அழைத்து வந்து என்னைப் பார்க்கச் சொல்லியிருந்தேன். எனது அலுவலகத்தைப் பொறுத்தவரை எனது வாட்ஸ்அப் எப்போதும் அலுவலக கம்ப்யூட்டர்களில் ஒப்பனில்தான் இருக்கும். மேலும், இதை அலுவலகத்தில் உள்ளவர்கள் அலுவலகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்துவது உண்டு. மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணை ஏற்காடு அழைத்ததற்கு காரணம், எனக்கு ஏற்காட்டிலும் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. என்மீது தவறான குற்றச்சாட்டு எழுப்பிவருகின்றனர்” என்றார்.

மேலும் இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பெண் தரப்பிலிருந்து யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அந்தக் கட்டுமான நிறுவனத்தின் மூலம்தான் புகார் ஒன்று வந்திருக்கிறது. அது தொடர்பாக விசாரித்துவருகிறோம்” என்றார்.