Published:Updated:

மேட்டுப்பாளையம் ஆணவக் கொலையும்...நாம் பேசமறுப்பதும்...! - தீர்வு என்ன?

கல்வியை முழுமையாகப் பெறும் முதல் தலைமுறையிலிருந்துதான் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை பிறக்கும் என்பதுபோல சாதிய பேதங்களைக் குடும்பத்தில் அமர்ந்து பேசத் தொடங்கும் முதல் தலைமுறையில் இருந்துதான் ஒடுக்கும் சிந்தனையிலிருந்தான விடுதலை கிடைக்கும்.

மேட்டுப்பாளையம் சாதி ஆணவப் படுகொலை
மேட்டுப்பாளையம் சாதி ஆணவப் படுகொலை

”தலித்களே தாங்கள் தலித்களாகப் பார்க்கப்படுவதை விரும்புவதில்லை. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் சமூகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் கடமை உணர்வுள்ள மனிதர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். நான் ஒவ்வொரு முறையும் விதிகளை நிர்ணயிக்கும்போது நாம் தவறாக நிர்ணயிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இவர்களைத்தான் நினைத்துக் கொள்வேன். நவீன இந்தியாவின் இன்றையச் சூழலில் இந்தப் பேதங்கள் எல்லாம் உருகிக் கரைந்துவிடும். இதுபோன்ற திட்டங்களால் அடுத்த இருபது ஆண்டுகளில் தலித்கள் தங்களுடைய அறிவாற்றலாலும் உழைப்பாலும் சமூகத்தில் நல்ல நிலையை அடைந்திருப்பார்கள். அவர்கள் அப்போது சிறப்புச் சலுகைகள் எதுவும் கேட்கமாட்டார்கள்”.

தலித்களே தாங்கள் தாங்கள் தலித்களாகப் பார்க்கப்படுவதை விரும்புவதில்லை. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் சமூகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் கடமை உணர்வுள்ள மனிதர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்.
கஸ்தூரி ரங்கன்

புதிய கல்விக் கொள்கையை வரையறுத்திருக்கும் கல்விக் கமிட்டியின் தலைவரான கஸ்தூரிரங்கன் அண்மையில் அளித்துள்ள ஒரு பேட்டியின் தமிழ் மொழியாக்கம் இது. மேட்டுப்பாளையத்தில் சாதி ஆணவத்தால், அண்ணனால் படுகொலை செய்யப்பட்ட கனகராஜ் இறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் வெட்டுக்காயங்களுடன் மூளை தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்ஷினிபிரியாவும் தற்போது இறந்துவிட்டார். மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

சாதி ஆணவக் கொலையும் புதிய கல்விக் கொள்கையும்
சாதி ஆணவக் கொலையும் புதிய கல்விக் கொள்கையும்

கஸ்தூரிரங்கன் சொன்ன கருத்தையும் மேட்டுப்பாளையம் சாதி ஆணவக் கொலையையும் நிறையவே தொடர்புப்படுத்திப் பேசவேண்டி இருக்கிறது. ‘தலித்துகளே தாங்கள் அப்படிப் பார்க்கப்படுவதை விரும்புவதில்லை!’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு கல்விக் கமிட்டியின் தலைவருடைய பார்வையாக மட்டுமில்லை. எப்போதும் மேலிருந்து கீழே பார்ப்பதற்கு மட்டுமே பழகிவிட்ட பெரும்பாலானவர்களின் பார்வை. ஆந்திராவில் பிரணய்யைக் கொன்ற அமிர்தாவின் அப்பா அரசியல் செல்வாக்கு உள்ளவர், சங்கரைக் கொன்ற சின்னச்சாமி சொத்துச் செல்வாக்கு உள்ளவர், இளவரசன் இறக்கக் காரணமான சாதிக் கூட்டத்திடம் பணச் செல்வாக்கு கொட்டிக் கிடந்தது. எனவே செல்வாக்கு உள்ளவர்களிடம் மட்டும்தான் சாதிவெறி இருக்கும் என்கிற பார்வையை அடித்து நொறுக்கும் வகையில் அமைந்துள்ளது வர்ஷினிப்பிரியா- கனகராஜ் மரணம்.

கனகராஜின் குடும்பத்திடம் பணவசதி இல்லை, கனகராஜ் காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளி. வர்ஷினியின் அம்மா அமுதா துப்புரவுத் தொழிலாளர், அவர் தங்களது சாதியைவிடக் கீழானவர் என்பதே கனகராஜின் அண்ணனுக்குச் சாதிவெறியேறப் போதுமானதாக இருந்திருக்கிறது. இந்த மண்ணின் முதன்முதல் சாதி ஆணவக் கொலை சட்டத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால் இத்தனை கொலைகள் நடந்திருக்காது. இன்னமும் இங்கே சாதி இருக்கிறது என்பதையே ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் எங்கே? தண்டிப்பது எங்கே?. இதற்கெல்லாம் அடிப்படைத் தீர்வு காணாமல்தான் ’தலித்களாகப் பார்க்கப்படுவதைத் தலித்கள் விரும்பவில்லை. இந்தப் பிரச்னை இன்னும் இருபது ஆண்டுகளில் உருகிக் கரைந்துவிடும்’ என்று மேலே அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருக்கிறோம்.

Vikatan
மேட்டுப்பாளையம் ஆணவக் கொலையும்...நாம் பேசமறுப்பதும்...! - தீர்வு என்ன?

’என் மகள் பிழைப்பது கடினம். மருத்துவர்களே உறுதிப்படச் சொல்கிறார்கள்’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு வர்ஷினியின் அம்மா கூறியபோதுகூட ’பாசிட்டிவ்வாக இருப்போம். சாதிவெறியின் முன்பு அன்பு தோற்றுவிடக் கூடாது. நிச்சயம் வர்ஷினி உயிரைப் பிடித்துக்கொண்டு பிழைத்துவிடுவாள்’ என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மீண்டுமொரு முறையாகச் சாதிவெறியை ஜெயிக்க விட்டிருக்கிறோம். இனி ஒருமுறைகூட, சாதிவெறி ஜெயிக்கக் கூடாது என்றால் ‘இங்கே சாதி இருக்கிறது!’ என்பதை முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். சாதியப் பேதங்கள் பற்றிக் குடும்பங்கள் விவாதிக்க வேண்டும். இந்தியச் சமூகத்தில் இருக்கும் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 249 மில்லியன். இதில் 203 மில்லியன் குடும்பங்கள் இந்துமதத்தையும் 31 மில்லியன் குடும்பங்கள் இஸ்லாம் மதத்தையும் 6 மில்லியன் குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தையும் தழுவியதாகக் கணக்கீடுகள் சொல்கின்றன.

இன்ன மதம் என்று இல்லாமல், பணம்படைத்தவர்கள் பணமற்றவர்கள், ஆண், பெண், மாற்றுப்பாலினத்தவர்கள் என எந்தவிதப் வேறுபாடும் இல்லாமல் அவரவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து சாதியப் பேதங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். கல்வியை முழுமையாகப் பெறும் முதல் தலைமுறையில் இருந்துதான் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை பிறக்கும் என்பதுபோல, சாதிய பேதங்களைக் குடும்பத்தில் அமர்ந்து பேசத் தொடங்கும் முதல் தலைமுறையில் இருந்துதான் ஒடுக்கும் சிந்தனையிலிருந்தான விடுதலை கிடைக்கும். குடும்பம் பேசவில்லை என்றால் கல்விக்கூடங்கள் அதனைப் பேசவேண்டும். கல்விக் கொள்கைகள் அதனை உறுதிப்படுத்த வேண்டும். கொள்கைகளே இதுபற்றிப் பேசாதபோது தேர்தல் அறிக்கைகளும் பேசாது.

நவீன இந்தியாவில் இருபது ஆண்டுகள் ஆனாலும் இந்த நிலை மாறாது. புதிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக இன்னும் 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டிருக்கிறது. இந்த 30 நாட்களில் எது மாறினாலும் மாறாவிட்டாலும் கொள்கை வரையறுத்தவர்கள் மனது மாறினால் மட்டுமே அது சாத்தியம். இல்லையென்றால், தலித்களாகப் பார்ப்பதை அல்ல, தலித்களைப் பார்ப்பதையே சில கூட்டம் விரும்புவதில்லை என்னும் செரிக்க முடியாத உண்மை எத்தனை ஆண்டுகளானாலும் இணைகோடாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.