Published:Updated:

குழந்தை மீது கொடூரத் தாக்குதல்; திருமணம் தாண்டிய உறவே காரணம்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கைதுசெய்யப்பட்ட குழந்தையின் தாய்
கைதுசெய்யப்பட்ட குழந்தையின் தாய்

பெற்ற குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கிய தாய், கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமணம் தாண்டிய உறவின் விளைவாகவே இந்தக் கொடுஞ் செயல் நடத்தப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இளம்பெண் ஒருவர், தன் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, காண்போரின் மனதையும் பதைபதைக்கச் செய்தது. பெற்ற குழந்தையைத் தாக்கிய அந்தப் பெண் நேற்று (29.08.2021) இரவு தனிப்படை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று விசாரணை முடிவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்த தாய் ; வழக்கு பதிவு செய்த காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (37). இவருக்கும், ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம், ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவழகன் வேலை செய்துவந்ததால், சென்னையில் வசித்துவந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு 4 மற்றும் 2 வயதில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதன்முறையாக கொரோனா பரவிய காலத்தில் செஞ்சி அருகேயுள்ள தனது கிராமத்துக்கே வந்து வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

வைரலான வீடியோ காட்சி
வைரலான வீடியோ காட்சி

திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவன், மனைவி இருவரிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்துவந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், 23-ம் தேதி தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது 2 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கி அதை வீடியோவாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறார் ராணி. புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் குழந்தை தந்தை வடிவழகன் கவனிப்பில் இருக்கிறான். அப்போது, தம்பதிக்குள் நடந்த சண்டையின் முடிவில், ராணியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்திருக்கிறார் வடிவழகன். இருவரும் விவாகரத்து செய்துகொள்ளும் முயற்சியும் நடந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு, விவாகரத்து பெறுவதற்கான பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதற்காக ஆந்திரா, ராம்பள்ளியிலுள்ள ராணியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் வடிவழகன். அப்போது தனக்குச் சொந்தமான பொருள்களைக் கேட்டு வாங்கும்போது, செல்போனையும் வாங்கிவந்திருக்கிறார் அவர். வீட்டுக்கு வந்து செல்போனைப் பார்த்தபோது, அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். குழந்தையைத் தாக்கிய தாயின் மீது 323, 325, 355, 308, ஜே.ஜே சட்டம் உட்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பரவி, மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அறிவுறுத்தலின்பேரில் தனிபடைப்படை அமைக்கப்பட்டு, ராணியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம், ராம்பள்ளியிலுள்ள கோழிப்பண்ணையில் இருந்த ராணியை அங்குள்ள காவல்துறையினரின் உதவியோடு கைதுசெய்த விழுப்புரம் போலீஸார், நேற்று (29.08.2021) இரவு சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். டி.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் விசாரணை நடைபெற்றபோது, திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.

மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!
ராணியைக் கைது செய்து அழைத்து வரும் காவல்துறை
ராணியைக் கைது செய்து அழைத்து வரும் காவல்துறை

இது தொடர்பாக டி.எஸ்.பி இளங்கோவனிடம் பேசினோம். "ராணிக்கும், அவரின் கணவர் வடிவழகனுக்கும் ஏறத்தாழ 15 வயது வித்தியாசம். திருமணம் செய்துகொண்டு இவர்கள் சென்னையில் வசித்துவந்தபோது இந்தப் பெண்ணுக்கும், பிரேம்குமார் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். பிரேம்குமார் ராணியிடம், அவருடைய கணவருடன் சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு வந்துவிடுமாறு கூறியிருக்கிறார். அப்படி வந்த பிறகு பிரேம்குமார், ராணியின் அம்மாவிடம் ராணியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். மேலும் வீடியோ காலில் பேசும்போது ராணியின் பெரிய பையன் ரணியைப் போலவே அழகாக இருப்பதால், அவனைத் தனக்குப் பிடித்திருக்கிறது எனக் கூறியுள்ளார். அதேசமயம், சின்னப் பையன் அவனது அப்பாபோலவே இருக்கிறான். அதனால் சின்னப் பையனைத் தனக்குப் பிடிக்கவில்லை எனக் கூறியிருக்கிறா. எனவே அவனை அடித்து தனக்கு வீடியோ எடுத்து அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் 'உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்' எனக் கூறியுள்ளார். அதனால், இந்தப் பெண்ணும் அந்தக் குழந்தையை அடித்து அதை வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

40 நாள்களுக்கு முன்பாக, கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவழகனே அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று ஆந்திர மாநிலம், ராம்பள்ளியிலுள்ள தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். இருவரும் விவாகரத்து பெறும் நிலைக்குச் சென்றுள்ளனர். அதனால் மூன்று தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கச் சென்றிருக்கிறார் வடிவழகன். அப்போது இவருடைய பொருள்களைக் கேட்டு வாங்கி வரும்போது, அந்தப் பெண் வைத்திருந்த போனையும் வாங்கி வந்திருக்கிறார். அப்போதுதான் இந்த வீடியோ பற்றித் தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தத் தகவல்கள் அனைத்தும், அந்தப் பெண்ணை விசாரித்தபோது தெரியவந்தது. அந்தப் பெண் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என உறுதி செய்வதற்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவர் மூலம் சோதித்தபோது `அவர் நலமாக இருக்கிறார்' என மருத்துவர் உறுதிசெய்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதி முன்னிலையில் அந்தப் பெண்ணை ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் 15 நாள்கள் காவலில் வைத்திருக்கிறோம்.

குழந்தையை தாக்கிய தாய் ராணி
குழந்தையை தாக்கிய தாய் ராணி

அந்தப் பெண் கூறிய தகவலின்படி, பிரேம்குமாரைப் பிடிப்பதற்கு ஒரு காவல் குழு சென்னை விரைந்துள்ளது. அவனது இரு போன் நம்பர்களிலும் முயன்றபோது 'ஸ்விட்ச் ஆஃப்' என வருகிறது. அந்த நபரைப் பிடித்து விசாரிக்கும்போது மேலும் தகவல்கள் தெரியவரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு