Published:Updated:

சோட்டா ராஜனின் கூட்டாளி.. மும்பையில் 80, கர்நாடகாவில் 100 வழக்குகள்! - யார் இந்த ரவி புஜாரி?

ரவி புஜாரி
ரவி புஜாரி

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்திக் கொண்டுவரப்பட்ட ரவி புஜாரியை மும்பை போலீஸார் போராடி மும்பை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பையில் பில்டர்கள் மற்றும் திரைப்படப் பிரபலங்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறித்துவந்தவர் ரவி புஜாரி. இவர்மீது மும்பையில் மட்டும் 80 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கர்நாடகாவில் 100 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெங்களூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ரவி புஜாரி, மும்பைக்கு வந்தார். 1996-ம் ஆண்டு அங்கிருந்து தப்பித்து நேபாளம், பாங்காக், உகாண்டா போன்ற பகுதியில் பதுங்கி இருந்தார். இறுதியாக கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் செனகல் நாட்டில் பெங்களூரு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார். மும்பையிலுள்ள வழக்குகள் குறித்து ரவி புஜாரியிடம் விசாரிக்க அவர மும்பைக்கு அழைத்து வர மும்பை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பெங்களூரிலுள்ள வழக்குகளின் விசாரணைக்கு ரவி புஜாரி தேவையாக இருந்ததால், எளிதில் மும்பைக்கு அழைத்துவர முடியவில்லை.

ரவி புஜாரி
ரவி புஜாரி

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பெங்களூரு கோர்ட் கடந்த வாரம் ரவி புஜாரியை மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் கொடுத்தது. இதையடுத்து ரவி புஜாரி பெங்களூரிலிருந்து மும்பைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ரவி புஜாரியை மார்ச் 9ம்- தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ரவி புஜாரியை போலீஸார் சிறையில் அடைக்காமல் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்வைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மும்பை போலீஸாரின் கஸ்டடியில் சில மாதங்கள் ரவி புஜாரி இருப்பார் என்று தெரிகிறது. தற்போது கஜாலி ஓட்டலில் 2016-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இது தவிர மிகவும் பிரபலமான தீபா பாரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, செம்பூர் பில்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற பல வழக்குகளும் இவர் மீது உள்ளன. ரவி புஜாரி மும்பையிலிருந்து சென்ற பிறகு, அந்தோணி பெர்னாண்டஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். பின்னர் டோனி பெர்னாண்டஸ் என்றும் ராக்கி பெர்னாண்டஸ் என்றும் மாற்றிக்கொண்டு அதற்கு தக்கபடி பாஸ்போர்ட் தயாரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததோடு அங்கிருந்துகொண்டே தனது கூட்டாளிகள் மூலம் மும்பையில் முக்கியப் பிரமுகர்களை மிரட்டி, பணம் பறித்துவந்தார். அமிதாப் பச்சனின் `அமர் அக்பர் அந்தோணி’ படத்தை பார்த்துவிட்டு, அது மிகவும் பிடித்துப்போய் தன் பெயரை டோனி பெர்னாண்ட்ஸ் என்று மாற்றிகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி புஜாரி
ரவி புஜாரி

ரவி புஜாரி கைது செய்யப்பட்டிருப்பதால் மும்பையில் முக்கியப் பிரமுகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். சோட்டாராஜனின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் ரவி புஜாரி 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். சோட்டாராஜனும் ஏற்கெனவே இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இது தவிர மும்பையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த அபுசலேமும் போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து காதலியுடன் நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டுவிட்டார். ஆனால், மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பத்தில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் மட்டும் தொடர்ந்து பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு