Published:Updated:

`தற்கொலைகளின் தேசமாகிறதா இந்தியா?' இரண்டாவது இடத்தில் தமிழகம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலமும், இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றன.

தற்கொலை தேசமாகிறதா இந்தியா?
தற்கொலை தேசமாகிறதா இந்தியா?

தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நிகழ்கின்றன என்று உலக சுகாதார அமைப்பின் (W.H.O) சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக W.H.O கூறுகிறது.

WHO
WHO

இந்த எண்ணிக்கையானது, மலேரியா, மார்பகப்புற்றுநோய், போர் அல்லது படுகொலைகளில் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

2018-ம் ஆண்டுக்கான, `விபத்தின் காரணமாக இறப்புகள் மற்றும் தற்கொலைகள்' குறித்த தேசிய குற்றப்பதிவு ஆவணக்காப்பகத்தின் ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி 2018-ம் ஆண்டு இந்தியாவில் 1,34,516 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2017-ம் ஆண்டில் 1,29,887 பேர் தற்கொலைகள் செய்துகொண்டுள்ளனர்.

2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை விவரிக்கிறது இந்த அட்டவணை:

இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்கள்
இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்கள்

கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும், இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றன.

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்கள் இவைதான்...

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலம்
இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலம்

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 17,972 தற்கொலைகள் நடந்துள்ளன. 13,896 தற்கொலைகளுடன் தமிழகம் இரண்டாமிடத்திலும், 13,255 தற்கொலைகளுடன் மேற்கு வங்கம் மூன்றாமிடத்திலும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் 2,526 தற்கொலைகளுடன் டெல்லி முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் குறைந்தளவு தற்கொலைகள் நடைபெறும் கடைசி ஐந்து மாநிலங்கள் இவைதான்...

இந்தியாவில் குறைந்தளவு தற்கொலைகள் நடைபெறும் மாநிலம்
இந்தியாவில் குறைந்தளவு தற்கொலைகள் நடைபெறும் மாநிலம்

யூனியன் பிரதேசங்களில் மூன்றே மூன்று தற்கொலைகளுடன் லட்சத்தீவு தனித்துவம் பெற்றிருக்கிறது. டையூ & டாமனில் 35 மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 101 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மாநிலங்கள் அளவில் குறைந்தபட்சமாக நாகாலாந்தில் 35, மணிப்பூரில் 52 மற்றும் மிசோரத்தில் 79 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2018-ம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்கள் பட்டியலில் எந்தெந்தப் பிரிவினர் இடம் பெற்றுள்ளனர் என்பதைப் பார்ப்போம்...

தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம்
தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம்

கடனும், குடும்பப் பிரச்னைகளும் தற்கொலைக்கான முக்கியக் காரணிகளாக இருப்பது தற்கொலை செய்துகொண்டோரின் பிரிவைப் பார்த்தால் தெரியவருகிறது. நாட்டிலேயே தினக்கூலிகள்தான் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த ஆண்டில் மட்டும் தினக்கூலிகள் 30,127 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதையடுத்து குடும்பத்தலைவிகள் 22,937 பேரும், சுயதொழில் புரிவோர் 13,149 பேரும், வேலையற்றோர் 12,936 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்திய விவசாயிகளின் துயரம் என்றும் தீராது என்பதையும் உணர்த்துகிறது இந்தப் புள்ளி விவரம். கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 10,349 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஒரே ஆறுதல் அதற்கு முந்தைய ஆண்டில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கையைவிட (2017-ம் ஆண்டில் 10,655 விவசாயிகள்) இது சற்று குறைவாகும்.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடைபெறும் டாப் 10 மாநிலங்களின் பட்டியல் இதுதான்...

விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலம்
விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் மாநிலம்

பீகார், கோவா, மேகாலயா, ஒடிசா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், சண்டிகர், டையூ & டாமன், டெல்லி, புதுச்சேரி, லட்சத்தீவுகளில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பூஜ்ஜியத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 401 விவசாயிகள் தங்கள் வாழ்வை தாங்களாகவே முடித்துக்கொண்டுள்ளனர்.

அதிகமான தற்கொலைகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது. இதில் மாபெரும் ஆச்சர்யம் யாதெனில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருப்பதுதான். 2018-ம் ஆண்டில் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட 13,896 பேர்களில் ஆண்கள் 9,179 பேர். பெண்கள் 4,715 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர்.

தமிழகத்தில் 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்த பட்டியல்

தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம்
தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம்

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகப்படியான தற்கொலைகள் குடும்பப் பிரச்னைகளின் காரணமாகத்தான் நடைபெறுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதைத்தொடர்ந்து உடல்நலக் குறைபாடு, மது போதை, போதைப்பொருள் பயன்பாடு, திருமணம் தொடர்பான பிரச்சனைகள், கடன் தொல்லை, காதல் விவகாரங்கள், வேலையின்மை நெருங்கியவர்களின் மரணம், சந்தேகத்திற்கிடமான உறவு என 20-க்கும் அதிகமான காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன.