Published:Updated:

`தவறாகப்பேசினார்; வீட்டுக்கு வரவழைத்து உதைத்தோம்!'- தொண்டு நிறுவன அதிபரை நடுரோட்டில் தாக்கிய பெண்

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரை பெண் ஒருவர் நடுரோட்டில் விரட்டித் தாக்கிய சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

நடுரோட்டில் நடந்த தாக்குதல்
நடுரோட்டில் நடந்த தாக்குதல்

விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த நிக்கோலஸ் என்பவரை பெண் ஒருவர் தெருவில் விரட்டி தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிவிட்டு பாலியல் உறவுக்கு அழைத்ததாகக் கூறி அந்தப் பெண் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார். அந்தப் பெண், சிவகாசி அருகே உள்ள நாரணாபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மீண்டும் என்னிடம் போனில் தவறாகப் பேசியதால் இனி இப்படிப் பேசக்கூடாது என எடுத்து சொல்வதற்காகத் தான் வீட்டுக்கு வர வைத்தோம்.
புவனேஸ்வரி

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் பேசினோம். ``நிக்கோலஸ் மீதோ, அவரின் மனைவி ஞானசெல்வி மீதோ அப்பகுதி மக்களுக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. அன்னை தெரசா தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் நிக்கோலஸ். அவரின் மனைவி மதுரையில் உள்ள கிறிஸ்துவ பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தொண்டு நிறுவனம் நடத்தி வருவதால் அடிக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் இவர் தனக்குப் பல அதிகாரிகளைத் தெரியும். அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இவரிடம் அரசு ஊழியர்கள் சிலரும் ஏமாந்துள்ளனர்.

பொதுமக்கள் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் ஆட்களை வைத்து மிரட்டுவதோடு, மீறிக் கேட்டால் நாம் கொடுத்ததில் பாதி பணத்தைகூட திருப்பித் தர மாட்டார். வட்டிக்குக் கடன் வாங்கி வேலைக்குப் பணம் கொடுத்தவர்கள் எல்லாம் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. எப்போதாவது சிக்குவார் என நினைத்தோம். இப்போது வசமாகச் சிக்கிக்கொண்டார்'' என்கின்றனர்.

நிக்கோலஸ்
நிக்கோலஸ்
ஆர்.எம்.முத்துராஜ்

அதேபோல புவனேஸ்வரி குறித்து விசாரித்தபோது, அவர் மீதும் அப்பகுதியில் நல்ல பெயர் இல்லை. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம். 3 ஆண்டுகளாக இங்கே வசிக்கிறார். கணவர் மும்பையில் வேலை செய்து வருகிறார். அவர் தன்னுடைய குழந்தையுடன் வசித்து வருகிறார். நிக்கோலஸ் அடிக்கடி இங்கே வருவார். அவருடன் பலமுறை இந்தப் பெண் பைக்கில் சென்றுள்ளார். இப்போது இவர்களுக்குள் என்ன பிரச்னை எனத் தெரியவில்லை'' என்கின்றனர்.

நிக்கோலஸிடம் பேசினோம். ``தொண்டு நிறுவனம் நடத்தி வருவதால் ஆட்சியர் அலுவலகம் சார்பில் நடக்கும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து கொடுக்கும்படி என்னை அணுகுவார்கள். இதுவரை 60-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வாங்கிக் கொடுத்துள்ளேன். இதன்மூலம் புவனேஸ்வரிக்கும் ரூ.15,000 கடன் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது நேரில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். நேரில் சென்ற என் மீது, பாலியல் தொந்தரவு செய்ததாகப் பழி சுமத்துகிறார்'' எனத் தெரிவித்தார்.

புவனேஸ்வரி
புவனேஸ்வரி

தாக்குதல் தொடர்பாக, புவனேஸ்வரியிடம் கேட்டபோது, ``2016-ம் ஆண்டு சிலிண்டர் ஏஜென்சி எடுத்துத் தருவதாகக் கூறி நிக்கோலஸ் இப்பகுதிக்கு வந்தார். அப்போது தனக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பலரைத் தெரியும். அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறினார். பின்னர், அவரது தொண்டு நிறுவனத்தில் சில மாதம் பணிபுரிந்தேன். வேலைக்காக 6 மாதத்துக்கு முன் ரூ.2 லட்சம் கொடுத்தேன்.

வேலை குறித்து கேட்டபோது என்னிடம் தவறாகப் பேசினார். இதற்கு முன்பும் இதேபோல பேசியதால் அப்போதும் கண்டித்தேன். மீண்டும் என்னிடம் போனில் தவறாகப் பேசியதால் இனி இப்படிப் பேசக்கூடாது என எடுத்துச் சொல்வதற்காகத்தான் வீட்டுக்கு வரவைத்தேன். ஆனால், அப்போதும் அவர் தவறாகப் பேசியதால் வேறு வழியின்றி தாக்கினோம். மகளிர் சுய உதவிக்குழுவில் நான் உறுப்பினராகவே இல்லை. அவரிடம் கடன் வாங்கவும் இல்லை'' என்றார் உறுதியாக.