Published:Updated:

போலி கிளினிக்: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

சிறுமி உயிரிழப்பு ( சித்திரிப்புப் படம் )

அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் நடத்திவந்த தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சைபெற்ற 5 வயது சிறுமி, உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

போலி கிளினிக்: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் நடத்திவந்த தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சைபெற்ற 5 வயது சிறுமி, உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

Published:Updated:
சிறுமி உயிரிழப்பு ( சித்திரிப்புப் படம் )

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுகுமார். இவரின் 5 வயது மகள், கிளியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த மாதம் இந்தச் சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, தைலாபுரம் அருகேயுள்ள ஈச்சங்காடு சாலையில் தனியார் கிளினிக் நடத்திவரும் கணேசன் என்பவரிடம் சிகிச்சை பெறுவதற்காக, தன் குழந்தையை 18.09.2022 அன்று மாலை 6 மணிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் சுகுமார். அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய சிறுமி, மறுதினம் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமிக்கு உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது. அன்று மாலையே உடலின் பின்புறம் கருநிறமாக மாறி, கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன.

கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்; கணேசன்
கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்; கணேசன்

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அன்றிரவே அருகிலுள்ள தைலாபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், ஈச்சங்காடு பகுதியில் தனியார் கிளினிக் வைத்திருக்கும் கணேசன், உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலிய உதவியாளராக பணிபுரிபவர் என்பதும், அவர் போலியாக கிளினிக் வைத்து நடத்திவந்ததும் அதன் பின்னர் தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையில், சிறுமியின் உடல்நிலை மோசமாகிப் போயிருக்கிறது. அதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேல் சிகிச்சைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தவறான சிகிச்சை அளித்த  கணேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 21.09.2022 அன்று கிளியனூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் சிறுமியின் தந்தை சுகுமார். ஆனால், நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்பட்டதால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 25.09.2022 அன்று திண்டிவனம் - புதுவை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த 5 வயது சிறுமி
உயிரிழந்த 5 வயது சிறுமி

அப்போது சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, கணேசனின் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுமிக்கு, மருத்துவம் போதிய பலன் அளிக்காமல், உடலில் நோய்தொற்று மேலும் அதிகரித்து, உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி நேற்று மாலை 4 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதனால், கடும் சோகத்தில் ஆழ்ந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள். உரிய நியாயம் வேண்டி உடலை வாங்க மறுத்துவருகின்றனர். 

சாலைமறியல்
சாலைமறியல்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய சிறுமியின் உறவினர்கள் தரப்பு வழக்கறிஞர் வீரசந்திரன், "போலி கிளினிக் வைத்து நடத்தி, தவறான சிகிச்சை அளித்தவர் மீது 388-வது ஐ.பி.சி பிரிவின் கீழ் மட்டும்தான் வழக்கு பதிந்திருக்கிறது போலீஸ். எனவே, கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்கு பதியப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் போலி டாக்டர்கள் உருவாகாதபடி அந்தச் சட்டப் பிரிவுகள் அமைய வேண்டும். மேலும், குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அதுவரை சிறுமியின் உடலை வாங்குவதாக இல்லை" என்றார்.