Published:Updated:

`நான்கு மாதங்களாகத் துன்புறுத்தப்பட்ட இளம்பெண்!’ - ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?

எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் - ஹத்ராஸ்
எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் - ஹத்ராஸ்

சந்தீப், லவ்குஷ் ஆகிய இருவரும் தொடர்ந்து அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியே வரும்போதெல்லாம் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டிருப்பதாக ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாயார் கூறியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. கொலையை அடுத்து அந்தப் பெண்ணின் உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல் காவல்துறையினரால் எரிக்கப்பட்டது சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணின் தாய் கடந்த சில மாதங்களாகவே அந்தப் பெண் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள் எனக் கூறியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் தாகூர் எனப்படும் ஆதிக்க சாதி ஆண்களில் இருவர் ஏற்கெனவே அந்தப் பெண்ணின் பின்னால் துரத்திவருவதும், வழியில் செல்லவிடாமல் தடுப்பதுமாக துன்புறுத்தி வந்ததாகவும், அதை முதலில் விளையாட்டாக எடுத்துக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்டபெண்ணின் தாய் கூறியிருக்கிறார்.

சந்தீப், லவ்குஷ் இருவரும் தொடர்ந்து அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியே வரும்போதெல்லாம் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டுவந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஹத்ராஸ் - ராகுல், பிரியங்கா காந்தி
ஹத்ராஸ் - ராகுல், பிரியங்கா காந்தி

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட சந்தீப்பின் தாத்தாவும், லவ்குஷ்-ன் குடும்பத்தினரும் இதை மறுத்திருக்கிறார்கள். இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் முன்னரே புகார் தெரிவித்திருப்பார்கள் என்றும், தற்போது வீண் பழி சுமத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர் கோரிக்கை என்ன? - 5 விஷயங்களைப் பட்டியலிட்ட பிரியங்கா காந்தி

சந்தீப், லவ்குஷ்-இன் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டைவிட்டு வெளியே செல்வதையே முற்றிலும் தவிர்த்திருக்கிறார். அருகிலுள்ள கடைகளுக்குச் செல்லும்போதுகூட உறவினர் பெண் ஒருவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்திருக்கிறார். இது குறித்து அவரின் உறவினர் பெண் கூறியதாவது, ``தாகூர் பிரிவு இளைஞர்கள் இருவரும் அவரை வழிமறித்ததையும், பின்னால் துரத்துவதையும் கவனித்திருக்கிறேன். மேலும், நான் அவர்களை போலீஸில் பிடித்துக் கொடுப்பதாகவும் எச்சரித்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். எனினும், அவர்கள் நடத்தையில் எந்த மாற்றமும் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹத்ராஸ் சம்பவத்துக்கு எதிரான போராட்டம்
ஹத்ராஸ் சம்பவத்துக்கு எதிரான போராட்டம்

`பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்படுபவையே. நம் நாட்டில் பாலியல் வன்முறைகளுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், சிறிய அளவில் கேலி செய்தல் உள்ளிட்ட குற்றங்களை நாம் கண்டுகொள்ளாமல் விடுவதும் பின்னாள்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு