பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரம்.. மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவை பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்களின் உடைமாற்றும் வீடியோவை வெளியிட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிகண்டன் (35) மற்றும் சவிதா (30). இவர்கள், மேட்டுப்பாளையம் சாலை, எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தனர். இதனிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவிதா பெட்ரோல் பங்கில் உள்ள ஓர் அறையில் உடைமாற்றிக் கொண்டிருந்தார்.

அதை யாரோ ரகசியமாக வீடியோ எடுப்பது சவிதாவுக்குத் தெரிந்துள்ளது. இந்த விஷயத்தை தனது கணவர் மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சூப்பர்வைசர் சுபாஸ் மீது மணிகண்டன் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பேச்சுவார்த்தைக்குப் பின்னர் புகார் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தராததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சுபாஷ் என்பவரால் பெட்ரோல் பங்கில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 354(c),66(e),67(a) தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000,4- பெண்களுக்கு எதிரான குற்றம் 2002,3,4&6 இன்டீசன்ட் ரெப்பெரசன்சேசன் ஆப் வுமன் ஆக்ட்1986 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், வீடியோ விவகாரம் தொடர்பாக வீடியோவை எடுத்த சுபாஷ், ஊடகத்தில் வெளியிட்ட தொலைக்காட்சி செய்தியாளர் மருதாசலம் ஊடகத்தில் வெளியிட காரணமாக இருந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இந்நிலையில், மணிகண்டன், சுபாஸ் மற்றும் மருதாசலம் ஆகிய மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.
இதில், மருதாசலம் கடந்த சில ஆண்டுகளாகவே, இதுபோன்ற ரகசிய வீடியோக்களை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பார்த்து வந்த போலி பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.