Published:Updated:

விழுப்புரம்: பட்டியலின முதியவர்களைக் காலில் விழவைத்த சம்பவம்! - நடந்தது என்ன?- இருதரப்பு விளக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காலில் விழும் பட்டியலின முதியவர்கள்
காலில் விழும் பட்டியலின முதியவர்கள்

சில தினங்களுக்கு முன்பு, கிராம பஞ்சாயத்தில் மூன்று முதியவர்கள், நாட்டாமை கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அதற்கு எதிராகக் குரல்கொடுத்த நிலையில் சம்பந்தப்பட்ட சிலரைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை.

திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க நாம் சென்றபோது, பரபரத்துக்கிடந்தது அந்த கிராமம். பதற்றம் தணியாமல் மரத்தடியில் அமர்ந்திருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் பேசினோம்.

``நாங்க 40 குடும்பம் இந்தக் கிராமத்துல வாழ்றோம். கூலி வேலைக்குப் போனால்தான் எங்களுக்குச் சோறு. ஒவ்வொரு வருஷமும் மாரியம்மன் கோயில்ல 'கூழ் வார்த்தல் திருவிழா' நடத்துவோம். இப்போ, கொரோனா சமயம்கிறதால, கூழ் வார்த்தல் திருவிழா நடத்த கிராம நிர்வாக அலுவலர்கிட்ட அனுமதி கேட்டப்போ, கொடுக்கலை. அதனால மே 9-ம் தேதி, விழாவைப் பெரிசா நடத்தாமல் கூழ் மட்டும் ஊத்தி முடிச்சோம். 12-ம் தேதி ராத்திரி, எங்கள் பகுதி குழந்தைகளைவெச்சு 'கலை நிகழ்ச்சி’ நடத்தினோம். இதை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ்ங்கிற தம்பி போலீஸ்ல சொல்லிட்டார். உடனே வந்த போலீஸ்காரங்க, அனுமதி வாங்காம நிகழ்ச்சி நடத்துறதா சொல்லி, ஸ்பீக்கர் எல்லாத்தையும் ஸ்டேஷனுக்கு எடுத்துக்கிட்டு போயிட்டாங்க.

பாதிக்கப்பட்ட மூவர்
பாதிக்கப்பட்ட மூவர்

மறுநாள் (13.05.2021) காலையில 8:30 மணிக்கு ஸ்டேஷன் போன நாங்க, ராத்திரி 8 மணிவரை போராடி ‘இனிமே இப்படிப் பண்ண மாட்டோம்னு' எழுதிக் கொடுத்துட்டு பொருள்களை மீட்டுக்கிட்டு வந்தோம். இரவு 9:30 மணியளவில் ஊருக்குள்ள நுழையுறப்போ, புகார் கொடுத்த அந்த தம்பி எங்க வண்டியை மறிச்சு, "எங்களைப் பகைச்சுக்கிட்டா இப்படித்தான்னு" சொல்லி தகாத வார்த்தையில ஏசுனாப்ல. அவங்க பெரிய பகுதிக்காரங்கங்கிற பயத்துல அங்கிருந்து வந்துட்டோம். எங்க ஊர்ல பல வருஷமா மாற்று சாதிக்காரங்க கூழ் ஊத்துனதுக்கு அப்புறமாகத்தான் நாங்க கூழ் ஊத்தணுங்கிற வழக்கம் இருந்துச்சு. கொரோனா காலம்கிறதால அவங்க கூழ் ஊத்தலை. நாங்க சாதாரணமா கூழ் ஊத்தினோம். இதைக் காரணமாகவெச்சுக்கிட்டுதான் இப்படிப் பண்ணுறாங்க. அவங்க வழிமறிச்சுப் பேசுனது தெரிந்து, "நாம பஸ்ஸைப் பிடிக்க அவங்க பகுதியைக் கடந்துதானே போகணும்... பிரச்னை பண்ணினா என்ன பண்ணுறது’’ன்னு எங்க பகுதி மக்கள் பயந்தாங்க.

கோவை: `நீ எப்படி இந்த நாற்காலியில் அமரலாம்?’ - பெண் ஊராட்சித் தலைவருக்கு நடந்த சாதிய அநீதி

அதனால மறுநாள் (14.05.2021) எங்க பகுதியில இருந்த பெரியவங்க நாலு பேர் பஞ்சாயத்துக்குப் போனோம். அப்புறமா ஊர் கூடிடுச்சு. "ஐயா, இந்த மாதிரி கேஸ் கொடுத்திருக்காங்க. நேத்து வழிமறிச்சு பிரச்னை பண்ணுறாப்ல. நாங்க குறைவான மக்கள்தானே இருக்கோம்... நாங்க எதிர்த்து எதுவும் பண்ணப் போறதில்ல. பிரச்னை வேண்டாமே"னு சொன்னோம். "இப்படியே சொல்லிட்டு போனால் எப்படி, காலுல விழுந்து கும்பிட்டுட்டுப் போங்க" அப்படின்னு அவங்க அடாவடியா சொன்னாங்க. வேறு வழியில்லாமல், வெற்றிலை தாம்பூலம் வெச்சு... ஆறுமுகம், திருமால், சந்தானம்னு மூணு பெரியவங்க பஞ்சாயத்துல நாட்டாமை காலில் விழுந்தாங்க. எங்களுக்கு என்ன ஆசையா அய்யா! தன்மானத்தை விட்டுட்டு அவங்க காலுல விழணும்னு” என்று அந்தக் கொடூர சம்பவத்தைக் கூறிக் கண்கலங்கினர்.

ஊரைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி
ஊரைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி

தொடர்ந்து பேசியவர்கள், "கால்ல விழச் சொன்னதுக்கு எங்க பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதுக்கும் கெட்ட வார்த்தையால் திட்டி, "காலில் விழுந்தா என்ன குறைஞ்சா போய்விடுங்க"னு கேட்டு அடிச்சாங்க . அவங்களை எதிர்த்தா உயிர்கூட மிஞ்சாதுங்கிற பயத்துல பசங்களை மடக்கி இழுத்துக்கிட்டு வந்துட்டோம். அவங்க அதுக்கப்புறமா, நாங்க காவல்துறைக்கு 2,00,000 ரூபாய் கொடுத்து பறிமுதல் செய்த பொருள்களை மீட்டு வந்ததாகவும், அந்தப் பணத்தை திருப்பித் தரும்படி பஞ்சாயத்தில் கேட்டதாகவும் ஸ்டேஷன்ல பொய்ப் புகார் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம்தான் கால்ல விழவெச்சது பத்தி நாங்க புகார் கொடுத்தோம். இதுக்கு முன்னாடி, இந்த மாதிரி பல கொடுமைகளை அனுபவிச்சுருக்கோம். மூணு வருஷத்துக்கு முன்பு அம்பேத்கர் பிறந்தநாளன்னிக்கி பள்ளி மாணவர்கள் முன்னாடி அம்பேத்கர் போட்டோவைத் தூக்கிப் போட்டு உடைச்சாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவங்க இருக்கும்போது நாங்க ரேஷன் கடைக்குப் போகக் கூடாது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தப்போ அவங்க பகுதி அருகே சாலையில் போகும்போது நாங்க மேளம் அடிக்கக் கூடாதுனு பல கட்டுப்பாடுகளை விதிச்சுருக்காங்க. இதைவிட கொடுமை, எங்க ஊரில் பொதுவாக இருந்த நீர்தேக்கத் தொட்டியிலிருந்து, எங்க பகுதிக்கு வரும் குழாயில் ஜட்டியைவெச்சு அடைச்சு வெச்சதுதான். மற்றொரு போர்வெல்ல கல்லைப்போட்டு பயன்படுத்த முடியாதபடி பண்ணிட்டாங்க. அவங்க 250 குடும்பம். பெரும் கூட்டமாக இருக்காங்க. அதனால அவங்களோட பிரச்னை வேணாம்னு எவ்வளவோ பணிஞ்சுதான் போறோம். ஆனாலும் வம்பிழுக்குறாங்க” என்றனர். அவர்கள் குறிப்பிட்ட எதிர்த் தரப்பினரிடம் பேசியபோது, “காலனி பகுதியிலிருந்து அவங்களாத்தான் பஞ்சாயத்தைக் கூட்டச் சொன்னாங்க. பஞ்சாயத்துல காலில் விழுவதுபோல நடிச்சு போட்டோ எடுத்துக்கிட்டு புகார் சொல்றாங்க" என்றனர்.

கடந்த 15-ம் தேதி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ராதாகிருஷ்ணன், கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் ஒட்டனந்தல் கிராமத்துக்கு வந்து இருதரப்பினரையும் அமைதியாக இருக்கச் சொல்லி சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எட்டு பேர் மீது சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சீத்தாராமன் மற்றும் கோகுல் எனும் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். அதனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பட்டியல் சமூகத்தினர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்பு டி.எஸ்.பி சின்னராசுவிடம் பேசினோம். “முதியவர்களைக் காலில் விழவைத்த நபர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களில் இரண்டு பேரைக் கைதுசெய்துள்ளோம். மாற்று சமூகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டியலின சமூகத்தினர் 50 நபர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம். மேலும், தகராறு வராதபடி இருக்க காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்” என்றார்.

இது போன்ற செயல்கள் கலையப்பட வேண்டும் என்பதும், 'மனிதம்' எனும் சமத்துவத்தோடு அனைவரும் பாகுபாடின்றி வாழ வேண்டும் என்பதும் அவசியமாக இருப்பதோடு, எதிர்காலத் தேவையாகவும் இருக்கிறது. சாதியப் பார்வையை அனைவரும் துறப்பதும், மனிதர்கள் அனைவரும் தன் சமூகமே எனும் பார்வையை ஏற்பதும் அவசியம்.

தி.மலை: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்? ; மூதாட்டி இறுதிச்சடங்கில் அவலம்! - நடந்தது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு