Published:Updated:

ரியல் எஸ்டேட்: `ரூ.1,00,000 முதலீடு; மாதம் ரூ.18,000 வருமானம்!’ - 2.63 கோடி ரூபாய் மோசடி வழக்கு

ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ஆசைவார்த்தைகளைக் கூறி நூதன முறையில் பல கோடி ரூபாயைச் சுருட்டிய கும்பலில், ஆசிரியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த ஆலங்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். பி.டெக் முடித்துள்ள பட்டதாரி இளைஞர். இவர், 2004-ம் ஆண்டு வேப்பேரியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது அங்கு அறிவியல் ஆசிரியராக ராமசாமி என்பவர் பணியாற்றியிருக்கிறார். தற்போது, மயிலத்தை அடுத்த பாதிராப்புலியூர் அரசுப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாராம். கடந்த வருடம் (2020), மார்ச் மாதம் பிரகாஷைச் சந்தித்த இந்த ஆசிரியர் ராமசாமி, ``என்னப்பா நீ... பி.டெக் முடித்துவிட்டு வருமானம் இல்லாமல் இருக்கியே... நான் உன் வருமானத்துக்கு வழி செய்கிறேன்" என்று கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். உடன், விழுப்புரத்தை அடுத்த கோலியனூரைச் சேர்ந்த கௌசல்யா என்பவரையும், அவரின் மகன் கவியரசன் என்பவரையும் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். இந்த மூவரும் பார்ட்னர்ஷிப் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திவருகின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார் ராமசாமி. அப்போது நால்வரும், ``இந்தத் தனியார் நிறுவனம் பல இடங்களில் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் செய்துவருகிறது. நீங்கள் 1,00,000 ரூபாய் முதலீடு செய்தால் 18,000 ரூபாய் வீதம் மாதா மாதம் கிடைக்கும்" என்றும் ஆசைவார்த்தை கூறியதோடு, ``உங்களுக்குத் தெரிந்த நபர்களைச் சேர்த்துவிடுங்கள்’’ என்றும் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவர்
கைதுசெய்யப்பட்ட மூவர்
ஜெராக்ஸ் போடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்; ஆடுகள் நூதன திருட்டு! - மூவர் கும்பல் சிக்கியது எப்படி?

அறிமுகம் செய்துவைத்தவர் தெரிந்த ஆசிரியர் என்பதால், அந்த வார்த்தைகளை நம்பி, தனக்குத் தெரிந்த 25 நபர்களை அந்த நிறுவனத்தில் இணைத்திருக்கிறார் பிரகாஷ். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த 25 பேரும், 2.63 கோடி ரூபாயை கௌசல்யா, அவரின் மகன் கவியரசனிடம் கொடுத்திருக்கின்றர். அதில் 60,00,000 ரூபாயை கவியரசனின் ஐந்து வங்கிக் கணக்குகளின் மூலமாக செலுத்தியதோடு, மீதமுள்ள 2,03,00,000 ரூபாயை நேரடியாகவே கௌசல்யா, கவியரசனிடம் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்டு மாதா மாதம் தருவதாகக் கூறிய தொகையை தராமல் ஏமாற்றிவந்திருக்கிறார்கள் அந்தத் தனியார் நிறுவனத்தினர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து பலமுறை தொடர்புகொண்டபோது, ``பணமெல்லாம் கொடுக்க முடியாது. உங்களால் முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள்" என்று பகிரங்கமாகப் பேசியதோடு, ``ரெளடிகளை வைத்து கொலை செய்துவிடுவோம்’’ என்றும் மிரட்டல் விடுத்தனராம் மோசடியில் ஈடுபட்ட அந்தத் தனியார் நிறுவனத்தினர்.

ஆட்டோ ஓட்டுநர் டு போலி டி.ஐ.ஜி; மோசடி! - உடந்தை எனப் பெண் இன்ஸ்பெக்டர் மீதும் வழக்கு பதிவு

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட 25 பேரின் சார்பாக பிரகாஷ் காவல்துறையிடம் புகார் கொடுத்ததன் அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 420, 294(b), 506(2), 109 IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார். தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கிய இந்த போலீஸார், சக்திவேல் (எ) ஸ்ரீகாந்த், கௌசல்யா, ராமசாமி மூவரையும் கடந்த 7-ம் தேதியன்று கைதுசெய்தனர்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
தே.சிலம்பரசன்

கைதானவர்களை விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சக்திவேல், ராமசாமியை விழுப்புரம் மாவட்டச் சிறையிலும், கௌசல்யாவை கடலூர் பெண்கள் சிறையிலும் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கவியரசனை தேடிவருகின்றனர். `இது போன்ற போலியான ஏஜென்ட்டுகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்’ என்றும், `இதுபோல் மோசடி ஆசாமிகளைப் பற்றிய தகவல்களை அறிந்தால் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்' என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு