18 வயது நிரம்பிய ஒவ்வோர் இந்தியக் குடிமகனும், தனது வாக்கு மூலம் ஜனநாயகக் கடமையாற்ற அரசால் வழங்கப்படும் அடையாள ஆவணமே வாக்காளர் அடையாள அட்டை. இந்த அடையாள அட்டையை திண்டிவனத்திலுள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று போலியாகத் தயாரித்துக் கொடுத்துவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இயங்கிவந்திருக்கிறது சுரேஷ் என்பவரின் கம்யூட்டர் சென்டரான ஸ்ரீ ராகவேந்திரா பிரின்டர்ஸ். இந்த சென்டரில், வாக்காளர் அடையாள அட்டையை போலியாகத் திருத்தம் செய்திருக்கிறார் நடுவந்தல் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
போலியாக திருத்தம் செய்யப்பட்டு அச்சிடப்பட்ட அந்த வாக்காளர் அடையாள அட்டையை சாட்சி ஆவணமாகப் பயன்படுத்தி... வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ஆதார் திருத்தம் செய்யும் அலுவலகத்தில் கொடுத்து, தன் ஆதார் அட்டையிலும் திருத்தம் செய்ய முயன்றிருக்கிறார் செல்வராஜ். அப்போது அந்த அடையாள அட்டையைக் கண்டு சந்தேகப்பட்ட அதிகாரி, தாசில்தாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்படி அந்த அடையாள அட்டையைச் சோதித்துப் பார்த்தபோது, அதில் இருப்பது 'தேர்தல் பதிவு அதிகாரி'யின் கையொப்பம் இல்லை என்பதும், அது போலியான வாக்காளர் அடையாள அட்டை என்பதும் தெரியவந்திருக்கிறது. உடனே, திண்டிவனம் துணை ஆட்சியருக்கும் இது குறித்துத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அட்டை திருத்தம் செய்யப்பட்ட இடம் குறித்து செல்வராஜிடம் விசாரித்த வருவாய்த்துறை அதிகாரிகள்... சுரேஷின் கம்ப்யூட்டர் சென்டருக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, போலியாக ஆவணங்களை அந்த சென்டரில் தயாரித்துக் கொடுத்துவந்தது தெரியவந்திருக்கிறது. அங்கிருந்த மூன்று சி.பி.யூ., பிரின்டர் உள்ளிட்ட சாதனங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த சென்டருக்கு அதிரடியாக சீல் வைத்திருக்கிறார்கள். எனினும், அந்த சென்டரின் உரிமையாளர் சுரேஷ் கைதுசெய்யப்படவில்லை.

இந்தச் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிடங்கல் வி.ஏ.ஓ அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் திண்டிவனம் காவல்துறை அதிகாரிகள்.