Published:Updated:

`தொழில் நஷ்டம்; குடும்ப சண்டை' - கோவை நட்சத்திர விடுதியில் விபரீத முடிவெடுத்த இளம் தொழிலதிபர்

தொழிலதிபர் சூரியபிரகாஷ்
தொழிலதிபர் சூரியபிரகாஷ்

திருப்பூரைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கோவையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ். பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும், பிரபல பின்னலாடை நிறுவனமான டி.எஸ்.பி பனியன்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான பழனிசாமியின் மகள் ராகவி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனம்
திருப்பூர் பின்னலாடை நிறுவனம்
மாதிரிப் படம்

இந்தத் தம்பதிக்கு ஒரு கைக்குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடந்த வாரமே மூடப்பட்டுவிட்டன.

இதையடுத்து, பெங்களூரு செல்வதாகக் கூறிவிட்டு நேற்று காலை கோவை வந்துள்ளார் சூரியபிரகாஷ். அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்ஸி ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். மாலை 6 மணி அளவில் 6-வது மாடியில் அவர் தங்கியிருந்த அறையின் ஜன்னலில் இருந்து குதித்து திடீரென்று தற்கொலை செய்துள்ளார்.

ரெஸிடென்ஸி ஹோட்டல்
ரெஸிடென்ஸி ஹோட்டல்

இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், சூரியபிரகாஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சூரியபிரகாஷை காணவில்லை என்று அவர் சகோதரர் மதனகோபால் போலீஸில் புகாரளித்துள்ளார். அதில், `சூரியபிரகாஷ் மன உளைச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக, கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 20 நாள்களாக சிகிச்சை எடுத்து வந்தார்' என்று கூறப்பட்டிருந்தது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

தற்கொலை
தற்கொலை
மாதிரி படம்

இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சூரியபிரகாஷ் சமீபகாலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் குடும்பத்திலும் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு