Published:Updated:

ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.6 லட்சம் வட்டி; பறிபோன நிலம்; கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

திருவண்ணாமலை அருகே கந்துவட்டி கொடுமையால், பயிர் செய்த தனது நிலத்தைப் பறிகொடுத்த விவசாயி, உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலையை அடுத்துள்ள சின்னபாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 48). விவசாயியான இவருக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2018-ம் ஆண்டு அருகிலுள்ள கோட்டாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரிடம் கந்துவட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் ராமஜெயம். மாதம்தோறும் வட்டியைக் கட்டுவதற்கே படாத பாடு பட்டிருக்கிறார்.

Suicide Prevention (Representational Image)
Suicide Prevention (Representational Image)
Image by Daniel Reche from Pixabay
பட்டுக்கோட்டை: `சொத்தை வித்தாவது கடனை அடைச்சிருப்பேன்!’ - தற்கொலை செய்துகொண்ட தாய்; சோகத்தில் மகன்

இந்நிலையில், சூழ்நிலை காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட்டிப் பணம் கொடுக்க முடியாமல் போனது. இதனால், ரூ.1 லட்சம் கடனுக்கு அசலும் வட்டியும் சேர்த்து ரூ.7 லட்சம் கேட்டிருக்கிறார், அந்த கந்து வட்டிக்காரர். கடன் தொகைக்காக விவசாயம் செய்துவந்த 95 சென்ட் பூர்வீக நிலத்தை ராமஜெயத்திடமிருந்து மிரட்டி தன் பெயருக்குக் கிரயம் செய்துகொண்டாராம் கந்துவட்டிக்காரர்.

இதனால், மன உளைச்சலில் இருந்த விவசாயி ராமஜெயம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ராமஜெயத்தின் சடலத்துடன் செங்கம் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ``விவசாயி ராமஜெயத்தின் தற்கொலைக்குக் காரணமான கந்துவட்டி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி ராமஜெயம்
விவசாயி ராமஜெயம்

அவரிடமிருந்து நில உரிமைப் பத்திரத்தை மீட்டு ராமஜெயத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினரிடமே வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். சம்பவ பகுதிக்கு வந்த காவல்துறை உயரதிகாரிகள், கந்து வட்டி நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்களிடமிருந்து ராமஜெயத்தின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
அடுத்த கட்டுரைக்கு